×

கோடையும் தலைமுடி பராமரிப்பும்!

நன்றி குங்குமம் தோழி

அக்னி நட்சத்திரம்‌ துவங்கியாச்சு. பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், கோடையின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. மண்டையை பிளக்கும் வெயிலில் வெளியே செல்லவே பயமாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்கள் அதைக் காரணம் காட்ட வீட்டில் ஹாலிடேவினை கொண்டாட முடியாது. பல பாதுகாப்புகளுடன் வெளியே சென்று வந்தாலும், நம்முடைய சருமம் பொலிவிழந்து தலைமுடி வறண்டு காணப்படுகிறது. இதனால் தலைமுடியில்‌ உள்ள ஈரப்பதம் குறையும். விளைவு முடி உடைந்து அதிகமாக உதிரும். மறுபக்கம் சருமமும் வெயிலினால் கருமையாக மாறி பொலிவிழந்து காணப்படும். இந்த வெயிலில் தலைமுடி மற்றும் சருமத்தினை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று விவரிக்கிறார் சிகை அலங்கார நிபுணர் ஹரி.

“வெயில்‌ காலத்தில்‌ நாம்‌ முக்கியமாக கவனத்‌தில்‌ கொள்ள வேண்டியது சருமமும்‌ தலைமுடியும்தான்‌. கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், நம்முடைய சுற்றுப்புறச்சூழல்‌ மிகவும்‌ வறண்டு காணப்படும். அது நம்‌ சருமத்தையும்‌ தலைமுடியையும்‌ பாதிக்‌கும்‌. சுற்றுப்புறச் சூழலில்‌ இருக்கும்‌ தூசி மற்றும் மாசு சருமம் மற்றும் தலைமுடியில் படியும்‌ வாய்ப்பு அதிகம்‌. அதனால்‌ எப்போது வெளியே சென்றாலும் தலைமுடி மற்றும் முகத்தை மறைத்துக் கொள்வது அவசியம். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். முகத்தையும் துணி கொண்டு மூடியபடி செல்லலாம்.

சாலையில்‌ நடந்து செல்பவர்கள் என்றால் கண்டிப்பாக கையில் குடை எடுத்து செல்ல வேண்டும். இப்போது சாலையில் நடந்து செல்லும் பெண்களும் முகத்தை தங்களின் துப்பட்டா கொண்டு மறைத்து செல்கிறார்கள். அவ்வாறும் செல்லலாம்.என்னதான் நாம் இது போல் முகத்தை மூடிக் கொண்டு சென்றாலும், வெயிலின் பாதிப்பால் சருமம் கருமையாக மாறுவதை நம்மால் தடுக்க முடியாது. சருமம் அதிக அளவு கருமையாக மாறுவதை தடுக்க, சன்‌ ஸ்கிரீன்‌ மாய்சரைசர்‌ பயன்படுத்தலாம்‌. இது வெயிலினால்‌ ஏற்படும்‌ ௧ருமையை தடுக்கும்‌. இந்த சன்‌ ஸ்கிரீன்‌ லோஷன்‌ நான்கு மணி நேரங்கள்தான்‌ வேலை செய்யும்‌. எனவே, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை அதைத்‌ தடவிக்‌ கொள்ள வேண்டும்‌.

தற்போது விற்பனையில் இருக்கும் சன்‌ஸ்கிரீன்‌ லோஷன்‌, மாய்சரைசர்‌ உடன்‌ சேர்ந்து வருகிறது. இது சருமத்தில்‌ ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன்‌ கருமையாகாமலும்‌ பாதுகாக்கும்‌. சன்‌ஸ்கிரீன்‌ லோஷன்‌ பயன்படுத்தும்‌ போது அதிக அளவு மேக்கப்‌ போடுவதை தவிர்க்க வேண்‌டும்‌. அதே சமயம்‌ முகத்தில்‌ போடும்‌ சன்‌ஸ்கிரீன்‌ லோஷனை உடம்பில்‌ தடவக்‌ கூடாது. உடலுக்கு என்று தனி கிரீம்‌ உண்டு. இது உடல்‌ சருமத்துக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதால், அதனை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. அதை உடலுக்கு மட்டும்தான் தடவ வேண்டும். மேலும் உடம்‌பிற்காக பயன்படுத்தப்படும் கிரீமையும் முகத்திற்கு பூசிக் கொள்ளக்‌கூடாது. இதனால் முகத்தில் பிக்மென்டேஷன்‌ ஏற்பட வாய்ப்புள்ளது.

சன்ஸ்கிரீனை முகத்தில்‌ பயன்படுத்தினால்‌ மட்டும்‌ போதாது. சருமத்தில்‌ எப்போதும்‌ ஈரப்பதம்‌ இருக்கவும்‌, ரத்த ஓட்டம்‌ சீராகி பொலிவுடன்‌ காட்‌சித்‌ தரவும்‌ மாதம்‌ ஒருமுறை ஃபேஷியல்‌ செய்து கொள்வது அவசியம்‌. ஃபுரூட்‌, ஹெர்பல்‌, பேர்ல்‌, சாக்லெட்‌ என ஃபேஷியலில்‌ பல வகைகள்‌ உண்டு. பொதுவாக ஃபேஷியல்‌ செய்யும்‌ போது பிளீச்சும் செய்வது வழக்கம். கோடையில்‌ பிளீச் செய்வதை தவிர்த்து ஃபேஷியலுடன்‌ மட்டும்‌ செய்து கொண்டால் போதும். வெயில் காலம் மட்டுமில்லாமல் மற்ற காலங்களிலும் தொடர்ந்து மாதம்‌ ஒருமுறை ஃபேஷியல்‌ செய்து வந்தால்‌ முகத்தில்‌ உள்ள கரும்புள்ளி, கண்களுக்கு கீழ்‌ கருவளையங்கள்‌, முகச்‌ சுருக்கங்கள்‌ வராமல்‌ பாதுகாக்க முடியும்‌.

முகத்தை பொலிவாக வைத்துக்‌ கொள்வது போல்‌ கை மற்றும்‌ கால்‌ விரல்களையும்‌ ஃப்ரெஷ்ஷா வைத்துக்‌ கொள்வது மிகவும் முக்கியம். விரல்‌ நகங்கள்‌ ஆரோக்‌கியமாக இருந்தால்‌தான், நம்முடைய உடலும்‌ ஆரோக்கியமாக இருக்கும்‌. பெண்களின்‌ நீண்ட விரலுக்கு அழகு சேர்க்கும்‌ நகங்களை நல்ல முறையில்‌ சுத்தம்‌ செய்து நகப்பூச்சு பூசினால்‌ பார்க்க அழகாக இருக்கும்‌. மாதம்‌ ஒரு முறை கைகளுக்கு மெனிக்கியூர்‌, கால்‌ பாதங்களுக்கு பெடிக்கியூர்‌ செய்யலாம்‌. கால்‌ மற்றும்‌ கை விரல்களில்‌ உள்ள நகங்களை சீராக வெட்டி, ஸ்கிரப்பர்‌, கிரீம்‌ கொண்டு சருமத்தில்‌ உள்ள டெட்‌ செல்களை அகற்றுவார்கள்‌. பிறகு கிரீம்‌ கொண்டு மசாஜ்‌ செய்வார்கள்‌. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்‌…”
என்றவர், தலைமுடி பராமரிக்கும்‌ விதம்‌ குறித்தும்‌, கோடைக்‌ கால சிகை அலங்காரம்‌ பற்றியும்‌ விளக்கினார்‌.

“தலைமுடிக்கு எண்ணெய்‌ வைப்பது நம்‌முடைய பாரம்பரிய வழக்கம்‌. அதிகளவு எண்ணெய்‌ தடவினால்‌ தலையில்‌ பொடுகு பிரச்னை ஏற்படும்‌ என்பதை பலரும்‌ மறந்து விடுகிறார்கள்‌. இயற்கையாகவே தலையில்‌ சீரம்‌ என்ற எண்ணெய்‌ சுரக்கும். தலை குளித்து இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தடவாமல் இருந்தால், தலைமுடியில் எண்ணெய் தடவின உணர்வினை ஏற்படுத்தும். அதுதான் தலையில் இருந்து சுரக்கும் சீரம். இதுவும் எண்ணெய் என்பதால் நாம் தினசரி தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே தலைமுடியில் சுரக்கும் எண்ணெயுடன் நாம்‌ மற்ற எண்ணெய்களை சேர்க்கும் போது, தலைமுடி மேலும் பிசுபிசுப்பாகும்‌.

இதனால் காற்றில்‌ உள்ள தூசுகள்‌ நம்‌ தலையில்‌ ஒட்டிக்‌ கொள்ளும். அவை நாளடைவில்‌ பொடுகாக மாறும்‌. எனவே, தலைக்கு அதிகப்படியாக எண்ணெய்‌ தடவ வேண்டாம்‌.
கோடை காலத்தில்‌ வெளியே செல்லும்‌ போது அவசியம்‌ தலை முடியை மூடிக்‌கொள்ள வேண்டும்‌. வாரத்துக்கு மூன்று முறை வெதுவெதுப்பான எண்ணெயால்‌ மசாஜ்‌ செய்து, இரண்டு மணி நேரம்‌ கழித்து குளிக்கலாம்‌. தலை குளித்த பின்‌ தவறாமல்‌ கண்டிஷ்னர்‌ பயன்படுத்த வேண்டும்‌. வெயில்‌ காலத்தில்‌ முடியை சின்னதாக வெட்டிக்‌ கொள்வதுதான்‌ ஃபேஷன்‌. அதை விரும்பாதவர்கள்‌ மல்டி லேயர்‌ கட்டிங்‌ செய்யலாம்‌. இது முடியை அடுக்கடுக்காக எடுத்துக்‌காட்டும்‌. குதிரைவால்‌ போட்டாலும்‌ அழகாக இருக்கும்‌.

பொதுவாக முக அமைப்புக்கு ஏற்பதான்‌ சிகை அலங்காரமும்‌ செய்யவேண்டும். வட்டம்‌, சதுரம்‌ என எந்த வகை முக அமைப்பாக இருந்தாலும்‌, அதனை ஓவல்‌ அமைப்புக்கு ஏற்ப மாற்றி அமைத்து அதன் பிறகுதான் சிகை அலங்காரம் செய்வது வழக்கம். தற்போது முடிகளை கலரிங்‌ செய்து கொள்கிறார்கள். தலைமுடி முழுதும் செய்ய விருப்பமில்லாதவர்கள், ஒரு சில முடிகள் அல்லது முடியின் நுனிப்பகுதி போன்றவற்றில் மட்டுமே கலரிங் செய்கிறார்கள். கலரிங்‌ செய்த பிறகு மிக மிக கவனமாக தலைமுடியினை பராமரிப்பது அவசியம். கலரிங்‌ செய்யும்‌ போது ரசாயனங்கள்‌ முடியில்‌ சேர்வதால்‌, முடியை வறண்டு போகாமல்‌ ஈரப்பதம்‌ இருப்பது போல்‌ பார்த்துக்‌ கொள்வது அவசியம்‌” என்று ஆலோசனை வழங்கினார்‌ சிகை அலங்கார நிபுணர்‌ ஹரி.

தொகுப்பு: நிஷா

The post கோடையும் தலைமுடி பராமரிப்பும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Agni ,
× RELATED தகவல் தொழில்நுட்ப வல்லுநர் to தொழிலதிபர்!