வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன்பு 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி, சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது, அட்வகேட் ஜெனரல், சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதில் 17, 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால் தான் முறையாக இருக்கும் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

The post வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: