குலசேகரம் அருகே அதிகாலை பரபரப்பு; 2 பேரை கடித்து குதறிய புலி இறந்தது: ரப்பர் தோட்டத்தில் சினிமா பாணியில் கட்டிப்புரண்டு சண்டை

குலசேகரம்: குலசேகரம் அருகே ரப்பர் தோட்டத்தில் 2 பேரை கடித்து குதறிய புலி இறந்து போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி அடர்ந்த மலைப்பகுதிகளை உள்ளடக்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், பன்றி உள்பட தாவர உண்ணிகள் முதல் சிறுத்தை, புலி உள்பட அசைவம் சாப்பிடும் விலங்குகள் வரை ஏராளமான உயிரினங்கள் வசித்து வருவதால் குமரி மாவட்ட வனப்பகுதி பல்லுயிரின வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முண்டந்துறை புலிகள் சரணாலய எல்லைக்குள் குமரி மாவட்ட வனப்பகுதிகள் வருவதால், மலையோர பகுதிகளில் அவ்வப்போது புலி நடமாட்டம் இருக்கும். கோதையாறு சுற்றுவட்டார பகுதியில் ரப்பர் பால்வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் புலிநடமாட்டம் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். மேலும் தொழிலாளி ஒருவரை புலி தாக்கியதில் காயமடைந்ததாகவும் தகவல் பரவியது. இந்தநிலையில் குலசேகரம் அருகே புலி ஒன்று 2 பேரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சிப்பாறை பகுதியை அடுத்த மலைகிராமமான ஆண்டிபொத்தை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (28). அன்னாசி விவசாயம் செய்து வருகிறார்.

குலசேகரம் அருகே சேக்கல் பகுதியில் உள்ள தனது அன்னாசி தோட்டத்துக்கு செல்வதற்காக இன்று காலை சுமார் 6 மணியளவில் பைக்கில் புறப்பட்டார். குலசேகரம் அருகே காக்கச்சல்- தேனங்கோடு பகுதியில் வந்தபோது மலையில் இருந்து திடீரென பாய்ந்து வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகன் மீது மோதியது. மோதிய வேகத்தில் புலியும், பைக்கில் இருந்து ஜெகனும் கீழே விழுந்தனர். புலி மீது ஜெகன் விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகன் உருண்டபடியே புலியிடம் இருந்து நழுவினார். அந்த புலி என்ன நினைத்ததோ தெரியவில்லை, அப்படியே ஜெகனை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து தெறித்து ஓடியது.

புலி கடிக்கவில்லையென்றாலும், பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ஜெகன் கூச்சலிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் ஜெகனை மீட்டனர். இதற்கிடையே ஜெகனை விட்டுவிட்டு பாய்ந்தோடிய புலி, அருகே உள்ள சாஸ்தா கோயில் பின்பக்கம் தனியார் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த தோட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ரப்பர் பால் வெட்டும் பணிக்காக வந்திருந்த குலசேகரம் அருகே திருநந்திக்கரை திட்டவிளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (61) என்பவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அங்கு பூதலிங்கம் மட்டும் தனியாக இருந்த நிலையில், புலி திடீரென பூதலிங்கத்தின் மீது பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத பூதலிங்கம் புலியின் பிடியில் இருந்து விடுவிக்க போராடினார். ஆனால் அந்த புலி மிகுந்த பலத்துடன் இருந்ததால் முடியவில்லை. சினிமா சண்டை காட்சி போல இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். பூதலிங்கத்தின் உடலில் முகம், வயிறு, கை, கால் என கண்ட இடங்களையெல்லாம் புலி நகத்தால் கீறியது. உடலின் சில பகுதிகளில் கடித்து குதறியது. இந்த போராட்டத்தில் பூதலிங்கம் அலறினார்.

இவரது மரண ஓலம்கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். திரளான மக்கள் வருவதை கண்ட புலி, பூதலிங்கத்திடம் இருந்து விலகி பாய்ந்தோடியது. அப்போது சிறிது தூரத்திலேயே அருகே இருந்த பள்ளத்தில் விழுந்த புலி திடீரென சுருண்டு விழுந்து மயங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பூதலிங்கத்தை மீட்டு வாகனம் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதேபோல் சாலையோரம் புலி தாக்கியதில் படுகாயமடைந்த ஜெகனையும் அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த புலி அசைவற்று கிடந்தாலும் அதனருகே யாரும் செல்லவில்லை. பொதுமக்கள் உடனே குலசேகரம் காவல் நிலையம், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். புலியை பரிசோதனை செய்த போது அந்த புலி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. புலி எப்படி இறந்தது என்பது மர்மமாக உள்ளது. வனத்துறை உயரதிகாரிகளுக்கும், முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்துவந்து புலியை உடற்கூராய்வு செய்ய உள்ளனர்.

அதன் பிறகே புலி எப்படி இறந்தது என்ற விபரம் தெரியவரும். புலியின் உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயம் இருந்தது. மேலும் புலியின் கழுத்து பகுதியில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தியநிலையில் இருந்தது. எனவே இந்த புலி ஜெகன், பூதலிங்கத்தை தாக்குவதற்கு முன்பாக வனப்பகுதியில் முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்றிருக்கலாம். அல்லது வேட்டையாடி உண்டு இருக்கலாம். இந்த போராட்டத்தில் முள்ளம்பன்றியின் முட்கள் புலியை குத்தி கிழித்து காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால் தான் புலி இறந்திருக்கும் என வனத்துறையினர் கருதுகின்றனர். 2 பேரை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதும். மலையோர பகுதியில் மேலும் புலி நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

The post குலசேகரம் அருகே அதிகாலை பரபரப்பு; 2 பேரை கடித்து குதறிய புலி இறந்தது: ரப்பர் தோட்டத்தில் சினிமா பாணியில் கட்டிப்புரண்டு சண்டை appeared first on Dinakaran.

Related Stories: