×

பரங்கிப்பேட்டை அருகே பஸ் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

 

புவனகிரி, மே 26: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாயினர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை குத்தாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிரி (எ) தமிழ்வளவன் (21). இவரது நண்பர் கலைச்செல்வன் (21). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு குத்தாபாளையத்தில் இருந்து ஒரே பைக்கில் பரங்கிப்பேட்டைக்கு சென்றனர். பின்னர் அங்கு வேலை முடிந்து மீண்டும் பைக்கில் வீட்டிற்கு சென்றனர்.

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மீது பைக் மோதியது. இந் விபத்தில் படுகாயமடைந்த கிரி, கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதை பார்த்த அருகில் இருந்த குத்தாபாளையம் கிராம மக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் ஓடி வந்து அவர்களின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் திடீரென பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிராம மக்கள் சிலர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.

மேலும் போலீசாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சிலர் மீண்டும், மீண்டும் பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. பின்னர் போலீசார் சமாதானம் பேசியதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து விபத்துக்குள்ளான பைக் மற்றும் பஸ்சை போலீசார் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பரங்கிப்பேட்டை அருகே பஸ் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Parangipettai ,Bhubaneswar ,Giri (A) Tamilvalavan ,Barangippet Kuthapalayam ,Cuddalore district ,Barangippet ,
× RELATED பைக் -பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி