×

மகத்துவம் நிறைந்த தேங்காய்

மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் புழக்கத்தில் உள்ளது தேங்காய். மனிதனோடு ஒட்டி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய். இவற்றின் குணத்தையும் சிறப்பையும் இந்த தொகுப்பில் காண்போம். ஆதிசங்கரர் இறை உணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நடைபயணத்தை மேற்கொண்டார். ஒருவர், ஆதிசங்கரரை வணங்கி தேங்காய் பூஜைக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்வியை கேட்டார். ஆதிசங்கரர் நகைத்து அதற்கு பதில் உரைத்தார்.

தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. சிவபெருமானோடு இதனை ஒப்பிட்டும் கூறுவர். பிரம்மா, விஷ்ணு, சிவன், மூவரின் சங்கமம்தான் தேங்காய். ஐந்து நிலைகளை உடையது பச்சைமட்டை, நார், சதைப்பற்றான வெண்மையான இறைச்சிப் பகுதி, நீர், பூ இவை ஐந்தும் மனித தத்துவத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சபூதம் எப்படி இந்த உலகில் அவசியமோ, அதுபோல் நம் இதயத்தில் இருக்கக்கூடிய அன்பை வெளிப்படுத்தக் கூடிய நிலைதான்.

தேங்காய், கரடுமுரடான ஓடாக இருந்தாலும், உள்ளே இருக்கக்கூடிய வெண்மையான பகுதியைப் போல ஒரு மனிதன் எத்தகைய நிலையில் இருந்தாலும், ஒரு இலக்கை நோக்கி செல்லும்போது, வெண்மையான உள்ளத்தோடு கண்ணீர் மல்கி இறைவனிடத்தில் நாம் வேண்டிக் கொண்டால், நாம் எண்ணியது ஈடேறும் என்னும் தத்துவம் இதில் புதைந்து உள்ளது. என்ற விளக்கத்தைக் கூறினார். ஆதலால், நாம் இறைவனுக்கு தேங்காயை படைத்து வணங்கினால், முழுமையான ஆற்றல் கிடைக்கும். எதிர்மறையான சிந்தனைகள் தவிடு பொடியாகிவிடும்.

ஐயப்பன் பூஜைக்கு நாம் ஏன் தேங்காயை பயன்படுத்துகிறோம்?

ஐயப்பனுக்கும் தேங்காய்க்கும் இடையே சம்பந்தம் உண்டு. நாம் ஐயப்பனுக்கு இருமுடி கட்டுகின்றபொழுது நெய்யை தேங்காயில் விடுவோம். தேங்காய் உடலாகவும், நீர் ஆன்மாவாகவும் கருதப்படுகிறது. தேங்காயின் முக்கண் வழியாக நீரை வெளியேற்றிவிட்டு, அதில் பசுவின் தூய்மையான நெய்யை ஊற்றுவோம். மென்மையான உள்ளத்தோடு, தீய எண்ணங்களை நீக்கி, நல்ல மனத்துடன் நெய்யை அந்த மூன்று துளைகள் வழியாக ஊற்றிய பின்பு அடைத்து இருமுடி கட்டி சாமிக்கு எடுத்துச் செல்வர்.

ஐயப்பனுக்கு இருமுடி தேங்காயில் உள்ள நெய்யை அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய தூய்மையான ஆன்மாவை இறைவனுக்கு அபிஷேகமாக சமர்ப்பிக்கின்றோம். உடம்பும் உள்ளமும் இறைவனுக்கே என அர்ப்பணிக்கின்றோம். நம் வாழ்வில் பாவங்கள் கழிகின்றன. தூய்மையான நல் எண்ணங்கள் உள்ளத்திலே வித்திட்டு, நிற்பதற்கு நெய்த் தேங்காய் மிகவும் ஒரு அற்புதமான செயலைச் செய்யக்கூடிய அபூர்வ நிகழ்வாகும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்துகின்றது.

நாம் கோயிலில் ஏன் தேங்காய் உடைக்கிறோம் தெரியுமா?

கோயிலுக்குச் செல்லும்பொழுது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பூ, கற்கண்டு இவற்றுடன் தேங்காயையும் எடுத்துச் செல்வோம். தேங்காய் உடைக்கும் பொழுது, சகுனம் பார்ப்போம். நாம் எண்ணிய காரியம் ஈடேற வேண்டும் என்றால், இரு பகுதியாக ஒரே சீராக உடையும். அப்படி உடைவதுதான் சிறப்பு. சில சமயங்களில் பின்னமாக தேங்காய் உடைந்தாலோ, முறிந்து (அழுகி) விடுவதும் உண்டு. அப்படி காணப்பட்டால், மனது சங்கடம் ஏற்படும். வீட்டில் ஏதோ தர்மசங்கடமான செயல் நடைபெறும், என்பதனை முன்பாகவே உணர்த்துவதாகவும் இது அமையும். அதற்காக நாம் வருத்தப்படக்கூடாது.

இறைவன் நமக்கு நல்ல வழியைக் காட்டி இருக்கிறான் என்று கருதி நேர்மறையான சிந்தனையும், சக்தியையும் ஏற்படுத்த வழி செய்துகொள்ள, உறுதுணையாக அமைகின்றது. மற்றொரு தேங்காயும் உடைத்துவிட்டால் போதும். அல்லது, சதுர் தேங்காயை உடைத்தாலும், குறை நீங்கும். பிள்ளைப் பேறுக்குபிள்ளைபேறு இல்லாதவர்கள், மனமுருகி பிள்ளையாரை வணங்கினால், பிள்ளை பாக்கியம் கொடுப்பார் பிள்ளையார்பட்டி விநாயகர். காணிப்பாக்கம் விநாயகருக்கு, 108 சதுர் தேங்காய் உடைப்பது வழக்கம். நிச்சயம் வேண்டுதல் பிரச்னை நீங்க வழிகாட்டும். சங்கட சதுர்த்தியில், முழுமையான மட்டத் தேங்காய் கட்டினால் நிச்சயம் நம் எண்ணங்கள் ஈடேறும்.

பல ஜென்ம பாவங்களை போக்கும் தேங்காய்

சிரஞ்சீவி ஆஞ்சநேயருக்கு, தேங்காயை சமமாக உடைத்து, இரு பாகங்களில் தாமரை திரி போட்டு, நெய்விளக்கு ஏற்றுவது மிகமிக உகந்ததாகும். காரணம், இன்றும் அவர் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஓர் ஐதீகம். இவ்வாறு வணங்கிவந்தால், வேலையில் கெடுபிடி மற்றும் துன்பம் தரும் செயல்களில் இருந்து விடுதலைப் பெறவும், உசிதமாகும். நாம் கோயில்களுக்கு 16,21,108 என்ற எண்ணிக்கையில் தேங்காயைக் கொடுத்தோம் என்றால், பல ஜென்ம பாவங்கள் விலகும். பூஜையில் கொடுக்கும் தேங்காய்கள் மடப் பள்ளிக்கு தேங்காய் அன்னம் செய்வதற்கும் பயன்படும். அன்னதானத்திற்கு தேங்காய் உகந்தது.

சீர்பாடி தேங்காய்

வில்லிபுத்தூரில், பெரிய ஆழ்வார், நந்தவனம் வைத்து வடபத்ர சாய்க்கு பூமாலை தொடுத்து சாற்றிவந்தார். நந்தவனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அவளுக்கு கோத நாச்சியார் என பெயர் சூட்டி வளர்த்தார். கண்ணன் பெருமைகளை கேட்டே வளர்ந்ததால், அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள். கண்ணனை அடைய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற நூலை பாமாலையாக தொடுத்துப் பாடினாள். ரங்கநாதன், திருமணம் செய்து கொண்டார். அவள் திருமணத்திற்கு சீர்பாடி தேங்காயை பயன்படுத்தப்பட்டது. இன்றும் வைணவக் கோயில்களில் ஆண்டாள் திருக்கல்யாணத்தில் சீர்பாடி தேங்காயை உருட்டுவதுண்டு. இதை மக்கள் ஏலத்தில் எடுப்பார்கள். சீர்பாடி தேங்காய் என்பதன் அர்த்தம், மணமக்களை வாழ்த்தும்போது அதை உருட்டிவிடுவார்கள். ஒரு தூய்மையான துணியை கீழே போட்டுவிட்டு,

“வாரணம் ஆயிரம் சூழ, வளம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்னெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனா கண்டேன் தோழி
நான்’’

– என்று சொல்லிக்கொண்டே இருவர் எதிர்எதிர் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் உருட்டுவார்கள். இதில் திருமணத்திற்கு வந்தோர், வராதோர், நபர்கள் பெயரைச் சொல்லி மணமக்களை வாழ்த்துவதாக உருட்டிவிடுவார்கள். இந்த தேங்காய் மிகவும் புகழும் சிறப்பும் உடையது.

நேர்த்திக்கடனில் தேங்காய்

விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயரால் பல கோயில்கள் கட்டியிருந்தாலும், கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில், தெற்கில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இந்த கோயிலில் என்ன சிறப்பு என்று பார்த்தால், மொட்டை அடித்துக் கொண்டு தங்கள் தலைகளில் தேங்காய்யை உடைத்து நேர்த்திக்கடன் செய்வார்கள்.

குறும்பரும் தேங்காயும்

சிவபெருமானை எண்ணி அவருக்கு தொண்டு செய்வதே தம் வாழ்வின் லட்சியம் எனப் பிறவி எடுத்ததன் புண்ணியம் என கருதி வாழ்ந்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களில் ஒருவர்தான் குறும்ப நாயனார். சோழ நாட்டில், மிழலை என்கின்ற ஊரில் பெருமிழலை தலைவராக விளங்கினார். ஆடுகளின் தோலான கம்பளியை தயாரித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தார். சிவபெருமானை எண்ணி தவம் இருந்த குறும்பர், இறைவனுடைய நாமத்தை எப்பொழுதும் அவருடைய திருவாய் ஒலித்துக்கொண்டே இருக்கும். “ஓம்.. நமச்சிவாய.. ஓம்.. நமச்சிவாய..’’ என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை தூக்கத்திலும் அவர்கள் மறந்திருக்கவில்லை. சிவன் அடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக இவர் வீட்டிலே உணவு சமைத்து அதை எடுத்துக்கொண்டு ஊர் எல்லைக்குச் சென்று சிவனடியார்களுக்கு அமுது படைப்பதே இவருடைய அன்றாட செயலாகும்.

இப்படி அவர் செய்து கொண்டு வந்திருக்கின்ற பொழுதுதான், சுந்தரமூர்த்தி நாயனாரின் பெருமைகளையும், அவர் பாடிய பாடல்களையும் கேட்டு மெய்ம் மறந்தார். அவரையே மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். சுந்தரரை மனதில் நினைத்து, மலை அடிவாரங்களில் அமர்ந்து தியானம் செய்வார். அதனால், ஞானம் பெற்று யோகக்கலை கற்றுக்கொண்டார். பல சித்திகளும் கைவரப் பெற்றார். குறும்பர், இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே சுந்தரரை நேராகக் கண்டு மனம் உருகி மகிழ்ச்சி அடையத் தொடங்கினார்.

கொடுங்கோளூரில் இருந்தபடியே சுந்தரர் வெள்ளை யானையின் மீது அமர்ந்து கைலாயம் செல்வதாக அறிந்தார். மனம் கலங்கினார். தன் குருவை பிரிந்து இருக்க முடியுமா? அவரைக் காண்பது எப்படி? என்றெல்லாம் சிந்தித்தார். சிவபெருமானை நோக்கி அழத்தொடங்கினார். தன்னால் ஒரு கணமும் சுந்தரரை நிச்சயமாக பிரிந்து இருக்க இயலாது. பிரிவு பற்றி எண்ணியதும் அவருடைய உள்ளத்தில் ஒரு அற்புதமான சிந்தனை உதித்தது. அட்டமா யோகத்தின் மூலமாக சிவலோகத்தை அவருக்கு முன்பாக, தான் சிவன் திருவடி அடைந்து அவரை வரவேற்று அவரை எப்பொழுதும் கண்டு மகிழ வேண்டும் என்பதே சிந்தனை ஆகும். சிவலோகம் அடைவதற்காக கருவூரில் இருக்கின்ற மகாலட்சுமி சந்நதிக்குச் சென்றார்.

எதற்காக மகாலட்சுமி சந்நதிக்கு குறும்பர் சென்றார் என்றால், குறும்பரின் குலதெய்வம் மகாலட்சுமியே ஆகும். தேவர்கள், அசுரர்கள் எதிரெதிர் நின்று பாற்கடலை கடையும் பொழுது, மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். திருமால் கூர்மமாக மந்தாரமலையின் அடியில் அமர்ந்தார். பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். அதற்கு பின், பல பொருள்கள் கடலிலிருந்து வெளிவந்து கொண்டேயிருந்தன. அதிலிருந்து அமிர்தமும் விஷமும் இரண்டுமே வந்தது. அமிர்தத்தை தேவர்களுக்கும். விஷத்தை அசுரர்களுக்கும் கொடுத்தனர். அசுரர்களுக்கு விஷம் கொடுப்பதை அறிந்த அந்தகாசுரன் தன் ஞானத்தால் அறிந்து கொண்டான்.

விஷத்தைக் குடிக்காமல் தந்திரமாக அந்த இடத்தை விட்டு தப்பி வெளியேறினான். மகாலட்சுமியின் அழகைக் கண்டு அந்தகாசுரன் மோகம் கொண்டான். தீய எண்ணத்தோடு மகாலட்சுமி பின் செல்ல, அவள் தப்பித்துக் கொண்டு காட்டை அடைந்தாள். காட்டில் குறும்பர் ஆடு மாடுகளைமேய்த்துக் கொண்டிருக்க, மகாலட்சுமியை துரத்திக்கொண்டு வந்த அந்தகாசுரனை கண்டதும், அவனோடு போர் செய்தனர். அங்கிருந்து கம்பளியை தன்னைச் சுற்றிக் கொண்டு பள்ளத்தில் மறைந்தாள்.

அந்தகாசுரனுடைய கொடூர எண்ணத்தைத் தெரிந்துக்கொண்ட குறும்பர், அவனோடு போர் செய்து அவனை அழிக்க முற்பட்டனர். இயலாது போகவே, சிவபெருமானை நினைத்து வணங்கினர். சிவபெருமான் அருள் தர மறுத்தார். இதை அறிந்துகொண்ட குறும்பர், சிவபெருமான் அருள் புரிய வேண்டும், மகாலட்சுமியை காப்பதற்காக தலையில் தேங்காயை உடைத்துக்கொண்டனர். அவர்களுடைய பக்தியை மெச்சி, சிவபெருமான் காட்சியளித்து திருமால் துணையுடன் அந்தகாசுரனை போர் செய்து, அவன் உயிரை எடுத்தனர்.

அதன்பின்பு, அந்த பள்ளத்திலே கம்பளியை சுற்றிக்கொண்டு, உயிர் வாழ்ந்த மகாலட்சுமிக்கு ஒரு சமயம் வெளிப்பட வேண்டிய நேரம் வந்ததால், குறும்பர், ஈரமாக இருந்த பள்ளத்தை கண்டு அதை வெட்டிப் பார்க்க, அந்தப் பள்ளத்தில் சுயம்பு வடிவாக மகாலட்சுமி எழுந்தருளினாள். அங்கேயே அவளுக்குக் கோயில் எழுப்பினர். சாதாரணமாக திருமகள், நான்கு கைகளுடன் காட்சி தருவாள். சங்கு, சக்கரம், கதை, தாமரை பூ கரத்தில் வைத்து சிரித்த முகத்துடன் காட்சி தருவாள்.

ஆனால், இந்த இடத்தில் மகாலட்சுமி இரண்டு கைகளோடு அழகாக காட்சி தருகிறாள். தாமரைப் பூவில் அமர்வதற்கு மாறாக, இங்கே பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். இவ்வாறு குறும்பர்களால் காப்பாற்றப்பட்ட மகாலட்சுமியே, குறும்பர்களின் குலதெய்வமாக விளங்கினாள். இதை போலவே, இங்கு குறும்பர் இனத்தைச் சார்ந்த 63 நாயன்மார்களில் ஒருவரான குறும்பரும். மகாலட்சுமியே குலதெய்வமாக விளங்கினாள்.

குறும்ப நாயனார் தன் குரு சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே கைலாயம் சென்று விடுவாரோ? எனக் கருதி தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டு, சிவபெருமானை வேண்டினார். அவர் அருள்புரிந்தார். அஷ்ட சக்தியுடன் அவர் கைலாயத்திற்குச் சென்றார். இவ்வாறு தேங்காய் பூஜைக்கு உரியதாகவும், புராணங்களிலும் வழிபட்டு வந்ததாகவும் செய்திகள் உள்ளன. தேங்காய், நம் மனதில் உள்ள ஈகோவை போக்கக் கூடியது. உள்ளத்தில் இருக்கின்ற அழுக்குகளை நீக்கும். தேங்காய் எப்படி வெண்மையாக இருக்கிறதோ, அதுபோல நம் உள்ளம் பூப்போல மலரக்கூடியது. நாம் பூஜை செய்யும் பொழுது தேங்காய் உடைத்தால், அதில் பூ இருந்தால் மிகவும் நல்லது.

கனவில் தேங்காய் வந்தால்?

உணவாக உட்கொள்ளும்போது நம் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றது. தேங்காய் பச்சை மட்டையோடு கனவில் வந்தால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று முதியோர்கள் கனவுப் பலன் கூறி யிருக்கிறார்கள். சிலருடைய கனவுகளில் தேங்காய் மட்டை வந்து ஆண்குழந்தை பெற்றெடுத்ததும் கண்கூடான கண்டதுண்டு. திருமணத்தில் தேங்காயைச் சுற்றி மாங்கல்யம் வைத்துக் கொடுப்பதும், கைகளில் தேங்காய் வைத்து காப்பு கட்டுவதன் முக்கிய காரணம், தேங்காயைப் போல மணமக்கள் ஒற்றுமையாக எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஓடுபோல கடினமான மன உறுதியோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வெண்மை பாகத்தைப் போல இருக்க வேண்டும்.

இதில், நீர் இருப்பதைப் போல அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஒற்றுமையுடன் திகழ வேண்டும். பிள்ளைகளைப் பெற்று தாம்பத்தியம் சிறக்க, இந்த நீர் ஒரு இரகசிய கருத்தை உணர்த்துகின்றது. ஆதலால்தான் திருமணமான இரவில், மணமகன் மணமகள் கையில் இளநீரைக் கொடுத்து, சுமங்கலிப் பெண்கள் நலுங்குவைத்து, இளநீரை முந்தானையில் வாங்கும் சடங்கும் உண்டு.

தேங்காய், வீடு கட்டுகின்றபொழுதும், அஸ்திவாரம் போடும்பொழுதும் உடைப்பது, நரபலி கொடுப்பதற்கு ஈடாகும். ஆகவே, தேங்காய் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் தொடர்ந்து வருகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை என்றும்கூட சொல்லலாம். மனிதன் இறந்துவிட்டால், முதலில் தேங்காய் உடைத்து இரு கூறாக வைத்து அகல் விளக்கேற்றி வைப்பர். அதற்கு காரணம், தேங்காய் இரண்டாக உடைந்து, உள்ளே இருக்கின்ற மென்மையான பாகம் போல நல்ல மனதோடு இறைவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் என்பது சூட்சுமமாக விளக்கும் வழியாகும். இறைவன், ஆன்மாவை ஏற்றுக் கொள்வதாக உணர்த்தும் ஐதீகம்.

பொன்முகரியன்

 

The post மகத்துவம் நிறைந்த தேங்காய் appeared first on Dinakaran.

Tags : Adi Shankara ,God ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…