×

மலர்களோடு பூத்துக் குலுங்கும்

நன்றி குங்குமம் தோழி

*இங்கிலாந்து தமிழச்சியின் தோட்டம்

அட!! லண்டனில் கத்தரிக்காய், புடலங்காய், பாவக்காய், பச்சை மிளகாய், பீட்ரூட், நூட்கல், வெள்ளரி, அவரை, பேபிகார்ன் என நம்நாட்டு காய்கறிகள் விளைகிறதா? ஆச்சரியம்தானே. கயல்விழி வீட்டு லண்டன் தோட்டத்தில் நமது நாட்டுக் காய்கறிகள் மட்டுமல்ல… ஆப்பிள், செர்ரி, ஸ்டாபெர்ரி, ப்ளூபெர்ரி, கூஸ் பெர்ரி, பேரிக்காய், பிளம்ஸ், கிரேப்ஸ் என பழ மரங்களும் இருக்கின்றன. கூடவே நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான மலர் செடிகள், பல்வேறு வகையான வண்ண ரோஜாக்கள் என மலர்களோடும், இயற்கையோடும் தினம் தினம் பேசி உறவாடுகிறார் கயல்விழி.

இவரின் “இங்கிலாந்து தமிழச்சி” யு டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் இவரின் தோட்டத்தை பார்ப்பதற்கு வரும் வியூவர்ஸ் ரொம்பவே அதிகம். லண்டன் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே நிரந்தரமாய் வசிக்கும் கயல்விழியிடம் பேசியதில்…

உங்களைப் பற்றி சுருக்கமாக…

எனக்கு ஊர் திருவாரூர் மாவட்டம் பனங்குடி கிராமம். எம்.எஸ்.ஸி. பயோடெக்னாலஜி முடித்து பி.எட். படிச்சேன். எனது கணவர் ஏர் கிராஃப்ட் இன்ஜினியர். அவரின் பெற்றோரோடு குடும்பமாக இங்கிலாந்தில் வசித்ததால், திருமணத்திற்குப் பிறகு நானும் லண்டன்வாசியாக மாறிப்போனேன். எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவருமே இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நானும் பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியில் இருக்கிறேன்.

நமது காய்கறிகளை லண்டனில் வளர்ப்பது குறித்து?

ஆடி மாதம் தொடங்கி தை வரை அறுவடைக்கான அனைத்துக் காய்கறிகளையும் கிராமத்து தோட்டத்தில் அப்பா சூப்பராகப் போட்டு எடுப்பார். இந்த ஆர்வம்தான் என்னையும் லண்டனில் இயற்கை முறை தோட்டம்(organic) போடுவதற்கான ஆர்வத்தையே தூண்டியது. நமது நாட்டின் காய்கறிகளை லண்டனில் வளர்ப்பது ரொம்பவே கடினம். லண்டனில் அந்த அளவுக்கு கோடை மாதங்கள் இருக்காது.

கிடைக்கிற கொஞ்ச வெயிலை பயன்படுத்தி இன்டோரில் ஜனவரி, பிப்ரவரிக்குள் விதைத்து மே மாதத்தில் வானிலை 10 டிகிரிக்கு மேல் லேசாக கருணையோடு எட்டிப் பார்க்கும்போதுதான் செடிகளை வெளியில் கொண்டுவந்து பெரிய தொட்டிகளுக்கு மாற்றி வளர்ப்பேன்.இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரை நமது நாட்டுக் காய்கறிகளை ஏசியன் வெஜிடபிள் என்றுதான் அழைப்பார்கள்.

இரண்டு நாட்டிலும் தோட்டம் போடுவதற்கான வித்தியாசம்..?

இரண்டையும் கம்பேர் பண்ணவே முடியாது. தோட்டம் அமைக்கிறதுக்கு நம்ம ஊர் முறைகளை இங்கு பயன்படுத்தவே முடியாது. காய்கறிகளை எப்படி இங்கு விளைவிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே எனக்கு நீண்ட நாட்கள் எடுத்தது. ஏனெனில் நம்ம ஊர் தட்பவெப்ப நிலையும் லண்டன் நாட்டின் தட்பவெப்ப நிலையும் கம்பிளீட்லி டிஃப்ரென்ட். அத்துடன் பூச்சிகள் தொல்லை இங்கு அதிகம். நத்தை, அட்டை, கம்பளி பூச்சிகள் இலைகளில் ஒட்டிக்கொண்டு அதிகமாகவே செடிகளை பாழ்படுத்தும்.

நமது கிராமங்களில் கோழிகளை வளர்ப்போம். அவை மண்ணைக் கிளறி பூச்சிகளை சாப்பிடும். எனவே பூச்சித் தொல்லை குறைவாகவே அங்கு இருக்கும். இங்கு கோழி வளர்ப்பு போன்ற விஷயங்கள் இல்லையென்பதால் பூச்சித் தொல்லையில் இருந்து செடிகளைக் காப்பாற்ற நிறைய மெனக்கெட வேண்டியது இருக்கிறது. ஒரு சில மாதங்கள் நத்தை படை எடுக்கும். சில மாதங்கள் அனில் தொல்லை, நரித் தொல்லைகள் இருக்கும்.

இவை கிழங்குகளை சாப்பிடுவதற்கு அதிகமாக வரும். பிறகு வண்ணத்துப்பூச்சிகளின் படைபெயடுப்பு இருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் காலிஃபிளவர், முட்டைகோஸ் போன்ற செடிகளை ஆக்கிரமித்து, முட்டையிட்டு, அது அப்படியே கம்பளி பூச்சியாக மாறி, மொத்த செடியையும் வீணடிக்கும். செர்ரி பழத்தை உண்ண பாராகிட் பறவைகள் அதிகமாக வந்து என்ஜாய் செய்து பழங்களை உண்டுவிட்டுச் செல்லும்.

நீங்கள் வளர்க்கும் பழ மரங்கள் குறித்து…

ஸ்டாபெர்ரி, ப்ளூபெர்ரி, கூஸ் பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், பலவகையான பிளம்ஸ், கிரேப்ஸ் மரங்கள் என் தோட்டத்திலும் இருக்கிறது. இங்கு ஆப்பிள் மரங்கள் சுலபமாக வளரும். பெரும்பாலும் பழ மரங்களை நேரடியாக பூமியில் வைக்காமல் தொட்டிகளில் வைத்தே நான் வளர்க்கிறேன்.

ப்ளூபெர்ரி ஆன்டி ஆக்ஸிடென்ட் எனப்படும் அமிலத் தன்மை அதிகம் உள்ள மண்ணில் காய்க்கக்கூடிய ஒரு மரம். இந்த மரத்தை வளர்க்க தனி வகையான உரம் தேவை. ஆனால் ஸ்டாபெர்ரி மரத்தையும் வளர்ப்பது மிகமிக சுலபம். இதனை சின்னச் சின்ன தொட்டிகளில் வைத்தே வளர்த்தாலே விளைச்சல் சூப்பராகவே இருக்கும். அதேபோல் பலவகையான ஆப்பிள் மரங்கள் இங்கு இருக்கிறது. சமையல் செய்வதற்கு அதிக புளிப்புத் தன்மை கொண்ட ஆப்பிளும் இங்கு உண்டு. பேரிக்காயிலும் பலவகை இருக்கிறது.

கலர்ஃபுல்லான உங்கள் மலர் தோட்டம் குறித்து…

நமது ஊரில் மல்லிகை, கனகாம்பரப் பூக்களைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். லண்டனில் பூக்கும் பலவகையான மலர்களைப் பார்த்தே, மலர்களின் மீது அலாதி காதல் வந்தது. ஒரு பூச்செடியை வாங்கி வளர்க்கும் முன்பே அது குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்த பிறகே வளர்க்க ஆரம்பிப்பேன். அப்படியாக நான் சேகரித்ததுதான் என் தோட்டத்தில் உள்ள பல வண்ணப் பூக்கள்.

இங்கு பூக்கும் பூக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஒருசில வகை ஒரு வருடம் மட்டுமே பூக்கும் (annual plants). குறிப்பாக கிளிமெட்டிஸ், கிளாடியோலி போன்றவை ஒரு முறை மட்டும் பூக்கும் மலர்கள். ஜெரானியம், ஃபேன்ஸி, வயோலா இவையெல்லாம் ஒரு வருடத்தில் பூக்கும் மலர்கள். ஒரு சில பல முறை பூக்கும். சிலவகை பெரீனியல் செடிகள் (Perennial) ஒவ்வொரு ஆண்டும் பூக்கும். பெரீனியல் வின்டர் செடிகள் மைனஸ் 10, மைனஸ் 20 என வெதர் சென்றால்கூடத் தாங்கி நிற்கும். இதில் பெட்டூயூனியா எனக்கு மிகவும் பிடித்த மலர். கிழங்குகள் மூலம் வளரக்கூடிய டியூபர் பிளான்ட்ஸ்களான கிளாடியோலி(gladioli), டாலியா(dahlia) போன்றவையும் என்னிடம் உள்ளது.

என் தோட்டத்து பார்டெரிலே ஒரு ஆனுவல் பிளான்ட், ஒரு பெரீனியல் பிளான்ட், ஒரு டியூபர் பிளான்ட், அதற்கு பின்னால் செம்பருத்தி பூ, சூரியகாந்தி பூ என திட்டமிட்டு செடிகளை நட்டு வளர்ப்பேன். இதனால் வருடம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான மலர்கள் பல்வேறு வெரைட்டிகளில் நறுமணத்துடன் என் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும்.

உங்கள் ரோஜா தோட்டம் பார்க்க அழகாக இருக்கிறதே..?

என்னை ரோஜா லவ்வர் என்றே சொல்லலாம். லண்டன் வந்த புதிதில் எங்காவது வெளியில் செல்லும்போது நான் ஆசையாக ரசித்துப் பார்த்தது ரோஜா மலர்களைத்தான். சிலர் வீட்டு முன் தோட்டத்தில் வேலிக்காகவே ரோஜா மலர்களை அழகாக வைத்திருப்பார்கள். ஒருசில கொடி வகை ரோஜாக்கள் வீட்டின் மீது படர்ந்து அழகாக நம்மை பார்த்து கண் சிமிட்டும்! சிரிக்கும்! அவற்றைப் பார்த்தே ரோஜா செடிகளை வளர்க்கும் பேராவல் வந்தது.துவக்கத்தில் விரும்பிய கலர்களை எல்லாம் வாங்கி கன்னா பின்னாவென்று வைக்க ஆரம்பித்தேன். பிறகுதான் ரோஜா மலருக்கு பல தன்மைகள் இருக்கிறது. பல்வேறு விதத்தில் அவை பூக்கும் எனத் தெரிய வந்தது.

ரோஜாவில் கொடி வகை ரோஜா, புஸ் ரோஸ், ஒற்றை ரோஜா, ஒரு காம்பில் கொத்தாகப் பூக்கும் ரோஜா, 10 மீட்டர் வரை உயரத்தில் வளர்ந்து ஒற்றையாகப் பூக்கும் ரேம்ப்ளர் வகை ரோஜா, ஸ்டான்டெர்ட் ரோஸ் என நிறைய வகைகள் இருப்பதை அறிந்தேன். லோக்கல் ரோஜா செடிக்கும் பிரான்டெட் ரோஜா செடிக்கும் உள்ள வளர்ச்சியின் வித்தியாசங்களையும் செயல்முறையாக வளர்த்து தெரிந்துகொண்ட பிறகே ரோஜா மலர் தோட்டத்தை உருவாக்க ஆரம்பித்தேன்.

டேவிட் ஹாஸ்டின் என்கிற (david Austin) பிரான்டெட் வகை ரோஜா ஒன்றின் விலை மட்டுமே 3 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். எனது ரோஜா செடிகளின் கலெக் ஷனில் 500 ரூபாயில் தொடங்கி, 5000 ஆயிரம் ரூபாய்வரை உள்ள ரோஜா செடிகள் இருக்கிறது.

செடிகளுக்கு எந்த மாதிரியான உரங்களை பயன்படுத்துகிறீர்கள்?

இந்த நாட்டின் வளமான மண்ணைக் கெடுக்காமல், இயற்கையை பாதிக்காமல் எப்படி தோட்டக் கலையை வளர்ப்பது என்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும். இங்குள்ள Royal horticultural society மூலம் நமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். எனவே ரசாயனம் கலந்த உரங்களை இங்கு யாரும் பயன்படுத்துவதில்லை. மண்ணை வீணடிக்காமல் தோட்டம் அமைக்கவே எல்லோரும் முயற்சிப்பார்கள். நான் என் தோட்டத்தை முழுமையாக ஆர்கானிக் முறையில்தான் பராமரிக்கிறேன்.

ஹோர்ஸ்மேனியூர் (Horse Manure) எனப்படும் மக்கிய குதிரை சாணம் இங்கு அதிகமாக கிடைக்கும். அதுபோல கோழியின் கழிவுகளில் இருந்து தயாராகும் சிக்கன் பேலட்ஸ் (chicken pellets), போன் மீல், பிஸ் போன் மீல், பிஸ் பிளட் போன் மீல் என பலவகை இயற்கை உரங்கள் கிடைக்கும். கமீலியா, புளூ பெர்ரி போன்ற ஆசிட் லவ்விங் பிளான்ட்ஸ் வளர எரிகேஸியஸ் சாயிலும் (ericaceous) கிடைக்கும்.

அதேபோல் கழிவுப் பொருட்களை யாரும் இங்கு அப்படியே தூக்கி நிலத்தில் எறிய முடியாது. மெட்டல், பிளாஸ்டிக், க்ளாஸ் எனப் பிரித்து ரீசைக்கிளிங் செய்ய மூன்றுவிதமான பாக்ஸ்களை அரசாங்கம் கொடுக்கும். தவறினால் அபராதம்தான். ஃபுட் வேஸ்டுகளை கன்டெய்னரில் கொட்டி மக்கிய பிறகு உரமாக்கிவிடுவோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மலர்களோடு பூத்துக் குலுங்கும் appeared first on Dinakaran.

Tags : England ,Tamilachi ,London ,Kayalvizhi ,
× RELATED 37,000 அடி உயரத்தில் பறந்த போது விமானம்...