வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி, ஏப்.15: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரயு மற்றும் மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், இது குறித்து கலெக்டர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1888 வாக்குச்சாவடிகளுக்கு, 4,534 பேலட் யூனிட், 2,267 கண்ட்ரோல் யூனிட், 2,455 விவி பேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில், சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க பாதுகாப்பு வைப்பறை, வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட எழுதுபொருட்கள், தளவாடங்களுக்கான வைப்பறை, வாக்கு எண்ணும் அறை முகவர்களுக்கான இடம் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் ஆகியவை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, 24 மணி நேரமும் கண்காணிக்க அறையின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் 17 இடங்களில் எல்இடி டிவி திரை மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், முகவர்கள், வாக்குச்சாவடி மையத்திற்குளு வரும் வழித்தடம், வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுத்து வரும் சுமார் 183 வாகனங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து வெளியேறும் வழித்தடங்கள் ஆகிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வரும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்பு இருப்பறையில் வைக்க 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், மத்திய பாதுகாப்பு படையினருக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி காவல் துறை சார்பாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, தனி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிதேவி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, டிஎஸ்பி தமிழரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லெனின், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) சாமிநாதன், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், சம்பத் (தேர்தல்), கிருஷ்ணகிரி தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: