பள்ளூர் வாராஹி

அம்மன்குடி துர்க்கை

மகிஷனை வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்‘ என அழைத்தனர். இத்தல மூலவரான கைலாசநாதருக்கு இணையாக பக்கத்திலேயே தனிச் சந்நதியில் அஷ்டபுஜ துர்க்கை அருள்பாலிக்கிறாள்.

ராஜராஜ சோழனின் அமைச்சரான பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடத்துக்கு முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம், உப்பிலியப்பன் கோயில் அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு செல்லலாம்.

கிடாத்தலை மேடு துர்க்கை

மகிஷாசூரன் பூலோக மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மக்களை காக்க அவனை வதைத்தாள் துர்க்கை. அப்படி வதைக்கும்போது எருமைத் தலையனான மகிஷாசூரனின் தலை விழுந்த இடம்தான் கிடாத்தலை மேடு என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அதனாலேயே இத்தலத்தை மகிஷசிரோன்னபுரம் என்றழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில்தான் துர்க்கா தேவிக்கு மூலவருக்கு இணையான தனிச் சந்நதி அமைந்துள்ளது. கிடாத் தலையான எருமையின் தலையை கொண்ட மகிஷனின் தலையை அழுத்தும் கோலத்தில் நின்ற வண்ணம் காட்சி தருகிறாள். துர்க்கைக்கு முன்னால் சக்ர பூர்ண மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அரக்கனே ஆனாலும் மகிஷனை வதைத்தது பாவம்தான். எனவே துர்க்கையே தனக்கு ஏற்பட்ட வீரகத்தி தோஷம் நீங்குவதற்காக இத்தலத்து சிவனை வழிபட்டாள். எனவே ஈசனுக்கு துர்க்காபுரீஸ்வரர் என்கிற திருப்பெயர் ஏற்பட்டது. தோல்வியில் துவண்டோரும் வெற்றி வேண்டும் என்போரும் மறக்காது துர்க்கையை தரிசியுங்கள். மயிலாடுதுறைக்கு வட மேற்கிலும் திருமணஞ்சேரிக்கு வடக்கிலும் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.

பள்ளூர் வாராஹி

ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவள் வாராஹி தேவி. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாராஹி தேவி அருள்புரியும் இந்தக் கருவறையில் மந்திரகாளியம்மன் எனும் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாள். அப்போது அப்பகுதியில் ஒரு துர்மந்திரவாதி அன்னையை மந்திரத்தால் கட்டிப்போட்டு அட்டகாசம் புரிந்து வந்தான். ஒரு முறை இந்த தலத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றோடு வாராஹி வந்தாள். வாராஹி மந்திரகாளியம் மனிடம் அடைக்கலம் கேட்டாள். மந்திர காளியம்மன் வாராஹியிடம், ‘‘நான் கதவைத்திறந்தால் ஊரிலுள்ள மந்திரவாதியால் ஆபத்து ஏற்படும்’’ என்று கூறினாள்.

அந்த மந்திரவாதியிடமிருந்து மந்திர காளியம்மனை இந்த வாராஹி காத்திட சங்கல்பம் கொண்டாள். நள்ளிரவு ஆலய வாசல் கதவை எட்டி உதைத்த துர்மந்திரவாதியை வாராஹி வதைத்து தூக்கி எறிந்தாள். அதனால் மனமகிழ்ந்த மந்திரகாளியம்மன் வாராஹி தேவிக்கு தன் கருவறையில் இடம் அளித்தாள். படைத்தலைவியாக இவள் அருள்வதால் வாகனங்களுக்கும் இவளே அதிபதி. இந்த அன்னையை வணங்கும் பக்தர்களை எல்லாவிதமான வாகன விபத்துகள் ஏற்படாமல் காக்கிறாள். காசியில் மட்டுமே தனிக்கோயில் கொண்ட இத்தேவி காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பள்ளூரில் தனிக் கோயில் கொண்டிருக்கிறாள்.

வண்டியூர் மாரியம்மன்

மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகாலை கட்டுவதற்கு மண் தோண்டப்பட்ட இடமே வண்டியூர். மண் தோண்டிய இடத்தில் மழைநீர் தேங்கி தெப்பமாக உருவானது. ஆகையால், இது வண்டியூர் மாரியம்மன் என்று பெயர் பெற்றது. இன்றும் மதுரையின் முதல் தெய்வமாக கருதப்படுகிறாள். முக்கிய கோயில்களில் திருவிழா நடத்தும் முன்பு இவளுக்கு பூஜை செய்த பின்னரே பணிகளை துவங்குவார்கள்.

அம்மனின் தலையில் எலுமிச்சம் பழத்தை வைத்து பம்பை உடுக்கை அடித்து வர்ணித்து அழைத்தால் எலுமிச்சம் பழம் தானாகவே வலது பக்கம் இறங்கி உத்தரவு கிடைக்கும். மக்கள் அம்பிகையின் உத்தரவில் மகிழ்ந்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பொங்கலிட்டு கருணையைப் பெறுகிறார்கள். சரும நோய் தீர உப்பு, மிளகு காணிக்கை செலுத்தும் பழக்கம் இருக்கிறது. மதுரையின் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து இந்த ஆலயத்திற்கு பேருந்து உள்ளிட்ட எல்லா வாகன வசதிகளும் உள்ளன.

தாழம்பூர் த்ரிசக்தியம்மன்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூர் அருகே தாழம்பூர் கிருஷ்ணா நகரில் இருக்கிறது, த்ரிசக்தி அம்மன் கோயில். இத்தலத்தில் ஞான சக்தியான சரஸ்வதி, க்ரியா சக்தியான மூகாம்பிகை, இச்சா சக்தியான மகாலட்சுமி ஆகிய மூன்று தேவியரும் த்ரிசக்தி அம்மனாக அருள்கிறார்கள். கிருஷ்ணன் குட்டி என்ற அன்பரின் கனவில் தோன்றிய தேவியின் உத்தரவுப்படி அமையப் பெற்ற இந்த கோயிலில் விநாயகர், முருகன், துர்க்கா ஆகியோரும் தனித்தனி சந்ததிகளில் அருள்கிறார்கள்.

கல்வியில் மேன்மைபெற இத்தல சரஸ்வதிக்கு வெண்தாமரையும் எதிரிகள் தொந்தரவு நீங்க மூகாம்பிகைக்கு குங்கும அர்ச்சனையும் கடன் பிரச்னைகள் தீர செந்தாமரை பூவும் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டு, பக்தர்கள் நிவாரணம் பெறுகிறார்கள். பௌர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. ஆடி மாத வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

திருவாரூர் கமலாம்பிகை

இத்தலத்தை போற்றிப் பாட யுகங்கள் போதாது. அத்தனை பெருமை பெற்ற தலமிது. பஞ்சபூத தலங்களில் பிருத்வி எனும் நிலத்திற்குரிய தலமாக இது விளங்குகிறது. இச்சந்நதியின் வலது பக்கத்தில்தான் தியாகராஜர் சந்நதி அமைந்துள்ளது. மூலவருக்கு இணையான தொன்மையும், புகழும் பெற்றவராக தியாகேசர் விளங்குகிறார். இந்திரன் வழிபட்ட இறைவன் ஆவார். திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிராகாரத்தின் வடமேற்கு திசையில் தனிக்கோயிலில் ஞானசக்தி பீடமாக கமலாம்பிகை தவக்கோலத்தில் காட்சி தருகின்றாள்.

பராசக்தி பீடங்களில் முதலாவதான இதில், அன்னை தன் வலது கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும் தனது கால்களை யோக நிலையில் வைத்தும் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும். இரண்டாம் பிராகாரம் வந்தால் அங்கே தெற்குமுகமாகக் காட்சி தரும் நீலோத்பலாம்பிகை எனும் அல்லியங்கோதையை தரிசிக்கலாம். கையில் பூச்செண்டு ஒன்றைத் தாங்கி நிற்கும் இந்த அல்லியங்கோதையின் பக்கத்தில் தோழி ஒருத்தி தன் தோள்மீது முருகனைத் தாங்கி நிற்பதும், அம்மை தனது இடக்கரத்தால் முருகனின் சுட்டுவிரலைப் பிடித்திருப்பதும் காணவேண்டிய அபூர்வ காட்சியாகும்.

செல்லப்பிராட்டி – லலிதா செல்வாம்பிகை

லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகையை மகாசக்தியும் பேரழகும் ஒருங்கே பெற்றவள். அப்படித்தான் இந்த தலத்தில் அருளும் அம்மனும் கருவறையில் விளங்குகிறாள். ஆனால், உருவத்தோடு அல்ல. சக்தியின் அம்சத்தோடு… அதாவது செவ்வக வடிவ கருங்கல்தான் இங்கு லலிதா செல்வாம்பிகை. நான்கடி உயரமும், இரண்டடி அகலமுமான கற்பலகைக்குள் லலிதா எனும் ஆதிசக்தி எழுந்தருளியிருக்கிறாள். ஆயிரம் வருடங்களாக இப்படித்தான் அருள்கிறாள்.

நாமாக விக்ரகங்கள் அமைத்து அதற்குள் சக்தியை அமரவைப்பது என்பது வேறு. சிறு மனைப் பலகையில் அமர்ந்த சுமங்கலி பெண் போல், ‘நான் இருக்க இந்த கல்லே போதும்’ என்று எளிமையாக வீற்றிருக்கிறாள். மந்திர பீஜாட்சரங்களை கல்லின் மீது பொறித்துள்ளனர். கருவறையை நெருங்கும்போதே உடல் சிலிர்த்துப் போடும். ராமர் பிறக்க தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி இவள்.

குழந்தை பாக்கியம் கிட்டுவதற்காக வந்து வேண்டிக் கொள்கிறார்கள். மூலவராக லலிதை கற்பலகையில் அருளினாலும், உற்சவ மூர்த்தியாக பேரழகு வாய்ந்த லலிதா செல்வாம்பிகை சிலையை நிறுவியிருக்கிறார்கள். திண்டிவனம், திருவண்ணாமலை நெடுஞ்சாலையிலுள்ள செஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பட்டீஸ்வரம் துர்க்கை

தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கு ஈசனை பூஜித்ததால் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்காம்பிகை பேரழகு பொங்க நின்ற கோலத்தில் அருள்கிறாள். பல லட்சம் குடும்பங்களின் குலதேவதை இவள். சோழர்கள் காலத்தில் பழையாறை கோட்டையில் இருந்தவளை, சோழ மன்னர்களின் காலத்திற்குப் பிறகு இக்கோயிலில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

சாந்த வடிவத்தோடு அருளும் அன்னைக்கு எட்டுத் திருக்கரங்கள். துர்க்கையின் கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக் கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தி அருள்கிறாள். முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க கையில் கிளி ஏந்தி அன்னை மீனாட்சியைப் போல தரிசனம் தருகிறாள். பராசக்தி இத்தலத்தில் தவம்புரிந்த போது ஈசன் ஜடாமுடியோடு காட்சி தந்தார். கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

ஜி.ராகவேந்திரன்

The post பள்ளூர் வாராஹி appeared first on Dinakaran.

Related Stories: