×
Saravana Stores

2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா?

டெல்லி: மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கு எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வேறுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 140 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 140 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வித்தியாசம் 2 வாக்குகள் முதல் 3,811 வாக்குகள் வரை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மராட்டியத்தின் முன்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே ஷிண்டே சிவசேனா வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு பதிவானதை விட 2 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் புறநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 1,615 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 852 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன. பாஜக வேட்பாளர் 1884 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள கான்கெர் தொகுத்தியில் 950 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஃபருக்காபாத் தொகுதியில் 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில் 460 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது. அசாமின் பாஜக 18,360 வித்தியாசத்தில் வென்ற கரீம்கஞ்ச் தொகுதியில், 3,811 வாக்குகள் அதிகமான எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்குமான வித்தியாசம் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட குறைவாக இருப்பதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரப்படவில்லை. ஆனால் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தில் சுமார் 50% அளவுக்கு வாக்குகள் அதிகரித்து இருப்பது தேர்தல் நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி 140 தொகுதிகளில் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளனவோ அதேபோல பல தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொகுதியில் 16,791 வாக்குகள் குறைவாக எண்ணப்பட்டுள்ளன. கரூர் தொகுதியில் 8,056 வாக்குகளும் விழுப்புரம் தொகுதியில் 4,696 வாக்குகளும் குறைவாக எண்ணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலுமே பதிவான வாக்குகள் விட எண்ணப்பட்ட வாக்குகள் குறைவாக உள்ளன.

இந்நிலையில் பதிவான வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டு இருப்பது எப்படி? வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக உள்ள தொகுதிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் முன்வராதது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும் அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா? appeared first on Dinakaran.

Tags : 2024 elections ,Electoral Commission ,Delhi ,Lok Sabha elections ,2024 Lok Sabha elections ,Election Commission ,Dinakaran ,
× RELATED அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல்ஆணையம் ஆலோசனை..!!