×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

57. (Shaashvataaya namaha) சாச்வதாய நமஹ

பதினெட்டு நாட்கள் மகாபாரத யுத்தம் நிறைவடைந்த பின், அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரை அணுகிய தர்மராஜன், தனக்கு உலகிலேயே மிகச் சிறந்த தர்மங்களை உபதேசிக்கும்படிப் பிரார்த்தித்தார். பீஷ்மர் அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்ததோடு மட்டுமில்லாமல், பற்பல நீதிக்கதைகளையும் கூறினார். அப்படி அவர் கூறிய பல கதைகளுள் இதுவும் ஒன்று.

சமுத்திரராஜனின் மகளாகப் பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, திருமாலுக்கு மாலையிட்டு அவரது திருமார்பிலும் ஏறி அமர்ந்துகொண்டாள். இதனால் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆகிவிட்டார். அதனால் அவருக்குக் கிடைத்த மரியாதைகளைக் கண்டு வியந்துபோன பிருகு முனிவர், சமுத்திரராஜனைப் போலத் தானும் திருமாலுக்கு மாமனார் ஆக வேண்டும் என விழைந்தார். மகாலட்சுமியிடம், “சமுத்திர ராஜனுக்கு நீ மகளாக அவதரித்தது போல எனக்கும் மகளாக வர வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்ற மகாலட்சுமி, பிருகு முனிவருக்கும் அவரது மனைவியான கியாதிக்கும் மகளாக அவதரித்தாள். பார்கவி என்று அவளுக்குத் திருநாமம் சூட்டினார் பிருகு.
திருமால் வந்து பார்கவியைத் திருமணம் செய்துகொண்டு பிருகுவுக்கு மருமகன் ஆனார். பின் பார்கவியை அழைத்துக் கொண்டு வைகுந்தத்துக்குத் திருமால் புறப்பட்டார். அப்போது தன் தந்தையைக் கௌரவிக்கும் விதமாக ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்து, அதில் பொன்நிறமான கோட்டையும் அவருக்குக் கட்டிக் கொடுத்தாள் பார்கவி. கோட்டையின் சாவியை பிருகு முனிவரிடம் தந்தாள்.

சில காலம் கழித்து மகாலட்சுமி அந்தக் கோட்டைக்குச் செல்ல விரும்பி, பிருகுவிடம் சாவியைத் தருமாறு கேட்டாள். ஆனால், “தந்தைக்குப் பரிசாகத் தந்த பொருளை நீ எப்படி திரும்பக் கேட்கலாம்?” என்று கேட்ட பிருகு சாவியைத் தர மறுத்துவிட்டார். இச்செய்தியைக் கேள்வியுற்ற திருமால், பிருகுவிடம் வந்து அவருக்கு அறிவுரை கூறினார். ஆனால் திருமால் மீது கோபம்கொண்ட பிருகு மகரிஷி, “தேவாதி தேவனாக நீ இருப்பதால்தான் என்னைப் போன்ற மனிதனின் எண்ணங்களும் துன்பங்களும் உனக்குப் புரிவதில்லை. நீயும் எங்களைப் போல பூமியில் பல பிறவிகள் பிறந்து, நாங்கள் படும் துன்பங்களை நீயும் அனுபவிக்க வேண்டும்!” என்று திருமாலுக்கே சாபம் கொடுத்தார்.

பிரம்மதேவரிடம் சென்ற திருமால், “உங்களது மானசீக புத்திரரான பிருகு மகரிஷி நான் பரம்பொருளாக இருப்பதால்தான் சாதாரண மனிதர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதனால் நான் சாதாரண மனிதனைப் போல் பூமியில் பிறந்து துன்பப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். எனவே நான் உலகைப் படைக்கும் பொறுப்பை உங்களிடமும் அழிக்கும் பொறுப்பைப் பரமசிவனிடமும் அளித்துவிட்டு, என் மாமனாரின் வீடான பாற்கடலில் ஓய்வெடுக்கச் செல்கிறேன். நீங்கள் எப்போதெல்லாம் பூமியில் பிறக்கச் சொல்கிறீர்களோ அப்போதெல்லாம் நானும் பிறப்பேன்!” என்றார்.

அதைக் கேட்ட பிரம்மா, “எம்பெருமானே! இப்படி ஒரு நாடகத்தை நீ நிகழ்த்தலாமா? உலகை நான் படைப்பது போலவும், சிவன் அழிப்பது போலவும் தோன்றினாலும் உண்மையில் எங்களையும் இயக்கி இச்செயல்களைச் செய்விப்பவன் நீயன்றோ! ஆனால் நீ ஒரு லீலை செய்யத் திருவுள்ளம் பற்றிய பின் அதை எங்களால் மாற்ற இயலாது. எனவே நீ பாற்கடலில் ஓய்வெடுத்துக்கொள். உன்னருளால் நான் படைப்புத் தொழிலைச் செய்கிறேன். நாங்கள் துன்பப்படும் போதெல்லாம் உன்னை அண்டிப் பூமியில் பிறக்குமாறு பிரார்த்திக்கிறோம்!” என்று கூறினார்.

இவ்வரலாற்றைத் தர்மராஜனுக்குச் சொன்ன பீஷ்மர், “மனிதனைப் போலப் பிறந்து துன்பப்படவேண்டும் என்று பிருகு தந்த சாபத்தை ஏற்று, பிரம்மாதி தேவர்கள் பாற்கடலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் திருமால் பூமியில் அவதாரம் செய்கிறார்!” என்று சொல்லி முடித்தார்.

தர்மராஜன் பீஷ்மரிடம், “பாட்டனாரே! பிருகுவின் சாபம் பரமாத்மாவான திருமாலை எப்படி பாதிக்கும்? அவர் ஏன் அந்த சாபத்தை ஏற்றுக் கொண்டு பிறக்க வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு பீஷ்மர், “சர்வேசுவரனை ஒரு ஜீவனின் சாபம் எதுவும் செய்யாது. எனினும், தன் பக்தர்களிடம் தோற்பதில் ஆனந்தம் கொள்கிறார் திருமால். பிருகு மகரிஷி திருமாலிடமே கோபம்கொண்டாலும், அவர் சிறந்த பக்தராவார்.

அந்த பக்தனின் வாக்கு பொய்யாகிவிட்டது என்ற பேச்சு உலகில் வருவதைத் திருமால் விரும்புவதில்லை. எனவே பிருகுவின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, திருமால் பலப்பல அவதாரங்கள் எடுத்து பூமியில் பிறந்து அடியார்களையும் தர்மத்தையும் காத்துக் கொண்டேயிருக்கிறார். இத்தகைய அவதாரங்களை நீரோட்டம் போலத் தொடர்ந்து எடுத்துக் கொண்டேவருவதால் திருமால் ‘சாச்வத:’ என்றழைக்கப்படுகிறார்!” என்று விடையளித்தார்.

அந்த ‘சாச்வத:’ என்பதுதான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 57-வது திருநாமமாக அமைந்துள்ளது. பிறப்பில் பல்பிறவிப் பெருமானை வணங்கி “சாச்வதாய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், நம்முடைய வார்த்தைகளையும் திருமால் மெய்ப்பிப்பார்.

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள் appeared first on Dinakaran.

Tags : Mahabharata ,Dharmarajan ,Bishmar ,Ambu ,VISHNU SAHASRANAM ,Anantan ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்