×

கன்னியா ராசிக்காரர்கள் கல்வியும் தொழிலும்

கன்னியா ராசிக்காரர்கள் அதி புத்திசாலிகள். ஆட்களைச் சரியாக எடை போடுவதிலும் பணம், காசு போன்றவற்றைக் கணக்குப் பார்த்துச் செலவழிப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆடம்பரமாக செலவழிக்காவிட்டாலும் அவசியத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பார்கள். பேராசை கொண்டவர்கள் கிடையாது. சொகுசுப் பேர்வழிகள் கிடையாது. வசதியாக வாழ வேண்டும் என்று நினைத்து அதன்படியே திட்டமிட்டு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.ஏழை சிறுவன் கன்னியா ராசிக்காரனாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், ஏழைப் பெரியவர் ஒருவர் கன்னியா ராசிக்காரராக இருப்பதைப் பார்க்க இயலாது. அப்படி ஏழையாக இருந்தாலும் கூட அவர் தன்னளவில் வசதியாக ஆரோக்கியமாக தன்னுடைய தேவைகளைத் தேவைப்பட்ட அளவிற்கு நிறைவேற்றிக் கொள்பவராகவே இருப்பார்.

திட்டமிட்ட செயல்பாடு

புத்திக்கூர்மையும் சிறந்த திட்டமிடலும் செயல்பாட்டுத் திறனும் நிறைந்த கன்னியா ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கான படிப்புகளையே தெரிவுசெய்து படிப்பார்கள். இவர்கள் பிறருக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்பவர்களோ சமூக நலத்திற்காக சம்பளம் இல்லாமல் ஊழியம் செய்பவர்களோ கிடையாது. ஆனால் கஷ்டப்படுகின்றவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கி அவர்களைக் கை தூக்கி விடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். இதனால் இவர்களுக்கு நல்ல நண்பர்கள், பாசமான குடும்பத்தினர், பண்புள்ள சுற்றத்தினர் இருப்பார்கள்.

நுண்ணறிவு

கன்னியா ராசிக்காரர்கள் பொதுவாக கணக்கில் புலி என்றாலும் வரலாறு, அறிவியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பத் துறை, இதழியல், ஜோதிடம், வங்கியியல், நிதி மேலாண்மை, சட்டம், ஆடிட்டிங், துப்பறியும் போலீஸ் போன்ற துறைகளில் படிக்க ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.

அறிவுப் பெட்டகம்

கன்னியா ராசிக்காரர்கள் அறிவுக் களஞ்சியம். புதிது புதிதாக அறிமுகமாகின்றவற்றை கூட அன்றைக்கோ அடுத்த நாளோ படித்துத் தெரிந்துகொள்வார்கள். நுண்ணறிவு படைத்த இவர்கள் தகவல்களை சேகரித்து வைப்பதில் கெட்டிக்காரர்கள். இவர்களை என்சைக்கிளோபீடியா எனலாம். பிக் டேட்டா என்றும் அழைக்கலாம். படித்ததை அப்படியே வெறும் தகவலாக மனதில் பதிவு செய்யாமல் அதனை ஆய்வுசெய்து அதனுடைய நோக்கம், தோற்றம், தற்போதைய செயல்பாடு, வருங்கால நிலை என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்து தன் மனதிற்குள் புதிய தகவல்களாக்கிப் பதிவு செய்து வைத்திருப்பார்.

ஏற்ற பாடப்பிரிவுகள்

கணிதம், இயற்பியல், கணக்காயம், சட்டம் போன்ற நுணுக்கமான படிப்புகளில் கெட்டிக்காரர்கள். ஆனால் இதற்காக உணவு, தூக்கத்தைக் கெடுத்து அலட்டிக்கொண்டு அவதிப்பட்டுப் படித்து சிரமப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருமுறை படித்தாலே பாடம் அவர்கள் மூளைக்குள் ‘ஸ்கேன்’ ஆகிவிடும். அதுபற்றி ஒருமுறை சிந்தித்தால் ஆய்வு முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் சொல்லுவதெல்லாம் சிந்தனை முத்துக்களாகத்தான் இருக்கும். படித்ததை அப்படியே வாந்தி எடுக்கும் ஆட்கள் கன்னியா ராசிக்காரர்கள் அல்ல.

தொழில் நேர்த்தி

நுணுக்கமான துறையில் இவர்கள் நுண்ணறிவுடன் பரந்துபட்ட தகவல் அறிவுடன் தீர்க்கமாக சிந்தித்து விளைவுகளை ஆராய்ந்து படிப்படியாகத் திட்டமிட்டு தொழில் செய்யும் திறமையும் பயிற்சியும் பழக்கமும் உடையவர்கள். கெட்டிக்காரர்கள். எந்த ஒரு சிறு தகவலையும் விட்டுவிட மாட்டார்கள். மிகவும் நுணுக்கமாகக் கவனித்து செயல்படுவார்கள். இவர்களுக்கு வேகத்தை விட விவேகம் அதிகம். இவரிடம் யாரும் பேச்சில் ஜெயிக்கவே முடியாது பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்து தப்பிக்க இயலாது. பொய் பேசுகின்றவர்களை அவர்களின் முதல் வார்த்தையிலேயே அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் பொறுமையாகப் பொய்க் கதை முழுவதையும் ரசித்து கேட்டு அவன் எப்படி ஸ்கெட்ச் போடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டு பிறகு வார்த்தைகளால் சாட்டையடி கொடுப்பார்கள். கோபமாக ஆங்காரமாக உணர்ச்சிவசப்பட்டுக் கத்தி கெட்ட வார்த்தைகளில் திட்டிப் பேச மாட்டார்கள். வெகு நிதானமாக கனிந்த அறிவுடன் கண்டிப்பான குரலில் எடுத்துரைப்பார்கள்.

ஏற்ற தொழில்கள்

ஆவணப்படுத்துதல் மேலாண்மை, நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குதல், தன் கட்சிக்காரர் கொலைகாரராக இருந்தாலும் அவருக்காக சிறப்பாக வாதாடுதல், ஜோதிடம், இசை, பாட்டு பாடுதல், வசனம் எழுதுதல், பேசுதல், மிமிக்ரி செய்தல், மேடைப் பேச்சு, பட்டிமன்றம், ஆலோசனை வழங்குதல், டியூஷன் எடுத்தல் (கணக்கு, அறிவியல்), ஐஏஎஸ் அகாடமி நடத்துதல், கல்வி நிறுவனங்களை நடத்துதல் போன்றவை இவர்களுக்கு ஏற்ற தொழில்களாகும்.

சிறப்பியல்புகள்

கன்னியா ராசிக்காரர்கள் தொழிலில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதற்காகக் கலங்கிப்போய் செயலிழந்து உறைந்து போக மாட்டார்கள். மின்னல் வேகத்தில் பிரச்னையை ஆராய்ந்து ஒரு நொடியில் தீர்வு சொல்லிவிடுவார்கள். மனம் உடைந்து போகாமல் நிதானமாக அமர்ந்து யோசித்து பிரச்னைகளுக்கான தீர்வுகளை அழகாக பொறுமையாகக் கேட்பவர் ஏற்றுக்கொள்ளும்படி எடுத்துரைப்பார்கள். கன்னியா ராசி முதலாளியை பெற்ற பணியாட்கள் கொடுத்து வைத்தவர்கள். எந்த பிரச்னைக்கும் கன்னியா ராசிக்காரரிடம் தீர்வு உண்டு.

மைனஸ்

கன்னியா ராசிக்காரர்கள் மனத்துணிவும் நிதானமும் உடையவர்கள். இவர்களிடம் இருக்கும் ஒரே எதிர்மறைப் பண்பு தனக்கு கீழே இருப்பவர்களைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர்கள். விமர்சனத்தை ஆரவாரமாக எடுத்து வைக்காவிட்டாலும் மென்மையான சொற்களில் சொன்னாலும் கூட அந்த விமர்சனம் கேட்பவரின் மனதை ஆழமாகக் காயப்படுத்தும். இதற்கு காரணம் இவர்கள் பணியாட்கள் செய்யும் வேலையில் நேர்த்தியை எதிர்பார்த்து ஏமாந்துபோவதுதான். அரைகுறையாக ஏனோதானோ என்று வேலை செய்கின்றவர்களைக் கண்டால் இவர்களுக்கு அறவே பிடிக்காது.

பிளஸ்

கன்னியா ராசிக்காரர்கள் எதார்த்தவாதிகள் என்பதால் படிப்பிலும் தொழிலிலும் ஒரு லாஜிக் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நடைமுறைக்கு ஒத்துவராத எந்த வேலையையும் இவர்கள் செய்ய விரும்புவதில்லை. அதுபோல எடுத்த எடுப்பில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ எடுத்தேன் முடித்தேன் என்றோ எதையும் செய்ய மாட்டார்கள். ஒப்புக் கொள்வதற்கு முன்பு நன்றாக யோசித்து அதை படிப்படியாக செய்வது எப்படி என்று அணுஅணுவாகத் திட்டமிட்டு தன்னால் முடியும் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு வேலையை ஏற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொண்டதும் எந்த சிரமமும் இன்றி உரிய ஆட்களுக்குப் பணிகளை பகிர்ந்து கொடுத்து, தான் செய்ய வேண்டிய கண்காணிப்புப் பணியை செம்மையாகச்செய்து அல்லது தானே செய்ய வேண்டிய வேலையாக இருந்தாலும் திட்டமிட்டபடி செய்து அழகாக முடித்து சரியான நேரத்தில் கொடுத்து விடுவார்கள். நிதானமும் திட்டமிடுதலும் அகண்ட அறிவும் இவருடைய பிளஸ் பாயின்ட்களாகும்.

The post கன்னியா ராசிக்காரர்கள் கல்வியும் தொழிலும் appeared first on Dinakaran.

Tags : Virgos ,Kanna ,Dinakaran ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி