தொழில்நகரான புதுவயலில் தீயணைப்பு நிலையம்: முதல்வருக்கு கோரிக்கை

காரைக்குடி, மே 16: காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூர் பகுதிகளில் 140க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆவுடையார்கோவில், ராமநாதபுரம், கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் அரவைக்கு கொண்டுவரப்படுகிறது. தினமும் 20 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் அரவைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு தினமும் 100 டன் வரை அரிசி உற்பத்தி செய்யும் ஆலைகள் முதல் 70 மற்றும் 20 டன் வரை உற்பத்தி செய்யும் சிறிய ஆலைகள் வரை உள்ளன. இங்கிருந்து அரிசி சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அரிசி விலை நிர்ணயம் செய்வதில் இப்பகுதி தமிழகத்தில் 2வது இடத்தில் உள்ளது. தொழில்நகராக உள்ள இப்பகுதியில் இதுவரை தீயணைப்பு நிலையம் இல்லை. தீ விபத்துகள் ஏற்பட்டால் 15 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள காரைக்குடியில் இருந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதிக்கு என தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என முதல்வருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், புதுவயல் பகுதிகளில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டாலோ, அசம்பாவிதம் நடந்தால் சுமார் 20 கிமீ மேல் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தான் தீயணைப்பு ஊர்தி வரவேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத் தொடரிலும் பேசியுள்ளேன். முதல்வர் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார், என்றார்.

The post தொழில்நகரான புதுவயலில் தீயணைப்பு நிலையம்: முதல்வருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: