×

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) 4170 இடங்களுக்கு ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனத்தின் கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகின்றன. இவை தவிர 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 25 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கண்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டியதுள்ளது.

இந்த கல்வி ஆண்டுக்கான இடங்களைப் பொருத்தவரையில் 12 உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 24 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1450 இடங்களும் உள்ளன. அதேபோல, 12 அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனங்களில் 1050 இடங்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 440, 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 250 இடங்களும் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை இணையதளம் வழியில் நடத்தப்பட வேண்டியுள்ளது.

மேற்கண்ட பயிற்சிப் பள்ளிகளில் இணைய வழியில் சேர்க்கை நடத்தப்படும்போது இடங்கள் பூர்த்தி ஆகாமல் இருந்தால், அந்த இடங்களை அந்தந்த பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகளின் முதல்வர்களே உரிய காலத்துக்குள் சேர்க்கையை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஜூன் மாதம் வரையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அரசிடம் கருத்துருவை முன்வைத்துள்ளார்.

இக் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு, இதனை ஏற்று நடப்பு கல்வி ஆண்டில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மே 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். மே 31 முதல் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஜூன் 7ம் தேதி முதல் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஜூன் 14ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Principal Secretary ,School ,Education ,Kumaraguruparan ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்