மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில் நிலையம் – பூங்காநகர் வழியாக மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர் ஊராட்சிகள் உள்ளது. இதில் ராஜாஜிபுரம் நகராட்சி பகுதியிலும் பூங்காநகர், காக்களூர் ஊராட்சி எல்லையிலும் உள்ளது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினசரி ஏராளமானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பகுதிகளுக்கு படிக்க செல்கின்றனர்.

வியாபாரம், கல்வி மற்றும் மருத்துவம் நிமித்தமாக ரயில்கள், பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். இவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் சென்றுவர வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பேருந்து வசதி இல்லாததால் பைக், ஆட்டோக்களிலும் தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மக்களின் கோரிக்டகை ஏற்று, பல ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து பூங்கா நகர் வழியாக காலை, மாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் அந்த பேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதுகுறித்து பூங்கா நகர் பொதுமக்கள் கூறுகையில், ‘’பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்கின்றவர்கள் வசதிக்காக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ராஜாஜிபுரம், பூங்கா நகர், திருவள்ளூர் பஸ் நிலையம் மற்றும் தேரடி வழியாக கலெக்டர் அலுவலகம் வரை மினி பேருந்துகள் இயக்கவேண்டும். இந்த பகுதியில் பிரசித்திபெற்ற சிவா விஷ்ணு கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில்கள்உள்ளன.

இந்த கோயில்களுக்கு திருவள்ளூர் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். எனவே மினி பேருந்துகள் இயக்கினால் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கின்றவர்கள் வியாபாரத்திற்காக செல்கின்றவர்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நோயாளிகள் அனைவரும் பயனடைவார்கள். எனவே, பஸ் இயக்க வேண்டும்’ என்றனர்.

The post மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில் நிலையம் – பூங்காநகர் வழியாக மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: