பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால் வனங்கள் அழியும் அபாயம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம், ஏப். 18: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். அதுபோல், கோடைக்காலங்களில் மூணாறு, போடி குரங்கணி, பெரியகுளம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாக உள்ளது.

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோடைமழை பெய்ததால் பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், மீண்டும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மேற்கு மலையின் சொர்க்கம் வனப்பகுதியில் நேற்று காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியது.

மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதும் மிகவும் உயரமான மலைப் பகுதி என்பதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வனச்சரக அதிகாரி வேல்மணி நிர்மலாவிடம் கேட்டபோது, வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு போலீசார் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

The post பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால் வனங்கள் அழியும் அபாயம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: