×

முத்துக்கள் முப்பது-சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1. சித்திரை பிறக்கிறது

சோபகிருது வருடம் நிறைவு பெற்று குரோதி வருடம் துவங்கும் நாள் சித்திரை முதல் நாள். இந்த ஆண்டு சித்திரை மாதம் சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் பிறக்கிறது. ‘‘தலைநாள் பூத்த பொன் இணர்வேங்கை’’ என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர் தலால்’’ என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே தலைநாளாகக் கருதப்பட்டது. சித்திரையை “தலை மாதம்” என்றும் பங்குனியை “கடை மாதம்” என்றும் சொல்லும் வழக்கம் உண்டு.

சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை மாதம். வாரத்தின் ஏழு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையில் இருந்துதான் துவங்குகின்றன. மாதங்கள் சித்திரை மாதத்தில் இருந்துதான் துவங்குகின்றன. வாரத்தின் முதல் நாளில் 12 மாதங்களில் முதல் மாதம் பிறப்பது இன்றைய சித்திரை மாதத்தின் சிறப்பு. அன்றைய திதி சஷ்டி. ராகுவுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் நாள் முழுக்க இருக்கிறது. சித்த யோகம்.

2. குருவும் சூரியனும்

வாக்கிய பஞ்சாங்கப்படி மேஷ ராசியில் சூரியன் வெள்ளிக்கிழமை இரவு 8.08க்கு நுழைகிறது. எனவே, விஷு புண்ணிய காலம் என்பது முதல் நாள் சனிக்கிழமை பஞ்சமி திதி மிருகசீரிஷ நட்சத்திரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ் வருடப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமைதான் கொண்டாடுகிறோம். இந்தத் தமிழ் வருடப் பிறப்பு அற்புதமான கிரக நிலைகளோடு அமைந்திருக்கிறது. முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் குரு சேர்க்கையோடு விளங்குகிறது.

கால புருஷனின் முதல் ராசியில் முதல் தர சுப கிரகமான குரு அமர்ந்திருப்பதும் அவரோடு பஞ்சமாதிபதியான சூரியன் இணைந்திருப்பதும் மிக அற்புதமான அமைப்பு. இவர்கள் இருவரும் இணைந்து சப்தம ராசியைப் பார்வையிடுகின்றனர். குரு சூரியனுக்கு உரிய ஐந்தாவது ராசியையும், தனது சொந்த ராசியான தனுசு ராசியையும் பார்வையிடுகிறார். கேந்திரங்களும் (1,7) திரிகோணங்களும் (5,9) சுபத்துவம் அடைந்த அருமை இந்த சித்திரை மாதப்பிறப்புக்கு உண்டு.

3. குரோதி பலன்

ஒவ்வொரு தமிழ் வருடப் பிறப்பைக் குறித்தும் பலன் கூறும் வெண்பா ஒன்று எல்லா பஞ்சாங்கங்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அதிலேயே குரோதி வருஷ பலன் வெண்பா கீழ்க்கண்டவாறு இருக்கிறது. கோரக் குரோதிதனிற் கொள்ளை மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் – கார் மிக்க
அற்ப மழை பெய்யும் அஹ்கம் குறையுமே
சொற்ப விளைவு உண்டெனவே சொல்

அதாவது குரோதி ஆண்டில் திருடர்களால் களவு அதிகமாகும். மக்கள் பயமடைவார்கள். மேகங்கள் வந்தாலும் குறைவாகவே மழை இருக்கும். எனவே தானிய விளைச்சல் குறைவாக இருப்பதால் விலைவாசி அதிகரிக்கும் என்று இருக்கிறது. ஆனால் இது குறித்து நாம் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. காரணம் இது பொதுவான பலன். கிரக நிலைகளின் மாறுபாட்டினால் இந்த பலன்கள் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. நவநாயகர்கள் சொல்வது என்ன?

இந்த ஆண்டின் நவ நாயகர்களாக விளங்குபவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செவ்வாய் ராஜாவாகவும், சனி மந்திரியாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதி பதியாக சனியும், ரசாதிபதியாக குருவும், தான்யாதிபதியாக சந்திரனும், ஸஸ்யாதிபதி, நீரசாதிபதியாக செவ்வாயும் விளங்குகிறார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிவது இயற்கை அசுபர்கள் என்று சொல்லப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து ஏழு அம்சங்களை தமக்கு உரியதாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது இந்த ஆண்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அது நாட்டிற்குரிய பிரச்னையாக இருந்தாலும் வீட்டுக்கு உரிய பிரச்னையாக இருந்தாலும் தீர்க்கமாக யோசித்து செயல்பட வேண்டும். அவசரப்படக் கூடாது. அதே நேரத்தில் தாமதமாகவும் முடிவெடுக்கக் கூடாது என்பதை குறிப்பிடும் கிரக நிலைகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. பிரார்த்தனை தெய்வ பலம் முக்கியம்

ஒரு வருடத்தின் பலன்கள் அதிகமா? குறைவா? என்பதை ஆதாய விரய கணக்குப் போட்டுக் கொடுத்து இருப்பார்கள். ஆதாயம் என்பது சுப அளவு. விரயம் என்பது அசுப அளவு. இந்த ஆண்டு, ஆதாயத்தை விட விரயம் அதிகமாக இருப்பதால், பொருளாதாரரீதியாக பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். வருமானத்தைவிட விலைவாசி அதிகரிக்கும். இந்த ஆண்டில் நல்ல செயல்களை விட தீய செயல்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதை நவக்கிரக நாயகர்களும் ஆதாய விரய கணக்கும் காட்டுவதால், அதிக அளவு தெய்வ பலத்தினை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். இயன்ற அளவு தீமைகளை குறைக்கவும் நன்மைகளை அதிகரிக்கவும், நாட்டில் எல்லா வளங்களும் நலங்களும் பெருகவும், எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல சூரியனும் குருவும் இணைந்து மேஷ ராசியில் அமர்ந்து பஞ்சம பாக்கிய ஸ்தாரங்களைப் பார்வையிடுவதால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் சரியான பிரார்த்தனையும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தால் அதிலே இருந்து மீண்டு விடலாம். இந்தச் சித்திரையில் (சித்திரை 18) குரு பெயர்ச்சியும் வருகிறது. (1.5.2024). குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

6. கிரக மாலிகையில் வரும் வருடப் பிறப்பு

இந்த வருட தமிழ் வருஷப் பிறப்பின் கிரக நிலைகளைப் பார்க்க வேண்டும். குரு மேஷத்தில் இருக்கிறார். அவரோடு சூரியன் இருக்கிறார். இது 12 வருடங்களுக்கு ஒருமுறை அமையக் கூடியது. சூரியன் உச்சம் பெற்றிருக்கிறார். உச்சம் பெற்ற சூரியனை ஆட்சிபெற்ற சனி பார்க்கிறார். சுக்கிரனும் புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் புதன் நீசமாகி நீசபங்கம் பெறுகிறார். சந்திரன் கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் எல்லாம் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று கட்டங்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் அழகு இந்தச் சித்திரைக்கு உரியது. கிட்டத்தட்ட கிரக மாலை போல் அமைந்திருக்கிறது.

நட்சத்திரங்களின் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் தேவர்களின் நட்சத்திரம். அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு, சூரிய பகவான் ஒற்றைச் சக்கரத் தேரை ஓட்டுவதாக புராணங்கள் சொல்லுகின்றன, அஸ்வினி தேவர்களை தேவ மருத்துவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தைத்தான் சூரியனின் பிறந்த நட்சத்திரமாகக் கொண்டாடும் வழக்கம் உண்டு. சித்திரை முதல் நாள், ஆயுள் ஐஸ்வரியத்தைத் தரும் சூரிய பகவானின் அருளை வேண்டி நாம் கொண்டாடுகின்றோம்.

7. அவசியம் கொண்டாட வேண்டும்

சாஸ்திரத்தில் ஒவ்வொரு மாதப் பிறப்பையும் கொண்டாட வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக சூரியன் அந்தந்த மாத ராசியில் நுழையும் நேரத்தை கணித்து அப்பொழுது மாதப்பிறப்பு தர்ப்பணத்தை செய்ய வேண்டும். மற்ற நாட்களில் கோயில்களுக்குப் போனாலும் போகாவிட்டாலும் மாதப்பிறப்பு அன்று கட்டாயம் சென்று அர்ச்சனை செய்து வருவது குடும்பத்துக்கு நல்லது. மற்ற மாதப் பிறப்பைக் கொண்டாட விட்டாலும் சித்திரைப் மாத பிறப்பு என்பது வருடத்தின் முதல் மாத பிறப்பு என்பதால் அவசியம் கொண்டாட வேண்டும். கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

8. பஞ்சாங்கம் படித்தல்

சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக, சைவ வைணவ வேற்றுமை இல்லாது, எல்லாக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக் கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” நடத்துவார்கள். பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம், நாள் (வாரம்), யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது. மிக முக்கியமாக வீடுகளிலும் மஞ்சள் தடவிய புதுப் பஞ்சாங்கங்கள் வைத்து படிக்க வேண்டும். இது தினசரி வழிபாட்டிற்கு முன்னால் படிப்பது நல்லது. அதனால்தான் ஒவ்வொரு பூஜையின் முன்னாலும் சங்கல்ப மந்திரம் சொல்லுகின்றோம். அதிலே வருடம், அயனம், வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற அத்தனை விஷயங்களும் வந்துவிடும்.

9. பஞ்சாங்கம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரியபலிதமும் உண்டாகும். அதேபோல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், நோய்கள் குணமடையும்.

10. வசந்த காலத்தின் முதல் மாதம்

சித்திரை மாதம் வருடத்தின் முதல் பருவமான வசந்த காலத்தின் முதல் மாதம். வண்ண வண்ண மயமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் எங்கும் நிரம்பியுள்ளவர். அதிக ஒளி உடையவர் என்று பொருள். பகவத் கீதையில் பருவ காலங்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று சொன்னதால் பகவானின் மதிப்பிற்குரிய மாதம். சித்திரை மாதத்தில் தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.

சித்திரை முதல் நாள் மேஷ சங்க்ரக மணம், வருஷப்பிறப்பு, விஷு புண்ணிய காலம் என்று பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. திருமலையில் சைத்ர மாதம் எனப்படும் சித்திரை மாதத்தை ஒட்டி கொண்டாடப்படும். வசந்த உற்சவத்தின் மிக முக்கியமான விஷயம், நறுமண மலர்களால் வேயப்பட்ட வசந்த மண்டபத்தில், தேவி பூதேவி நாச்சியாரோடு மலையப்ப சுவாமிக்கு தங்க ஆஸ்தானத்தில், பரிமளங்களால் தயார் செய்யப்பட்ட நீரில் புனித நீராட்டம் நடக்கும்.

11. உயிரினத்தின் தோற்றம்

சித்திரைக்குத் தான் எத்தனை பெருமை! சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் கூடும் நேரம்தான் சித்திரை மாதம். சித்திரை நட்சத்திரம் என்பது செவ்வாய்க்குரிய நட்சத்திரம். செவ்வாய் பூமி காரகன். பூமியின் தோற்றமும் பூமியிலுள்ள உயிர்களின் தோற்றமும், சித்திரை மாதம் நட்சத்திரத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. உயிரினத்தின் தோற்றமானது சித்திரையில்தான் ஆரம்பித்தது என்பது புராணங்களில் இருந்து தெரிகிறது.

யுகங்கள் நான்கு. அதிலே முதல் யுகமான கிருதயுகம், முதல் மாதத்தை வரவேற்பது போல. யுகத்தில் சித்திரையில் பிறந்த யுகத்தை கிருதயுகம் எழுக மாதோ என்று பாரதி அழைக்கிறார். கிருதயுகம் சித்திரை மாதத்தின் வளர்பிறை துவிதியை திதியில் பிறந்தது. அதைப்போலவே கல்பங்களின் கூர்ம கல்பம், சித்திரை வளர் பிறை பஞ்சமியில் பிறந்தது. நதிகளின் தலைசிறந்த நதியான கங்கை நதி வளர்பிறை சப்தமியில்தான் உலகத்தில் வந்தது. சித்திரை வளர்பிறை திரயோதசியில் தசாவதாரங்களின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நடந்தது.

12. ஆதிசங்கரர் ராமானுஜர், மத்வாச்சாரியார்

ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் என மூன்று சம்பிரதாய ஆசார்யர்களும் அவதரித்த மாதம் சித்திரை. இவர்கள் பரப்பிய வெவ்வேறு கொள்கைகள் “த்ரி மதங்கள்” என்று வழங்கப்படும் மூன்று மதத்தத்துவங்கள். இத்தத்துவங்கள் பெரிய அளவில் சொல்லப்படுகின்றன. அதில் முதல் தத்துவம் அத்வைதம் அந்த அத்வைத தத்துவத்தை மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்தவர், ஆதிசங்கர பகவத் பாதர். அவருடைய அவதார மாதம் சித்திரை.

அதைப் போலவே விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பரப்பியவர் ஸ்ரீ ராமானுஜர் அவருடைய ஜெயந்தி விழா பல்வேறு ஆலயங்களிலும் சித்திரை திருவாதிரை அன்று கொண்டாடப்படுகிறது. துவைதம் எனப்படும் மாத்வ சம்பிரதாயத்தை நிறுவிய ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ஜெயந்தி விழாவும் சித்திரையில் தான் வருகிறது. எனவே சித்திரை மாதம் என்பது பல்வேறு சமய ஆச்சாரியர்களும் அவதரித்த சிறப்பினை உடையது.

13. சித்திரையை எப்படி வரவேற்க வேண்டும்?

புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடும் இஷ்ட தெய்வ வழிபாடும் மிகுந்த முக்கியத்துவம். அன்று மங்கலமான பொருள்களைக் காண வேண்டும். மங்கல வார்தைகளைப் பேச வேண்டும். இந்த எண்ணங்களில் சித்திரை முதல் நாளை மிக விசேஷமாகக் கொண்டாட வேண்டும். புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக வீட்டில் ஒரு நெய் விளக்கேற்றுங்கள். ஒரு நாளின் துவக்கம் மகிழ்ச்சியாக இருந்தால் அந்தநாள் முழுக்க நன்றாக இருக்கும்.

ஒரு மாதத்தின் துவக்கம் நன்றாக இருந்தால் அந்த மாதம் முழுக்க நன்றாக இருக்கும். அதைப்போல ஒரு ஆண்டின் முதல் மாதமான, சித்திரை மாதத்தின், முதல் நாள் மகிழ்ச்சியாகவும் தெய்வீகமாகவும் இருந்தால், அந்த ஆண்டு முழுக்க மிகச் சிறப்பான பலனைத் தரும்.

14. விஷூக்கனி தரிசனம்

தமிழ் புத்தாண்டு அன்று விஷூக்கனி தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். முதல்நாளில் பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. விஷூக்கனி தரிசனம் மிக எளிமையான விஷயம்தான். உங்கள் வீட்டு பூஜை அறையில் முதல் நாளே சுத்தப்படுத்தி, துடைத்து, கோலம் போடுங்கள். மாக்கோலம் போடுவது சிறப்பு.

ஒரு மர பீடத்தை (பலகை அல்லது வாழையிலை) வையுங்கள் அதில் நிலைக் கண்ணாடியை வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுங்கள். சில தட்டுகளில் புஷ்பங்கள், தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பருப்பு வகை, இவற்றையெல்லாம் நிரப்பி வையுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு பழ வகைகளை ஒரு தட்டில் வையுங்கள். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக பார்க்க வேண்டும். நம் வீட்டு குழந்தைகளையும் பார்க்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.

15. விவசாயக் கருவிகளுக்கு மரியாதை

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். தென் மாவட்டங்களில் சில கோயில்களில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மேம்படவும், உலகம் செழிப்பு பெற வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். விவசாய கருவியான ஏர் கலப்பை மரம், தண்ணீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட விவசாயக் கருவிகள் பசு மரக்கன்றுகள் வைத்து விவசாயிகளுக்கு மரியாதை நடைபெறும்.

சில ஆலயங்களில் திருமணம் முடித்த புதுமண தம்பதிகள் பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்வர். கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்ன தானம் செய்யப்படும். சித்திரை மாதம் முதல் நாளில் ஒவ்வொரு கோயிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க வேண்டும். அம்பாள் அல்லது தாயாரை வணங்க வேண்டும். பிரகாரத்தை கட்டாயம் வலம் வர வேண்டும். மலைக் கோயிலாக இருந்தால் அந்த மலையை வலம் வரம் வர வேண்டும்.

16. சித்திரை கை விசேடம்

எந்த நாளாக இருந்தாலும், பெரியவர்களிடம் ஆசி பெறுவது நல்லது. குறிப்பாக.
1.பெற்றோர்கள்
2.வயதில் பெரியவர்கள்,
3.குரு மற்றும் ஆச்சாரியர்கள்,
4.நம் வாழ்வில் முன்னேற்றம் காட்டியவர்கள்

என இவர்களை இயன்ற அளவு பரிசு பொருட்களைக் கொண்டு சென்று வணங்கி ஆசிகள் பெறுவது நல்லது. குறிப்பாக சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர். உங்களைவிட இளையவர்களை வணங்கச் சொல்லி அவர்களுக்கு ஆசியும் நீங்களும் தாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக இருக்கும்.

17. தானம் செய்ய வேண்டிய நாள்

ஆண்டாள் நாச்சியார் தமது திருப்பாவையில் “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து” என்று பிறருக்குக் கொடுப்பதை பற்றி பெருமைப்படப் பேசுகிறாள். எந்த வழிபாடோ, சுப நிகழ்வோ, ஹோமமோ, தானம் செய்தால் தான் பூரணத்துவம் பெரும். பொதுவாகவே இது நல்ல நாளில் நல்ல இடத்தில் கொடுப்பது இரட்டிப்புப் பலன் தரும். சித்திரை வருடப்பிறப்பும் அதில் ஒரு நாள் ஆகும். நம்மால் இயன்றதை தானம் செய்தால் கிரக தோஷங்கள் நீங்கும்.

புது வருட தினத்தில் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். குடை தானம், செருப்பு தானம், ஆகியவற்றைச் செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வு சுகமாகும். தானம் தரும்போது மகிழ்ச்சியோடு தர வேண்டும். அகங்காரம் கூடாது.

18. அறுசுவை சேரும் நாள் சித்திரை முதல் நாள்

வாழ்வு என்பது ஏற்ற இறக்கங்களோடு அமைந்தது. அதில் இன்பமும் உண்டு. துன்பமும் உண்டு. இனிப்பும் உண்டு. கசப்பும் உண்டு. இதை குறிப்பாக உணர்த்தவே அன்று வெல்லத்தில் பச்சடியும் வேப்பம்பூவில் ரசமும் வைக்கிறோம். விழாக்கள், நாம் விழாமல், எதையும் எதிர்க்கொள்ளவும், அதைவிட எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அனுசரித்து வாழவும் சொல்லித்தருகின்றன. தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை சமைத்து படையலிட வேண்டும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்கும் உணவு களை சமைப்பது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற
படையலைப் படைப்பது சிறப்பு.

19. வரிசை கட்டி நிற்கும் பண்டிகைகள்

இந்த ஆண்டு சித்திரை மாதம், ஒளி பொருந்திய சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருக்க அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாகையில் சூரியன் நுழைவார். பண்டிகைகளும் வழிபாடுகளும் நிறைத்த சித்திரை மாதத்தில் எத்தனை பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.

1.தமிழ் வருடப்பிறப்பு
2.மச்ச ஜெயந்தி
3.பலராமர் ஜெயந்தி
4.அட்சய திருதியை
5.ஆதிசங்கரர் ஜெயந்தி

6.லாவண்ய கௌரி விரதம்
7.கன்னிகா பரமேஸ்வரி
8.வாசவி ஜெயந்தி
9.மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்
10.அக்னி நட்சத்திரம்

11.நரசிம்மர் ஜெயந்தி
12.சித்ரா பௌர்ணமி
13.சித்ரகுப்தன் ஜெயந்தி
14.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
15.வராக ஜெயந்தி

இப்படி பல பல ஆன்மிக விசேஷங்கள் கொட்டிக் கிடக்கும் வசந்த காலம் சித்திரை மாதம்.

20. 108 திருவிளக்கு பூஜை

இனி எந்தெந்த கோயிலில் என்னென்ன விசேஷம் என்று பார்ப்போம். தென் தமிழகத்தில் குறிப்பாக அம்மன் கோயில்களில் அன்று விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெரும்பாலும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊஞ்சலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். மேலும் சுமங்கலி பூஜை, புஷ்பாஞ்சலி, ஊஞ்சல் ஆராட்டு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். பங்கேற்கும் பெண்களுக்கு வளையலுடன் வெற்றிலை பாக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்படும். மேலும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும். மாலையில் மங்களங்கள் வேண்டி 108 திருவிளக்கு பூஜை விழா சில கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும். சில ஆலயங்களில் புதிய வருடம் பிறப்பதை ஒட்டி சிறப்பு ஹோமங்களும் லட்சார்ச்சனையும் இடம்பெறும். வீதி உலாவும் அந்தந்த கோயில் வழக்கத்தை ஒட்டி நடைபெறும்.

21. அவிநாசி தேர் உற்சவம்

சித்திரையில் பல கோயில்களில் பிரமோற்சவம் நடைபெறும். ‘‘பேணா தொழிந்தேன் உன்னைஅல்லால் பிற தேவரைக் காணாதொழிந்தேன் காட்டு தியே லின்னங் காண்பன் நான், பூணாண் அரவா புக்கொளியூரவி நாசியே, காணாத கண்கள் காட்டவல்லகறைக் கண்டனே” என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடி, தேவாரப் புகழ்பெற்ற, அவிநாசி கோயிலில் 11 நாட்கள் சித்திரை மாதத்தில் காலையும் மாலையும் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆதியில் பிரம்மதேவன் அவிநாசி அப்பருக்கு இந்த உற்சவத்தை நடத்தி வைத்தான்.

ஏழாம் நாள் தேதியில் நடக்கக் கூடிய தேரோட்டம் விசேஷமானது. விநாயகர், முருகன், அம்மன், சண்டிகேஸ்வரர், முருகநாதர் ஹரி வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு தேர் உண்டு. திருவாரூர் தேர், சிதம்பரம் தேர் போல, அவிநாசி தேரும் மிகப்பெரியது. 21.4.2024 ஞாயிறு (சித்திரை 8) அன்று திருத்தேர் விழா நடக்க இருக்கிறது. இதற்கான கொடியேற்றம் சித்திரை 1, (14.4.2024) ஞாயிறு அதிகாலை நடக்க உள்ளது.

22. கூத்தாண்டவர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா (திருநங்கைகள் விழா) சிறப்பாக நடைபெறும். புவனகிரிக்கு அருகே கொத்தட்டை என்னும் ஊரிலும் திருநங்கைகள் திருவிழா, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். மகா பாரதபோர் 18 நாட்கள் நடைபெற்றது போல் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா தர்மன் பட்டாபிஷகத்துடன் நிறைவடைகிறது.

23. என்ன பின்னணி?

இந்த விழாவின் பின்னணி பார்க்க வேண்டும். மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவருக்கு வெற்றி கிடைக்க, போருக்கு முன் களபலி தர வேண்டும் என்று முடிவாகிறது. எந்தக் குற்றமும் இல்லாத, சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதனை முதல் பலியாக்க வேண்டும். சகல லட்சணம் பொருந்தியவர்கள் அர்ஜுனன், கிருஷ்ணர் அரவான் மட்டுமே. அரவான் அர்ஜுனன் மகன். அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் மகனாகப் பிறந்தவர். அரவானை அணுகி அனுமதி கேட்கும்போது, அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். அதற்கு முன் ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என்கிறான். உடனே பெண் தேடுகின்றனர்.

ஒருநாள் இல்லறம் நடத்திவிட்டு சாகப்போகிறவனுக்கு எப்படி எந்தப் பெண்ணும் சம்மதிப்பாள். இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, அரவானை மணக்கிறார். ஒருநாள் வாழ்ந்து விட்டு பலிக்களம் புகுகிறான் அரவான். கணவனை இழந்த மோகினி விதவைக்கோலம் தரிக்கிறாள். ஆணான ஸ்ரீ கிருஷ்ணர், மோகினியாக அவதாரம் எடுத்ததன் அடிப்படையில், கூவாகம் திருவிழாவின் போது, திருநங்கைகள் தங்களை மோகினியாகக் கருதி தாலி கட்டிக்கொள்கின்றனர். இதில் உள்ள உளவியலையும், மனிதாபிமானத்தையும் பக்தியோடு இணைத்த அருமையையும் பார்க்க வேண்டும்.

24. இந்திர விழா

சித்திரையில் இந்திர விழா என்று தேவேந்திரனுக்கு நடைபெறும் வழக்கம் பழைய நாளில் உண்டு. பூம்புகாரில் இந்திர விழா ஒரு காலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அது குறித்த குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தில் உண்டு. இந்திரனை சிறப்பித்து விழா எடுத்தால் மற்ற தேவதைகள் மகிழ்ந்து பருவகால மழையும், காற்றும், சூரியன், சந்திர அருளும் கிடைக்கும் உயிர்கள் தழைக்கும். பயிர்கள் செழிக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு. சித்திரை மாதம் சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதாரம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. குறிப்பாக தேவி பாகவதத்தில் இது சம்பந்தப்பட்ட குறிப்பு இருக்கிறது.

25. மகாலட்சுமி பூஜை

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி அன்று மகா லட்சுமி பூமிக்கு வந்ததாக ஒரு புராண நிகழ்வு உண்டு. எனவே சித்திரை வளர் பிறை பஞ்சமி திதியில் மகாலட்சுமியை கலசத்தில் ஆவாகனம் செய்து மகா லட்சுமி பூஜை செய்வதன் மூலம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் சிறக்கும். சித்திரை மாதத்தில்தான் சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் உள்ள பல்வேறு திருவிளையாடல்களை மதுரையில் நடத்தியதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. எனவேதான் சித்திரை பெருவிழா மதுரையில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.

26. திருச்சி மலைக்கோட்டை சித்திரை மாத விழா

ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரைத் திருவிழா பிரபலமாக நடைபெறுகிறது. அங்கே அகத்தியருக்கு பார்வதி பரமேஸ்வரர்கள் திருமண கோலத்தில் காட்சி தந்ததாக ஐதீகம். தூத்துக்குடி திருமந்திரநகரில் பழமையான சிவன் கோவிலான பாகம்பிரியா உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். திருவரங்கத்தில் சித்திரை பிரம்மோற்சவம் (ஆதி பிரமோற்சவம்) நடை பெறுவது போலவே, திருச்சியில் மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

27. தம்பதிகள் முதலில் பார்க்க வேண்டிய விழா

ஸ்ரீ முஷ்ணம், வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது. இங்கு சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். தர்மபுரி கல்யாண காமாட்சி அம்மன் என்ற ஒரு அம்மன் கோயில் உண்டு.

சித்திரை மாதத்தில் இங்கு வசந்த உற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் என்பது மும்மூர்த்திகள் இணைந்த கோயில். தாணு என்பது சிவனையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது நான்முகனையும் குறிக்கும். இந்த மூவருக்குமான இத்திருக்கோயில் கோபுரம் மிக அழகானது. கலை சிற்பம் உடையது. இங்கே சித்திரையில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் அருமையானது. திருமணம் ஆன தம்பதிகள் முதலில் சுசீந்திரத்தில் நடக்கும் சித்திரை திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்கின்ற மரபு உண்டு.

28. பூச்சொரிதல் விழா

திருவண்ணாமலையில் சித்திரை முதல் நாள் அன்று மலை வலம் வருவது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கூடலூர் மலைப்பகுதியில் மங்களதேவி கண்ணகிக்கு சித்திரை மாத விழா சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மாரியம்மன் கோயில்களில் சித்திரை மாதத்தில் பெருவிழா (பிரமோற்சவம்) மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை விழா, பூச்சொரிதல் விழா 10 நாள் விழாவாக கொண்டாடப்படுவதைக் காணலாம்.

29. ஸ்ரீரங்கம் பெருமாள் தேர் உற்சவம்

இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எந்தெந்த தேதிகளில் விசேஷம் என்பதை பார்க்கலாம். சித்திரை 4ம் தேதி புதன்கிழமை ராமநவமி துவங்குகிறது. சித்திரை 10ல் (செவ்வாய்க்கிழமை) மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார். சித்திரை 15 (ஞாயிற்றுக்கிழமை) வராகப் பெருமாள் ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளது. சித்திரை 23 ல் மச்ச ஜெயந்தியும் 27ஆம் தேதி அட்சய திருதியையும் 29ஆம் தேதி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி நடைபெற உள்ளது. சித்திரை மாதம் ஆறாம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் சித்திரை மாதம் பத்தாம் தேதி சிதம்பரம் தேவாதி தேவன் கருடசேவை உற்சவமும், சித்திரை மாதம் 13ம் தேதி திருக்கடிகை எனும் சோழசிம்ம புரத்தில் லட்சுமி நரசிம்மர் விடையாற்றியும் சித்திரை மாதம் 23ஆம் தேதி ரங்கம் பெருமாள் தேர் உற்சவமும் நடைபெறுகிறது.

30. நிறைவுரை

சித்திரை மாதம் 29ஆம் தேதியிலிருந்து திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் ஏழு நாட்கள் வசந்த உற்சவம் தொடங்கும். சித்திரை முப்பதாம் தேதி ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்சவமும், சித்திரை மாதம் நாலாம் தேதி சீர்காழியில் தேர் உற்சமும் சித்திரை மாதம் 5ஆம் தேதி சமயபுரத்தில் புஷ்ப பல்லக்கு உற்சவமும், சித்திரை மாதம் 24 ஆம் தேதி புகழ்பெற்ற சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவும், காரைக்குடியில் ஸ்ரீ கொப்புடை அம்மன் திருவிழாவும், சித்திரை மாதம் 27ஆம் தேதி கும்பகோணத்தில் பெரிய கடைத் தெரு கருட சேவை உற்சவமும் நடைபெறும்.

பற்பல கோயில்களிலும் இந்த சித்திரை மாதத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தை மாதம் அறுவடை முடிந்து சித்திரை மாதம் கோடை காலமாகவும் வசந்த காலமாகவும் இருப்பதால் அடுத்து வரும் மாதங்களில் உற்சாகம் பெறுவதற்காக அற்புதமான உற்சவங்களை இந்த மாதத்தில் முன்னோர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சித்திரை மாதத்தையும், மாதப்பிறப்பையும் கொண்டாடுவோம் சீர் வளம் பல பெறுவோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-சித்திரை மகளே வருக! சீர் நலம் எல்லாம் தருக! appeared first on Dinakaran.

Tags : Kunkumum Anmigam ,Chitrai ,Chitra ,Surya ,Budha Pon Inarvenkai ,
× RELATED மதுரையில் இருந்து மலைக்கு...