ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு விண்ணப்பதாரர் முகவரியை மட்டுமே கொடுக்க வேண்டும்: போக்குவரத்து துறை ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 91 ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் 45 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் வரும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று ஆகியவற்றை பொதுமக்கள் நேரில் வந்து பெறுவதை தவிர்க்கும் விதமாக இந்திய தபால் துறையுடன் இணைந்து விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணி கடந்த பிப்.28ம் தேதி துவக்கப்பட்டது. இதன் மூலம் மார்ச் மாதம் மட்டுமே 2,51,501 சான்றுகள் அனுப்பப்பட்டதில் 2,48,986 சான்றுகள் (99சதவீதம்) உரிய நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1சதவீத சான்றிதழ்கள் மட்டுமே உரிய நபர்களுக்கு சென்றடையவில்லை. இதற்கு முக்கிய காரணம் தொடர்புடைய நபர்கள் விண்ணப்பத்தில் முகவரியை சரியாக குறிப்பிடாததும், ஓட்டுநர் பள்ளிகளின் முகவரி, தொடர்பில்லாத நபர்களின் முகவரியை கொடுத்திருப்பதும் ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்களது முகவரியை தெளிவாக குறிப்பிடும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குரிய சான்று குறிப்பிட்ட முகவரிக்கு அவரிடமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரிடமோ வழங்கப்பட இயலும். மாறாக, தொடர்பில்லாத முகவரியை அளித்தால் அந்த தபால் சென்றடையாத நிலை ஏற்பட்டு மீண்டும் ஆர்டிஓ அல்லது பகுதி அலுவலகங்களுக்கு திரும்பிவிடும்.

அவற்றை மீண்டும் அனுப்ப இயலாது. அத்தகைய நேர்வுகளில் தொடர்புடைய நபர் உரிய தபால் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை அலுவலகத்தில் ஒப்படைத்தால் மட்டுமே உரிய சான்று மீண்டும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் நேரடியாக வழங்கப்படாது. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட உரிய தபால் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறை மூலமாக தபாலில் மட்டுமே திருப்பி அனுப்பப்படும். எனவே பொதுமக்கள் தங்களது சரியான முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு விண்ணப்பதாரர் முகவரியை மட்டுமே கொடுக்க வேண்டும்: போக்குவரத்து துறை ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: