கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்போர் கவனத்திற்கு!

சில நாட்களுக்கு முன்பாக என்னை சந்தித்தார் நாற்பதைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர். வெளியூரில் வசிப்பவர், ஒரு துக்க நிகழ்விற்காக எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். கண்களில் சிவப்பு, வலி, கூச்சம் ஆகியவை அவருடைய பிரச்னைகள். ”20 வருஷமா கான்டாக்ட் லென்ஸ் போடுறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்ல. இப்ப திடீர்னு இப்படி. முந்தா நாள் ரொம்ப தூரம் டிராவல் பண்ணிட்டு வந்தேன்.‌கான்டாக்ட் லென்ஸ் கழட்டுற நேரம் தாண்டிடுச்சு.

அதனால தான் இப்படின்னு நினைக்கிறேன்” என்றார். அவரது கண்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் வலது கண்ணின் கருவிழியின் மேற்புறத்தில் லேசான கீறல் (corneal abrasion) காணப்பட்டது. வெள்ளை விழிப் பகுதியில் வீக்கமும் சிவப்பும் காணப்பட்டது. சில நாட்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிவதை நிறுத்திவிட்டு கண்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் என்று அறிவுறுத்தி சில சொட்டு மருந்துகளையும் பரிந்துரைத்தேன். ஓரிரு நாட்களில் அவரது அறிகுறிகள் வெகுவாகக் குறைந்து விட்டன.

கண்ணின் நீள, அகல மாறுபாடு மற்றும் வளைவு மாறுபாட்டால் ஏற்படும் கண் பிரச்னைகளுக்குக் கண்ணாடி மட்டுமே ஒரே தீர்வாக இருந்த காலத்தில், கான்டாக்ட் லென்ஸ் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விரலின் நுனியில் இடம்பிடித்து விடக் கூடிய மிகச்சிறிய சாதனத்தை கண்ணின் கருவிழியின் மேல் வைத்தால், அது வைத்தவுடன் பொருந்திக் கொள்வதும், உடனேயே பார்வை மிகத் தெளிவாக தெரிவதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலரின் தொழிலுக்கு அது மிகப் பயனுள்ளதாக இருந்தது. கனமான கண்ணாடியை அணிவதால் ஏற்படும் பக்கவாட்டுப் பார்வையின் குறைபாடுகள் (peripheral aberrations) கான்டாக்ட் லென்ஸ் மூலம் அறவே சரி செய்யப்பட்டன. கெரட்டோகோனஸ் பிரச்னைக்கு இன்றளவும் கான்டாக்ட் லென்ஸே சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது.

இருந்தும் கான்டாக்ட் லென்ஸால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளும் அதிகம். பிற சாதனங்களை விட கான்டாக்ட் லென்ஸிற்கு நாம் அதிக கவனத்தையும் பராமரிப்பையும் செலுத்த வேண்டும். இந்தக் காரணங்களால் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தத் துவங்கிய பலர் விரைவிலேயே அதை நிறுத்திவிட்டு மீண்டும் கண்ணாடிக்குத் தாவுவதைப் பார்க்கிறோம். எங்கள் தலைமுறைப் பெண்களில் பலர் தங்கள் திருமணத்தை ஒட்டி கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்திவிட்டு விரைவிலேயே அதை ஓரமாக வைத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் நம் கருவிழியின் அமைப்பு. நம் உடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரத்த நாளங்கள் தான் ஊட்டத்தை அளிக்கின்றன. எலும்பு, நகம், தோல், இதயம், நுரையீரல் இப்படி ஒவ்வொரு உறுப்பின் ஒவ்வொரு மில்லிமீட்டரிலும் இரத்த நாளங்கள் அமைந்திருக்கும். கருவிழி மட்டும் அதற்கு விதிவிலக்கு. கருவிழியைச் சுற்றி ஒரு மில்லி மீட்டர் சுற்றளவிற்கு மட்டுமே ரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன.

மீதமுள்ள பகுதி அனைத்திற்கும் நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றில் (atmospheric air) இருந்து தான் ஊட்டம் கிடைக்கிறது. கருவிழியின் மேலுள்ள கண்ணீர் படலம் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் இருக்கும் பிராணவாயுவிலிருந்து கருவிழிக்குத் தேவையான அளவிற்கு ஊட்டம் கிடைக்கச் செய்கிறது. கான்டாக்ட் லென்ஸை கருவிழிக்கு மேலாக நாம் பொருத்துகையில், கண்களுக்கும் காற்றிற்கும் நடுவில் ஒரு திரை போட்டாற்போல் ஆகிவிடுகிறது.

சுமார் எட்டு மணி நேரங்கள் வரை கருவிழியால் இந்த ஆக்சிஜன் இல்லாத நிலையை தாக்குப் பிடிக்க முடியும். அதற்குப்பின் கான்டாக்ட் லென்ஸை கழற்றி விடுதல் அவசியம். மருத்துவர் உங்களுக்கு கான்டாக்ட் பரிந்துரைத்தால் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் தான் போட வேண்டும் என்று கூறியிருப்பார். அலுவலகத்திற்குச் செல்பவர்கள், சராசரியாக காலை 10 மணியிலிருந்து ஆறு மணி வரை மட்டுமே அணிவது சிறந்தது. இருசக்கர வாகனங்கள் அல்லது பேருந்துகளில் பயணிக்க நேர்ந்தால், பயணத்தின் போது கண்களுக்குள் தூசி விழுந்து விடாமல் இருப்பதற்காக கூடுதலாக சாதாரணக் கண்ணாடியை அணிவதும் முக்கியம்.‌ கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள் இருக்கும் நிலையில் கூடுதலாக தூசி விழுந்தால் அது அதிக உறுத்தலையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

கான்டாக்ட் லென்ஸை தினசரி கழற்றியவுடன் சுத்தம் செய்து, ஒரு வித திரவத்தில் மூழ்க வைத்து பத்திரப்படுத்தச் சொல்வார்கள். அந்த திரவத்தில் நுண்ணுயிரிகள் மற்றும் தேவையற்ற புரதங்களை அழிப்பதற்கான polyquartenium என்ற உட்பொருளும், கண்களின் மேற்புறத்திற்கு ஈரப்பதத்தை தரக்கூடிய propylene glycol என்ற உட்பொருளும் அடங்கியுள்ளது. சில வகை திரவங்களில் இருக்கும் போரிக் அமிலம் கண்களில் எரிச்சல் உணர்வைக் குறைக்கக் கூடியது.

கான்டாக்ட் லென்ஸுடன் வழங்கப்படும் இந்த திரவத்தை பயன்படுத்தி லென்ஸை சுத்தம் செய்து மாலையில் அதற்கென இருக்கும் சிறு பெட்டியில் போட்டு வைக்க வேண்டும். தினந்தோறும் பழைய திரவத்தை அகற்றிவிட்டு புதிய திரவத்தை அந்தப் பெட்டிக்குள் ஊற்ற வேண்டும். கான்டாக்ட் லென்ஸை அணியும் முன்பாகவும், கழற்றும் முன்பாகவும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவுதல் அவசியம்.

தினமும் மாலை நேரத்தில் வேலை முடித்து வந்த பின் லென்ஸைக் கழற்றிவிட வேண்டும் என்று சொல்கிறோமே, அதற்குப் பின்னான நேரங்களில் பார்வைக்கு என்ன செய்வது? பார்வைக் குறைபாடு உள்ள நபர் கான்டாக்ட் லென்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. கட்டாயமாக கைவசம் அவருடைய கண் பார்வைக்கு ஏற்றவாறு ஒரு கண்ணாடியையும் வைத்திருக்க வேண்டும். மாலையில் கான்டாக்ட் லென்ஸை அகற்றியவுடன் கண்ணாடியை அணிய வேண்டும். சிலர் வேலைக்குச் செல்லாத விடுமுறை நாட்களிலும், வெளியூர் பயணம் செல்லும் நாட்களிலும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதைத் தவிர்ப்பார்கள். அப்படியாக கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்தாத சமயங்களிலும், அந்த பதப்படுத்தும் திரவத்தை அடிக்கடி மாற்றுதல் நல்லது. இந்த அறிவுரைகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை.

நீண்ட நேரம் கான்டாக்ட் லென்ஸ் அணியும் போது கருவிழிக்குத் தேவையான ஊட்டம் கிடைக்காதது ஒருவகைச் சிக்கல் என்றால், கருவிழியில் ஏற்கனவே சேர்ந்துவிட்ட லாக்டிக் அமிலத்தை வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.‌ அதிகமாக லாக்டிக் அமிலம் சேரச் சேர, கருவிழியின் செல்களுக்கு ஊடாக நீர் கோர்த்து வீக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிக வேலை, ஓய்வு இல்லாமை, நீண்ட நேர கான்டாக்ட் லென்ஸ் பயன்பாடு இவை காரணமாக பலர் கைகளால் கண்களைத் தங்களை அறியாமலேயே தேய்த்துக் கொள்வர்.‌ அந்தச் சூழலில் கருவிழியின் மேற்புறத்தில் காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

மேற்கூறிய பிரச்னைகள் அனைத்தையும் மருத்துவர் கூறிய அறிவுரைகளை சரியாக பின்பற்றுவதன் மூலமாகப் பெருமளவில் தவிர்க்க முடியும். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் ஒன்றை அறிந்திருப்பீர்கள். ஓராண்டுக்கு (yearly disposable) பயன்படுத்தும் வகையில் கான்டாக்ட் லென்ஸ்கள் இருக்கின்றன.

அதைப் போலவே ஒரு மாதத்திற்கு மட்டும் பயன்படுத்தக்கூடியவை, ஒரு வாரத்திற்கு மட்டும் பயன்படுத்தக்கூடியவை, ஒரு நாளில் பயன்படுத்தக் கூடியவை என்று பல ரகங்களில் கான்டாக்ட் லென்ஸ்கள் கிடைக்கின்றன. அனுமதிக்கப்பட்ட கால அளவைத் தாண்டி இவற்றை பயன்படுத்தினால் சில பிரச்னைகள் வரக்கூடும். அதேபோல காலாவதியான திரவத்தை பயன்படுத்தும் பொழுதும் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

இயல்பிலேயே கண்களில் ஈரப்பதம் குறைவாக இருப்பவர்கள் கான்டாக்ட் லென்ஸை தவிர்ப்பது நல்லது. கான்டாக்ட் லென்ஸ் பரிந்துரை செய்யும் பொழுது சொல்லப்படும் இன்னொரு முக்கியமான அறிவுரை, கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு தூங்கக் கூடாது என்பது. தூங்கும் பொழுது தெரியாமல் கைகள் பட்டுவிடும் அல்லது போர்வை தலையணையால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும், ஈரப்பதம் கிடைக்காது என்பதும் இந்த அறிவுரைக்குக் காரணம்.

கான்டாக்ட் லென்ஸ் முதன் முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலத்தில் சிலருக்கு சரியான கான்டாக்ட் லென்ஸைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்தது (fitting problems). கருவிழியில் சரியாகப் பொருந்தாத லென்ஸை அணிந்தவர்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. அப்பொழுது hard மற்றும் semi soft கான்டாக்ட் லென்ஸ்களே அதிக அளவில் புழக்கத்தில் இருந்ததும் ஒரு காரணம். இன்று soft கான்டாக்ட் லென்ஸ்கள் வந்தபின் fitting ஆல் வரும் பிரச்னைகள் வெகுவாக குறைந்திருக்கின்றன.

கான்டாக்ட் லென்ஸ் பயன்பாட்டில் முக்கியமான ஒரு சிக்கல், கிருமித்தொற்று. அது Acanthamoeba என்ற நுண்ணுயிரித் தொற்று. சிகிச்சையளிக்க சிரமமான தொற்றுக்களில் ஒன்று. தாமதமான முறையேற்ற சிகிச்சைகள் பார்வையிழப்பு கூட ஏற்படக் கூடும். சரியாக பராமரிக்கப்படாத லென்ஸ்களில் அக்காந்தமீபா தொற்று ஏற்படக்கூடும். இந்தத் தொற்றுக்கு Swimming pool keratitis என்ற வேறு பெயரும் உண்டு. நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் பலருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதால் இந்தப் பிரச்னைக்கு இந்த பெயர் வந்தது.

கூடவே குழாய்த் தண்ணீர், ஆறுகள், குளங்கள் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கக்கூடியது இந்த அமீபா. லேசான காயங்கள் மூலமாக இது எளிதாகக் கருவிழியை தாக்கி விடக்கூடும்.‌எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் மறந்தும் அதனுடனேயே குளிக்கவோ, முகம் கழுவவோ கூடாது.

மேற்கண்ட அத்தனை வழிமுறைகளையும் மிகச் சிறப்பாக என்னால் கடைபிடிக்க முடியும் என்று உறுதி கூறும் ஒரு நபருக்கே, நீண்ட கலந்தாய்விற்குப் பின்பாகக் கான்டாக்ட் லென்ஸ் பரிந்துரைப்பது என்னுடைய வழக்கம். விட மாட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக எழுந்தால் கூட, கண்ணாடி, லேசர் போன்ற முறைகளையே பரிந்துரை செய்கிறேன்!

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே appeared first on Dinakaran.

Related Stories: