×

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் முருகன் பேட்டி

திருமலை: தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடுநிலையாளர்கள், பாஜக ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 18ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. மனு தாக்கலின் 4வது நாளான நேற்று திருப்பதி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் வரபிரசாத் ராவ் திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பிரவீன்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இருந்தார்.

முன்னதாக அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வரபிரசாத் ராவ் போட்டியிடுகிறார். இவர் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஓய்வு பெற்று, திருப்பதி மக்களவை தொகுதியில் எம்பியாகவும், கூடூர் எம்எல்ஏஆகவும் 45 ஆண்டு கால மக்கள் சேவையில் இருந்துள்ளார். அவரது வாக்கு சதவீதம் உயர்வை உயர்த்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் உள்ளது என கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முறைகேடு செய்ய முடியாது என தெளிவுபடுத்தப்பட்டது. தோல்வி பயத்தால் இதுபோன்று வதந்திகள் பரப்புகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில், நடுநிலையாளர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. யார் என்ன செய்தாலும் எங்களுடைய வெற்றியை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Andhra Pradesh ,Union Minister Murugan ,Thirumalai ,Union Minister ,L. Murugan ,AP ,Tamil Nadu, Andhra Pradesh ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...