×

மூங்கில் கொண்டு உங்க வீட்டுச் சமையல் அறையை அலங்கரிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

மூங்கில் ஒரு சாதாரண புல் வகையை சார்ந்த தாவரம் என்பது நம்ம அனைவருக்கும் நன்றாகத் தெரியும். புல்லாங்குழல், கூடைகள், பிரம்புகள் செய்ய பயன்படுத்தப்படும் இந்த
மூங்கில்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்….? மூங்கில் அரிசி மற்றும் அதன் குறுத்துக்களை ஒரு சிலரே தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதன் இலைகளில் இருக்கும் சத்துகள் அதிகம். மேலும் இதனை நாம் அதிகம் பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார் மதுரை ‘அரோலா’ ஸ்டோரின் இணை நிறுவனர் தர்ஷனா சுதாகர்.

‘‘எங்களின் முக்கிய நோக்கம், பசுமை சார்ந்த ஒரு பொருளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான். அதுமட்டுமில்லாமல், நாங்க செய்யும் தொழில் பெண்கள் மற்றும் மலை வாழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவது போலும் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் எங்களின் அரோலா’’ என பேசத் துவங்கிய தர்ஷனா மூங்கிலை தங்களுடைய மூலப்பொருளாக தேர்ந்தெடுத்த காரணத்தையும் விளக்குகிறார்.

‘‘நாங்கள் இதை ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பயன்பாடாகத்தான் உருவாக்கியுள்ளோம் என பலரும் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக்கிற்கு மாற்றாக இது இருந்தாலும், இயற்கையான ஒரு வாழ்வியலில் மக்கள் வாழ வேண்டும் மற்றும் இந்த வேலையினால் பல மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதும்தான். அதுமட்டுமில்லாமல், நம் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் மிகவும் சுலபமாக மக்கும் தன்மை உடைய ஒரு பொருளை உருவாக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

நான் எம்.பி.ஏ பட்டதாரி. நானும் என் கணவர் இருவரும் இணைந்து 2011ல் இருந்து ஈகோ – டூரிசம் என்ற டூரிஸ்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறோம். அப்போதிருந்தே காடுகள், மலைகள், மலைவாழ் மக்கள் என எங்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைக்கப்பட்டிருந்தது. கொரோனா காலக்கட்டத்தில், டூரிஸத்தை சரி வர இயக்க முடியாமல் போனது. அந்தக் காலக்கட்டத்தில்தான் மூங்கில் செடி குறித்த ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தோம்.

காரணம், மூங்கில் இலைகளுக்கு எலும்புகளை வலுவாக்கும் தன்மையுண்டு. அதற்கு கொரோனா காலமும் எங்களின் ஆய்விற்கான நேரத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. மூங்கிலை வைத்து, இயற்கையான முறையில் என்னென்ன பொருட்களை தயாரிக்கலாம் என திட்டமிட ஆரம்பித்து, அதற்கு ஏற்ப செயல்படுத்தவும் துவங்கினோம். எங்களின் ஆரம்பமே மூங்கில் இலை தேனீர்தான்.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்கென சில கைவினைப் பொருட்களையும் தயாரிக்க துவங்கினோம். இதை பார்த்து எங்க அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சென்றார்கள். அவர்கள் மூலமாக பலரும் கேட்க ஆரம்பித்தார்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். அதன் பிறகு இதை ஒரு தொழிலாக முறையாக துவங்க முடிவு செய்தோம்.

எங்களிடம் மூங்கில் இலை தேனீர், மூங்கிலாலான டூத் பிரஷ், டீ கோப்பைகள், தண்ணீர் குவளைகள், புட்டு அவிக்கும் பாத்திரம் என வீட்டில் பயன்படுத்தும் அனைத்து சாமான்கள் முதல் ஒரு நிறுவனத்தில் மேஜையை அலங்கரிக்கும் பொருட்கள் வரை தயாரிக்க துவங்கினோம். இதற்கு தேவையான மூங்கில் அனைத்தும், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தான் கொண்டு வருகிறோம். தற்போது மூங்கிலை பயன்படுத்தி 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறோம். மேலும் தென் மாவட்டங்கலில் மூங்கிலுக்கென பிரத்யேகமான உற்பத்தியாளர்களில் ஒருவராக நாங்க இருக்கிறோம்’’ என்றவர், இதனை உற்பத்தி செய்ய உதவும் பெண்கள் குறித்து விளக்கினார்.

‘‘இங்கிருக்கும் அனைத்து மூங்கில் பொருட்களும், அருகில் உள்ள கிராமத்து பெண்கள், சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கொண்டுதான் தயாரிக்கிறோம். ஒரு மாதம் வீதம் இந்தப் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி கொடுத்து, அதிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்வோம்.

இதற்கான பயிற்சியினை ரூட்ஷெட் என்னும் அமைப்பு மூலம் வழங்க நாங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த பயிற்சி பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்குவதால், அவர்கள் எதிர்காலத்தில் இதனை ஒரு தொழிலாகவும் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். இதன் மூலம் அவர்களும் ஒரு தொழில் முனைவோராக மாற வாய்ப்புள்ளது. இதுவரை ஐந்து பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு குழுவிலும் 26 முதல் 30 நபர்கள் வரை உறுப்பினராக இருப்பார்கள். அவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை தயாரித்து தருவார்கள். அந்தப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும் படி ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். அந்த வருமானம், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்க ஏற்கனவே டூரிஸம் நிறுவனம் நடத்தி வந்ததால், மலைவாழ் மக்களுடனும் எங்களுக்கு நல்ல உறவு முறை உள்ளது. மூங்கில் பறிக்க அவர்களும் எங்களுக்கு உதவி செய்வாங்க.

மூங்கிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், ஒரு சில தின் இலைகள் மட்டுமே தேனீர் தயாரிக்க பயன்படுகிறது. அதனை தேர்ந்தெடுத்து இலைகளை வெட்டிக் கொடுப்பார்கள். அதற்கான தனிப்பட்ட வருமானமும் அவர்களுக்கு கொடுத்திடுவோம். மேலும் சில கைவினைப் பொருட்களும் எங்களுக்காக செய்து கொடுக்கிறார்கள். கிராமத்தில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு தினக்கூலியாக வாரம் சம்பளமாக கொடுப்பதால், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

கைவினைப் பொருட்களை பெண்களும், மூங்கிலை குடைந்து அதில் டிசைன் போடுவதெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் வீட்டில் இருந்தபடியே சில கைவினைப் பொருட்களை தயாரித்து கொடுக்கிறார்கள். ஒரு பொருளை செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரமாகும். மூங்கிலை சுத்தப்படுத்தி, வெட்டி வெந்நீரில் போட்டு என அதனை பக்குவப்படுத்தவே 10 நாட்கள் தேவைப்படும். அதன் பிறகு அதில் நமக்கு விருப்பமான பொருட்களை தயாரிக்கலாம். அவ்வாறு உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் அதன் இயற்கை தன்மை மாறாமல் இருப்பது தான் சிறப்பம்சம். மூங்கிலை எந்த ரசாயனம் கொண்டும் சுத்தப்படுத்துவதில்லை.

கடுக்காய் பயன்படுத்திதான் சுத்தம் செய்கிறோம். முழுக்க முழுக்க மூங்கில் மட்டுமே பயன்படுத்தி சாதாரண டீ குடிக்கும் கோப்பைகள், அதனை வைக்க பயன்படும் க்ரோசெட், வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கும் சிலைகள், பரிசுப் பொருட்கள் என ரூ.25ல் இருந்து எங்களிடம் பொருட்கள் விற்பனையில் உள்ளது. மேலும் கார்ப்பரேட் கிஃப்ட் பொருட்களில் அந்தந்த நிறுவனம் பெயர்களை பதிவு செய்தும் தருகிறோம்’’ என்ற தர்ஷனா இதனை சுத்தப்படுத்தும் முறையினையும் விளக்கினார்.

‘‘மூங்கிலாலான வாட்டர் பாட்டில், டீ கோப்பைகளை சோப்பு கொண்டு கழுவி, உப்புக்கல் மற்றும் வெந்நீர் சேர்த்து கழுவி, சூரிய ஒளியில் காய வைத்தால் போதும். மூங்கில் கோப்பையில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்குள் குடிக்கவில்லை என்றால் அது மூங்கிலின் இயற்கை தன்மையால் குளுகோஸ் தண்ணீராக மாறிவிடும். இரண்டு நாட்களாகியும், மூங்கில் பாட்டிலில் உள்ள தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்தால் அதில் இருந்து ஒருவித வாடை வெளியாகும். மேலும் பாட்டிலின் மேற்புறத்தில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.

அவ்வாறு மாற்றம் தென்பட்டால், நன்கு சோப்பு கொண்டு கழுவி, உப்பு கல் மற்றும் வெந்நீர் போட்டு கழுவி, சூரிய ஒளியில் காய வைத்து பயன்படுத்தலாம். தற்போது ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை மக்கள் தங்களால் முடிந்த அளவு குறைத்து வருவதோடு, இயற்கை சார்ந்த பொருட்களோடு வாழ ஆரம்பித்துள்ளனர். இங்கு அதிகமாக சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களை தான் பல அளவுகளில் தயாரிக்கிறோம். மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களுக்கு ஏற்ப பொருட்களையும் தயாரித்து தருகிறோம்.

பெண் எப்போதும் ஒரு ஆணை சார்ந்து தான் இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு அப்பா, அண்ணா, திருமணத்திற்கு பிறகு கணவர். அவர்களால் குடும்பத்தின் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாவிடினும், தன்னுடைய தேவையை மட்டுமே பார்த்துக்கொள்ள ஏதேனும் ஒரு கைத்தொழில் தெரிந்து கொள்வது அவசியம். இதன் காரணமாகத்தான்,
இங்குள்ள பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம்’’ என புன்னகையுடன் கூறினார் தர்ஷனா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post மூங்கில் கொண்டு உங்க வீட்டுச் சமையல் அறையை அலங்கரிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : kumkum Dohi ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்