×

ஆந்திராவில் பரபரப்பாக மாறும் அரசியல் களம் 2வது நாளில் பல்வேறு கட்சியினர் வேட்புமனுத்தாக்கல்

*சந்திரபாபு மனைவி புவனேஸ்வரி குப்பத்தில் மனுத்தாக்கல் செய்தார்

திருமலை : ஆந்திராவில் 2வது நாளான நேற்று பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் சந்திரபாபு மனைவி புவனேஸ்வரி குப்பத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆந்திராவில் தேர்தல் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. நேற்று முன்தினம் முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியதால், அரசியல் சூடு அதிகரித்துள்ளது. சட்டசபைக்கு முதல் நாளில் 236 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மக்களவைக்கு 46 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.
இரண்டாவது நாளாக நேற்று பல கட்சிகளில் இருந்தும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

25ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய அவகாசம் உள்ளதால், இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை முக்கிய கட்சிகளின் வேட்பாளர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அந்தந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சார்பில் பி படிவத்தை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பி படிவம் கிடைத்தவுடன் வேட்பு மனு தாக்கல் செய்வது அதிகரிக்க உள்ளது.

பல வேட்பாளருக்கு அந்தந்த கட்சியின் சார்பில் பி.படிவம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலருக்கு இன்னும் வழங்கப்படாததால் வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை முதல் அதிகரிக்க உள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் இம்மாதம் 25ம் தேதி புலிவெந்துலாவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணும் வரும் 23ம் தேதி பிதாபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே பாஜக, ஜனசேனா கட்சி வேட்பாளர்களுக்கு பி.படிவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு தரப்பில் குப்பம் தொகுதிக்கு அவரது மனைவி புவனேஸ்வரி குப்பத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். அப்போது வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகள், பல்வேறு துறையை சேர்ந்த பலர் சந்திரபாபு வேட்பு மனுக்கான கட்டணத்தொகை நன்கொடையாக வழங்கினர்.

இதனையடுத்து பிரமாண்ட பேரணியாக சென்று நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். லோகேஷ் தரப்பில் மங்களகிரியில் தெலுங்கு தேச கூட்டணி கட்சியினருடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சிலர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு வரும் 21ம் தேதி அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு படிவம்-பி வழங்குகிறார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

அனைத்து கட்சி தலைவர்களும் அந்தந்த தொகுதியில் ஒருவர் பின் ஒருவராக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பாளர்கள் பிரமாண்ட பேரணியுடன் வேட்புமனு வழங்கும் மையத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனுவில், ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்துக்கள், குற்றவியல் வரலாறு போன்றவற்றை அறிவிக்க வேண்டும். இந்த வேட்புமனுவின்படி, ஆந்திராவில் முதல் நாள் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பணக்கார வேட்பாளராக நெல்லூரை சேர்ந்த வெமி, பிரபாகர் இடம் பிடித்துள்ளார். 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் உள்ளதால் யார் டாப் ஒன்னாக இருப்பார்கள் என்பது தெரிய வரும்.

இரண்டாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பூட்டா ரேணுகா உள்ளார். சித்தூர்சித்தூர் ஆந்திர மாநிலத்தில் மே 13ஆம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலெக்டர் அலுவலகம் மற்றும் இணை கலெக்டர் அலுவலகத்தில் சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சித்தூர் பாராளுமன்ற வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சித்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த வேட்பாளரும், சித்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தெலுங்கு தேசம் வேட்பாளரும் ஆகிய 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சித்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரெட்டியப்பா கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சித்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர் ரெட்டியப்பா அவர்களுடன் சித்தூர் ஜில்லா பரிஷத் சேர்மன் வாசு மூன்று பேர் உடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பதி

திருப்பதி பாராளுமன்ற தனி தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் நேற்று திருப்பதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பின்னர் வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி மாவட்டத்தில் தற்போதைய தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள் இந்நிலை தொடர்ந்தால் மாவட்டத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் மற்ற மாநில தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

வேட்பாளர்கள் சொத்து விவரம்

வேட்புமனு பிரமாணப் பத்திரத்தின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.715.62 கோடி. தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வெமி பிரசாந்தி பெயரில் ரூ.76.35 கோடியும், பிரபாகர் பெயரில் ரூ.639.26 கோடியும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.1.17 கோடி உள்ளது. பல்வேறு நிறுவன பங்குகள் மற்றும் பத்திரங்கள் வடிவில் ரூ.10.62 கோடிகள் உள்ளன. இருவரிடமும் ரூ.6.96 கோடி மதிப்புள்ள 19 கார்கள் உள்ளன. குற்ற வரலாற்றைப் பொறுத்த வரையில் பிரசாந்தி மீது வழக்குகள் எதுவும் இல்லை. புட்டா ரேணுகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.161.21 கோடி உள்ளது. அதில் அசையும் சொத்துகள் ரூ.142.46 கோடியும், அசையா சொத்துகள்ரூ.18.75 கோடியும் உள்ளது.

இவை அவரது மற்றும் அவரது கணவர் சிவ நீலகண்டன் பெயரில் உள்ளன. அவர்களுக்கு ரூ.7.82 கோடி கடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஷில்பா சக்ரபாணி அதிக சொத்துக்கள் உள்ளவர்கள் பட்டியலில் ஒய்எஸ்ஆர் வேட்பாளர் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஸ்ரீசைலம் ஒய்.சி.பி வேட்பாளர் ஷில்பா சக்ரபாணி ரெட்டியின் சொத்து மதிப்பு பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

அவர் கொடுத்த பிரமாணப் பத்திரத்தில் அவர், அவரது மனைவி மற்றும் மகனுக்கு ரூ.131.71 கோடி சொத்து உள்ளது. அவர்களுக்கு ரூ.28.24 கோடி கடன் உள்ளது. 2014ல் ரூ.49.89 கோடியாக இருந்த இவர்களின் சொத்து, 2019ல் ரூ.10 கோடிக்கு மேல் குறைந்து ரூ.37.27 கோடியாக மட்டுமே உள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் இவர்களின் சொத்துக்கள் சுமார் 100 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆந்திராவில் பரபரப்பாக மாறும் அரசியல் களம் 2வது நாளில் பல்வேறு கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chandrababu ,Bhuvaneshwari ,Tirumala ,Kuppam ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்