தாசில்தார், துணை தாசில்தார் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவு

பண்ருட்டி, மே 16: கிராம உதவியாளர் பணி நியமன விவகாரத்தில் தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பகுதிகளில் 31 கிராம உதவியாளர்கள் பணிகளை நிரப்ப கடந்த 10.10.2022ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி, 14.1.2023ல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிய விபரம் கேட்டு, தகவல் உரிமை சட்டத்தில் பண்ருட்டி அடுத்த அழகப்பாசமுத்திரத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட நிர்வாகி தைரியலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மாநில தலைமை தகவல் ஆணையத்திலும் மனு கொடுத்தார். இது தொடர்பாக, கடந்த ஏப். 24ம் தேதி நடந்த மாநில தகவல் ஆணைய கூட்டத்தில் பண்ருட்டி தாலுகா அலுவலக பொது தகவல் அலுவலர் பாலமுருகனிடம் கேள்வி எழுப்பட்டது. அப்போது, கடந்த 14.1.2023ம் தேதி 31 கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கியதற்கான கோப்புகள் இல்லை. 22.4.2024ம் தேதி வரை தாலுகா அலுவலகத்தில், அப்போதைய தாசில்தார் ஒப்படைக்கவில்லை என தெரிவித்தார். இதையடுத்து கிராம உதவியாளர்கள் பணி நியமன ஆணைக்கான கோப்பு ஒப்படைக்காதது குறித்து, கடலூர் கலெக்டர் விரிவான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை தகவலை, மாநில தகவல் ஆணையத்தில் வரும் ஜூன் 20ம் தேதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மாநில தகவல் ஆணையத்தில் இதற்கான விசாரணை வரும் ஜூன் 25ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது, பண்ருட்டியில் தாசில்தாரராக பணியாற்றிய வெற்றிவேல், தலைமை இடத்து துணை தாசில்தாரராக பணியாற்றிய கிருஷ்ணா ஆகியோர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விசாரணையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாசில்தார், துணை தாசில்தார் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: