×

மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

புதுச்சேரி, ஏப். 16: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவன், கத்தியால் மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பூமியான்பேட்டை பாவணர் நகரை சேர்ந்தவர் வினோத் (39). பெயிண்டர். இவரது மகன் மகேஷ் (16). காராமணிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி தனது நண்பர்களுடன் அஜீஸ் நகரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த நவீன் மற்றும் அவரது நண்பர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மகேஷை பார்க்க அவரது தந்தை வினோத் குடிபோதையில் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த அவரது மனைவிக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத் அவரது மனைவியை அடித்துள்ளார். இதை தடுக்க வந்த உறவினர் பெண்ணையும் வினோத் தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வினோத்தை கண்டித்து மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பி உள்ளனர்.

அதன்பிறகு, அவர் மருத்துவமனை வாசலில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, மருத்துவர் நவீன் (28) என்பவர் மருத்துவமனைக்கு வெளியே சென்றுள்ளார். அச்சமயம், அங்கிருந்த வினோத் சிறிதும் தாமதிக்காமல் தான் வைத்திருந்த கத்தியால் மருத்துவர் நவீனின் கழுத்தை அறுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள், போலீசார் ஓடிவந்து வினோத்தை பிடித்து பெரிய கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், படுகாயமடைந்த மருத்துவருக்கு உடனே சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே மருத்துவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து ஜிப்மருக்கும், கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் எம்எல்ஏக்கள் ஜான்குமார், நேரு, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். குடிபோதையில் வரும் நபர்களை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அங்கு நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது.

The post மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Government General Hospital ,Vinod ,Bhumiyanpet ,Mahesh ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை