வாக்குப்பதிவு துவங்கும் முன் மையத்தில் இருக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி மைய பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பாக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு மையத்தில் இருக்க வேண்டுமான அறிவுறுத்தியுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, தேர்தல் பொதுப்பார்வையாளர் கிரண்குமாரி பாசி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு ஆகியோர் தலைமையில் கடந்த 12ம் தேதி நடந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு கூறியது:
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் பொதுப்பார்வையாளர், காவல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களை நியமித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமனற் தொகுதிகளில் 208 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றம் ஒரு மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி என மொத்தம் 209 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் என மொத்தம் 95 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரிசர்வாக 19 நுண் பார்வையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து, நேரடியாக பொது பார்வயாளருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும், அவர்களது வாக்குச்சாவடிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு நாளான வரும் 19ம் தேதிக்கு முந்தைய நாள், நுண்பார்வையாளர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளையும், வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் ஏதுமிருப்பின், உடனுக்குடன் நேரடியாக தேர்தல் பொதுப்பார்வையாளர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு துவங்குதவற்கு முன் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, வாக்குப்பதிவு மையத்தில் இருக்க வேண்டும். மேலும், மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் போது, வாக்குப்பதிவு அலுவலர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டும். நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று, மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்நிலையில் உள்ளதாக என்பதை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு குறித்த விபரங்களை பொதுப்பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த இரண்டாம் கட்ட பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வாக்குப்பதிவு துவங்கும் முன் மையத்தில் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: