ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகை சீட்டுகளையும் முழுமையாக ஒப்பிட்டு எண்ணி பார்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சந்தேகங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று எழுப்பினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தேர்தலின் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேற்கண்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், சங்கர் நாராயணன் ஆகியோர் வாதத்தில், \\”வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்பதை எங்களது தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் அதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. கேரளாவில் ஒரு தொகுதியில் நடந்த மாதிரி ஓட்டெடுப்பில், பாஜவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் எது நடந்தாலும் தேர்தல் ஆணையம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்கிறது என்பது வெறும் பயம் மட்டும் தானே தவிர மற்ற எதுவும் கிடையாது. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே கிடையாது. இதில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடந்தால் அது வாக்காளர்களின் தனியுரிமை என்பது பாதிக்கப்படும். இருப்பினும் அதற்காக பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கு போக முடியாது. அது பிற்போக்குத்தனமாக அமைந்து விடும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18ம் தேதி ஒத்தி வைத்திருந்தனர். மேற்கண்ட வழக்கை நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர், வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான விவகாரத்தில் எங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. அதனை முதலில் தெரிவிக்கிறோம் என கூறினர்.

நீதிபதிகள் எழுப்பிய சந்தேகத்தில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டு கருவி(மைக்ரோ கன்ட்ரோலர்) இவைகளுக்கு இடையே இருக்கும் மெமரி சிப்களின் விவரங்கள் என்னென்ன?. அது ஒரு முறை புரோகிராமா? அல்லது பலமுறை பயன்படுத்தக் கூடிய புரோகிராம் வகையை சார்ந்ததா? மேலும் இதில் பதிவு செய்யப்படும் மெமரியை மேலும் பல நாட்கள் சேகரிக்கும் வசதி இயந்திரங்களில் உள்ளதா? வாக்குப்பதிவு இயந்திரம் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீல் வைக்கப்படுமா?. அல்லது தனித்தனியாக வைக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் பொருத்தப்பட்டு இருக்குமா அல்லது விவிபேட்டில் பொருத்தி இருப்பீர்களா? சின்னங்களை விவிபேட்டில் பதிவேற்ற எத்தனை இயந்திரங்கள் உள்ளன?

இதைத்தவிர தேர்தல் மனுக்களுக்கான வரம்பு 30 நாட்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தரவு 45 நாட்களுக்கு சேமிக்கப்படுகிறது. எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வரம்பு காலம் 45 நாட்கள் மட்டுமே ஆகும். எனவே சேமிப்பிற்கான காலத்தை அதற்கேற்ப அதிகரிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செய்ய முடியுமா?, மைக்ரோ கண்ட்ரோலர் பகுதி என்பது ஒருமுறை மட்டுமே மென்பொருள்களை பதிவேற்றம் செய்யக் கூடியதா அல்லது மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற முக்கிய சந்தேகங்கள் எங்களுக்கு உள்ளது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்கு (நேற்று) தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

நீதிபதிகளின் உத்தரவின் அடிப்படையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது, ‘‘ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ சிப் சின்னங்களை பதிவேற்றம் செய்யும் போது அதை ஏற்று கொள்ளும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு இருகிறது. அது மென்பொருள் மாற்றங்களாக அல்லாமல் வெறும் கட்சி சின்னங்களை மாற்றும்போது சரி செய்யும் வகையில் மட்டுமான வடிவமாக இருக்கும்.

மென்பொருளை அதுவே கட்டுப்பாட்டு கருவியின் மைக்ரோ சிப்களுக்கு அனுப்பி வைக்கும். மேலும் மைக்ரோ கண்ட்ரோலரைப் பொறுத்தவரை அது கட்சியின் பெயரையோ, வேட்பாளரின் பெயரையோ எதையும் பதிவேற்றம் செய்வதில்லை. மாறாக வாக்குச்சீட்டு இயந்திரத்தில் என்ன பதிவாகிறதோ அதனை மட்டுமே அது அங்கீகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்த பொத்தானில் இந்த கட்சியின் சின்னம் தான் ஒதுக்கப்பட போகிறது என்பது இந்த இயந்திரங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்களுக்கு கூட தெரியாது. இதுவரை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக எந்த விதமான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

மேலும் தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒன்றை, உச்ச நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது. ஏதேனும் குளறுபடிகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களை தண்டிப்பதற்கான போதுமான சட்ட விதிமுறைகள் வேண்டுமானால் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கூறும் ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரம் விவகாரம் தொடர்பாக எங்களுக்கு இருந்த சந்தேகங்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* மூன்று இயந்திரங்களுக்கும் தனித்தனி மைக்ரோ சிப் தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் அளித்த விளக்கம், ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி ஆகிய மூன்றுக்கும் தனித்தனியாக மைக்ரோ சிப்கள் பொருத்தப்பட்டு புரோகிராம் செய்யப்பட்டு இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் மூன்றுக்கும் தனித்தனியாக சீல் வைக்கப்படும். அவற்றை சாதாரணமாக மாற்ற முடியாது. மைக்ரோ சிப்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. இதில் எத்தனை சின்னங்கள் வேண்டுமானாலும் அதாவது சுமார் 1024 சின்னங்கள் வரையில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சட்ட விதி 324ன் கீழ் இந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு சின்னங்களை பராமரிப்பது உட்பட அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இதன் பதிவுகள் என்பது 45 நாட்கள் மட்டுமே என்று கிடையாது. வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட்களுக்கு பிறகும் தேவைப்பட்டால் தரவுகளை எடுக்கலாம். அனைத்தும் அப்படியே இருக்கும்” என்று தெரிவித்தனர்.

* முரண்பட்ட தகவல்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் அதை மீண்டும் பயன்படுத்த முடியும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டபோது பதில் அளித்து இருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப அதிகாரிகளின் விளக்கம் முரணாக இருக்கிறது. மேலும் மைக்ரோ சிப்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடியவை தான் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது” என தெரிவித்தார். மேலும் இந்த மைக்ரோ சிப் மீண்டும் புரோகிராம் செய்யக் கூடியவை என்றால் அது குளறுபடிகளை செய்ய ஏதுவான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.

The post ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: