×

மனித வாழ்க்கையில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்!

உலகம் அனைத்திற்கும், அக இருள் அகற்றும் ஆதவனாகவும், புற இருள் நீக்கும் நவக்கிரக நாயகனாகவும் ஒளி வீசிப் பிரகாசிக்கும் சூரிய பகவான், குருவின் ஆட்சி வீடான மீன ராசியை விட்டு, தனது உச்ச பல ராசியான மேஷத்திற்கு மாறும் தினமே தமிழ்ப் புத்தாண்டு மலரும் புண்ணிய தினமாகும்!! தேவர்களின் உலகிற்கும், இப்பூவுலக மக்களுக்கும், பாலமாக அமைந்திருப்பது, சூரியனே ஆகும். மறைந்த நமது முன்னோர்களான பித்ருக்களுக்கு, அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் மற்றும் பல புனித தினங்களில் நாம் செய்யும் தர்ப்பணம், பித்ருப் பூஜைகள், பிண்ட தானம் ஆகியவற்றைத் தவறாது நம் முன்னோர்களிடம் சேர்ப்பிக்கும் தெய்வீக சக்தி வாய்ந்த சூரியன், மேஷ ராசியில் அதிக பலத்தையும். துலாம் ராசியில் வீரியக் குறைவையும் ( நீச்சம்) பெறுகிறார்.

ஜோதிடக் கலையில், ஓர் விசேஷ, தனிச் சிறப்பு பெற்ற கணித முறை ஒன்று உள்ளது. அதற்கு, “சூரிய சித்தாந்தம்” என்று ெபயர். நமது சூரிய மண்டலத்தில் திகழும் 8 கிரகங்களும், சூரியனிடமிருந்தே தங்களது சக்தியைப் பெறுவதாக, அதர்வண வேதம் கூறுகிறது. நமது ஆரோக்கியத்திற்கும், சூரியனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது சரீரத்தில், இதயம், ரத்தம், நரம்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பது சூரியனின் சக்திவாய்ந்த கிரணங்களே!! மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஏற்படும் உடல் உபாதைகளை அவரவரது ஜனன கால ஜாதகத்திலிருந்து, துல்லியமாகக் கணித்து அறிந்து கொள்ள முடியும்! குறிப்பாக, சருமம், மற்றும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை மிகச் சரியாகக் கண்டுபிடிக்க ஜாதகத்தில் சூரியனின் நிலை மிகவும் உதவுகிறது. மேலும், சூரியனே ஆத்ம காரகன் ஆவார். ஜாதகத்தில், சூரியன் பலம் பெற்றிருப்பவர்கள், ஆத்ம பலத்தில் உயர்ந்து விளங்குவார்கள். அதற்கு மாறாக, சூரியன் பலம் குறைந்திருந்தால், அத்தகையவர்களுக்கு, மனோபலம் குறைந்து, சபலங்கள் அதிகமாக ஏற்படும் என “ஜோதிட அலங்காரம்” எனும் மிகப் பழைமையான கிரந்தம் அறுதியிட்டுக் கூறுகிறது. தற்காலப் பேரறிஞர்களின் கணிப்பின்படி, இந்நூல் சுமார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறுகிறது.

மானிடப் பிறவி எடுத்து, தங்களது ஜீவித காலம் முடிந்த பிறகு, எங்கு, எத்தகைய மறுபிறவி எடுத்திருக்கிறார்கள் என்பது, சூரியனுக்குத் தெரியும்! அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அவர்களை உத்தேசித்து, நாம் செய்யும் தர்ப்பணம், பித்ரு பூஜைகள், தான, தருமங்கள் ஆகியவற்றின் பலனை அவர்களிடம் சிறிதளவும் பிறழாது கொண்டுசேர்ப்பவர் சூரிய பகவானே! இத்தகைய தெய்வீகப் பெருமைகளைக் கொண்டு திகழும், சூரிய பகவான், மேஷ ராசிக்கு மாறுவதன் மூலம், தற்போதைய குரோதி புத்தாண்டு பிறக்கிறது.

தன்னிகரற்ற பெருமைகளை ஒருங்கே கொண்டுள்ள இந்தச் சித்திரை மாதத்தின் பெருமைகளை, இம்மாதம் நிகழவுள்ள புண்ணிய தினங்களைக் கொண்டு, தெளிவாக அறிந்துகொள்ளலாம். அவற்றை இப்போது பார்ப்போமா?
இந்தச் சித்திரை மாதம் பிறக்கும்போதே, “சஷ்டி விரதம்” எனும் சக்திவாய்ந்த புண்ணிய தினமாக திகழ்கிறது. இன்று விரதமிருந்து, கந்தர் சஷ்டி கவசம் எனும் சக்திவாய்ந்த துதியினால், பார்வதி மைந்தனாகிய முருகப் பெருமானை பூஜிப்பது அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள அனைத்து பாவங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் அந்த விநாடியே நீங்கிவிடும். கருணைக்கு உதாரணமாகத் திகழும், அவ்வடிவேலவனின் அவதாரம், திருக்கயிலாயத்தின் தெய்வீகப் புனிதத் தடாகமான, மானஸ ஸரோவர் கரையில் பிரகாசிக்கும் “மாந்தாதா” சிகரத்தில் உள்ளது! இப்பொழுதும் திருக்கயிலாயகிரி யாத்திரை செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்தச் சிகரத்தை தரிசித்து வருகின்றனர். இத்தகைய மகத்தான சஷ்டி விரதமென்னும் புண்ணிய நன்னாளில் சித்திரை மாதமும், குரோதி புத்தாண்டும் பிறப்பது, நமது பாக்கியமே!

சித்திரை 4 (17.4.2024) ஸ்ரீ ராம நவமி

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொருவரும் மிகக் கடுமையான துன்பங்கள் நிகழும் காலத்தில்கூட, சத்தியம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து தவறாது நடந்துகொள்ள வேண்டும் என்ற தருமத்தை மக்களுக்கு எடுத்துக்காட்ட பகவான் ஸ்ரீமந் நாராயணனே, ராமபிரானாக அவதரித்து, அனைத்து துன்பங்களையும் அனுபவித்தும், தர்ம ெநறியிலிருந்து தவறாது நடந்துகாட்டிய அவதார தினம் இன்று. உபாவாசமிருந்து, ராமாயணம் – பாலகாண்டம் அல்லது சுந்தர காண்டம் படிப்பது, குடும்பத்தில் ஏற்படக்கூடிய வறுமை, ஒற்றுமையின்மை, கடன் தொல்லைகள், விவாகப் பிரச்னைகள் போன்ற பிரச்னைகள் அனைத்தும் தீருவதை அனுபவத்தில் காணலாம். இன்று ஏழைகளுக்கு உணவளித்தல், காலணிகள் கொடுத்தல், வஸ்திர தானம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல் ஆகியவை தன்னிகரற்ற புண்ணிய பலனைப் ெபற்றுத் தரும். சக்தியுள்ளவர்கள், அயோத்தியா, வடுவூர், தில்லைவளாகம், மதுராந்தகம், ஜனக்பூர் (நேபாளம்), பத்ராசலம், ஸ்ரீரங்கம் திருத்தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டுவருவது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ உதவும். சரயூ நதி ஸ்நானம், பாவங்கள் அனைத்தையும் போக்கிடும்.

சித்திரை 9 (22.4.2024)

தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய மன்னர் ராஜ ராஜசோழன், அஷ்ட பந்தனத்தின்போது (பலவகையான மூலிகைத் திரவியங்களின் கூட்டுச்சேர்க்கை, மூலவர் மூர்த்தி-சிலைகளை பீடத்தில் ஸ்தாபிதம் – நிலைநிறுத்தச் செய்வித்தல்) லிங்கத் திருமேனியானது சரியாகப் பொருந்தவில்லை; நிற்கவில்லை, எவ்வளவு முயன்றும்! சோழனின் குருவும், தேவலோகத்தை சிருஷ்டி செய்த தேவதச்சன் மயனின் மகனுமாகிய, கருவூரான், நவபாஷாண சித்தர் போகரின் உத்தரவின்பேரிலும், அவருடைய பிரதான சீடரும், சித்த மகா புருஷருமான கருவூரார் எழுந்தருளி, லிங்கத் திருமேனியை ஆடாமல், அசையாமல் நிற்கச் செய்தார். அவர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள, நெல்லையப்பர் கோயிலின் முன்நின்றுகொண்டு, “நெல்லையப்பரே! வெளியே வாரும்!” என்றழைக்க, பெருமானோ வெளியே வரவில்லை! இதனால் சினங்கொண்ட சித்தர், “இங்கு சிவபெருமான் இல்லைபோலும்! கடவுள் இல்லாத இடத்தில் கோயில் எதற்கு? இவ்விடத்தில் எருக்கஞ்ெசடி முளைக்கட்டும்” (சாபத்திலும் பக்தி – விநாயகருக்கு உகந்த எருக்கஞ்செடி!) எனக் கூறி அவ்விடத்தை விட்டகன்று, கோபித்துச் சென்றார்.

சித்தர் சொல் பலித்தது, அக்கோயில் முழுவதும் எருக்கஞ்செடிகளால் சூழப்பட்டு, பொலிவிழந்தது. நெல்லையப்பராகிய சிவபெருமான், சித்தருக்குக் காட்சியளித்து, “எமக்கு நைவேத்தியம் செய்யும் தருணத்தில் அழைத்தால் வருவது எங்ஙனம்?” எனக் கூறி சமாதானம் செய்ய, சித்தரும், கோயிலுக்குத் திரும்ப, அங்கு மண்டியிருந்த எருக்கஞ்செடிகள் மல்லிகை, முல்லை மலர்களாக உருமாறி, மணம்வீசிக்ெகாண்டிருந்தது! அங்கிருந்து புறப்பட்டு, ஸ்ரீரங்கம் நம்பெருமாளை தரிசித்துவிட்டு, பெருமானிடமிருந்து ரத்தின ஆபரணத்தைப் பெற்று, வெளிவர, அபரா என்ற தாசி அவர் பாதம் தொட்டு வணங்க, அவளின், சிற்றின்ப தாகத்தை விடுக்கச் செய்து, பேரின்ப நிலையை உணரச் செய்தார். பிறகு, தான் ஏற்கெனவே நம்பெருமாளிடமிருந்து பெற்றிருந்த ரத்தின ஆபரணத்தை அன்பளிப்பாகக் கொடுக்க, அவரைவிட்டுப் பிரிய மனமில்லாத அபரா, கனத்த இதயத்துடன், கண்ணீர் ததும்ப, அந்த ஆபரணத்தைப் பெற்றாள்.

“வருந்த வேண்டாம்; நீ எப்போது நினைத்தாலும் உன்னெதிரில் வந்து நிற்பேன்!” எனக்கூறிச் சென்றார். மறுநாள் காலை, கோயிலில் நம்பெருமாள் அணிந்திருந்த ரத்தின மாலையைக் காணாது, ஊரே கலக்கமடைய, அபரா அந்த மாலையை அணிந்திருந்ததைக் கண்ணுற்ற கோயில் பெரியவர்கள், “அந்த மாலை உன் கைக்கு வந்ததெப்படி?” என வினவ, தனக்குக் கருவூரார் அளித்தார் என்பதைச் சொன்னவுடன், அவரைப் பிடித்துவர உத்தரவிட்டனர். கலங்கிய அபரா, மனத்தளவில் கருவூராரைத் தியானிக்க, அவரும் அவ்விடத்தில் எழுந்தருளினார். “எனக்கு இந்த ரத்தின மாலையைக் கொடுத்தவர், ஸ்ரீரங்கனே! வேண்டுமென்றால் அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்…!” என்றார். அப்போது “ஆம்…! அம்மாலையைக் கொடுத்தது யாம்தான்!” என நம்பெருமாள் திருவாய்மலர்ந்தருளியதைக் கேட்ட அனைவரும் மெய்சிலிர்த்து, கருவூரார் நின்ற திசை ேநாக்கி இருகரம் கூப்பி வணங்கி நின்றனர்.

நாடகத்தை நல்லபடி முடித்தபின், கருவூருக்குத் திரும்பினார் கருவூரார்! ஒரு சிலர் பொறாமை கொண்டு, கருவூராரைக் கொல்ல யத்தனித்தனர். ஒரு சமயம் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், அவரைக் கொல்லும் நோக்கில் அவரைத் துரத்தினர். கருவூராரும் பயந்ததுபோல் பாசாங்கு காட்டி ஓடிச் சென்று, கோயில் கருவறைக்குள் புகுந்து, “பசுபதி எம்பிரானே! எனைக் காத்தருளும்!!” எனக் கூறி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு லிங்கத் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். இதைக் கண்டவர்கள், “காற்றைக் கையில் பிடிக்க முயன்றோமே! என்னே ஒரு மதியீனம்!! கருவூரார் நினைத்திருந்தால், நம்மைத் தீயினிற் தூசாக்கியிருக்கலாம்!” எனப் புலம்பியவாறு, கூனி, வெட்கித் தலைகுனிந்து, தாங்கள் செய்த மாபெரும் தவறிற்காக வருந்தி, அந்தக் கோயில் வளாகத்திலேயே கருவூராருக்கு ஜீவசமாதி அமைத்து வணங்க ஆரம்பித்தனர்.

எங்கு நம்மால் எதிர்க்க முடியவில்லையோ, அங்கு சரணாகதி அடைவதுதானே உத்தமம்? கருவூர் நாயனார், கருவூரார், நாதன், கருவூர் சாமியார் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுபவரும், சிற்பக்கலையில் வித்தகரும், அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்றவரும், 18 சித்தர்களில் ஒருவரும், ஹஸ்த நட்சத்திரத்தில் உதித்தவருமாகிய சித்த மகா புருஷர் கருவூரார் ஜெயந்தி. இந்நன்னாளில், அரிசிமாக்கோலமிட்டு கருவூரார் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவைத்து, ஒன்பது முறை வலம் வந்து வணங்கினாலே போதும். அட்டமாசித்துக்களைப் பெறும் தகுதி நம்மை வந்தடையும்.

சித்திரை 10 (23.4.2024) சித்திரகுப்த பூஜை

சித்ரா பௌர்ணமி தினமே சித்ரகுப்த ஜெயந்தியாகும். இதையே பாத்ம புராணம், கருட புராணம், யம ஸம்ஹிதை, விஞ்ஞான தாந்த்ரம் போன்ற இதிகாச – புராண நூல்கள் சிலாகித்துக் கூறுகின்றன. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், தர்ம நூல்கள் ஆகியவற்றின் சூட்சுமங்களை அறிந்துள்ள தர்ம ராஜரின் கணக்குப் பிள்ளையாகப் பூஜிக்கப்படுபவர் சித்திரகுப்தர். பூவுலகில் ஒவ்வொரு மனிதரும் செய்துவரும் பாபப் புண்ணியங்களைத் தன் சக்தியினால் அறிந்து, அவற்றை எமதர்ம ராஜருக்குத் தெரிவிக்கும் அவதாரப் புருஷர்! இவரது திருக்கோயில், காஞ்சி மாநகரத்திற்கருகே உள்ளது. பக்தியுடன் அவரைப் பூஜித்து, தரிசிப்பது மகத்தான புண்ணிய பலனைப் பெற்றுத் தரும்.

சித்திரை 18 (1.5.2024) நடராஜர் அபிஷேகம்

சிதம்பரத்தில் எழுந்தருளி, அருள்பாலித்துவரும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் இன்று. தரிசிப்பது அனைத்து பாவங்களையும் உடனடியாகப் போக்க வல்லது.

சித்திரை 18 (1.5.2024) குருப் பெயர்ச்சி.

இதுவரை மேஷ ராசியில் சஞ்சரித்துவந்த குருபகவான், இன்று சுக்கிரனின் ஆட்சிவீடான ரிஷப ராசிக்கு மாறும் தினமாகும். இன்று அவரவரது ஊர்களிலுள்ள நவக்கிரக சந்நதிக்குச் சென்று, தீபத்தில் பசு நெய் சேர்த்து தரிசித்துவிட்டு வருவது அளவற்ற நன்மைகளைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சித்திரை 21 (4.5.2024) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

இன்றிலிருந்து வெயில் மிகக் கடுமையாக இருக்கும். கூடியவரையில், பகல் வேளையில் வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். மாரியம்மன் சந்நிதிகளில் தண்ணீர் தெளிப்பது, நல்ல பலனையளிக்கும்.

ரமண மகரிஷிகள் ஆராதனை தினம் சித்திரை 22 (6.5.2024)

திருவண்ணாமலை ரமண மகரிஷிகள் ஆராதனை தினம். நம்மிடையே வாழ்ந்து, தர்ம ெநறியை நமக்கு உபதேசித்தருளிய மகான். திருவண்ணாமலையில், அவரது பிருந்தாவன தரிசனம் செய்வது புண்ணிய பலனைத் தரும்.

சித்திரை 24 (7.5.2024)அமாவாசை

கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. யமதர்ம ராஜரைப் பூஜிக்க வேண்டிய அரிய புண்ணிய தினம். சர்வ பாபங்களும் அகலும்.

சித்திரை 27 (10.5.2024) அட்சய திரூதீயை

அட்சயா என்ற சொல்லின் பொருளே, அள்ள அள்ளக் குறையாதது; மேன்மேலும் வளரக்கூடியது என்பதேயாகும். இன்று செய்யும் நற்செயல்கள் அனைத்தும் புண்ணிய பலனை அதிகரிக்கச் செய்யும். ஏழைகளுக்கு, தயிர் சாதம் கொடுத்தால், சர்வ பாபங்களும் அகலும். கண்ணனின் மூத்த சகோதரரான பலராமரின் அவதார தினம். இதிகாச ரத்னமாகிய மகாபாரதத்தை வியாஸ பகவான் சொல்ல, விநாயகப் பெருமான் எழுதிய நாள். சிவபெருமானின் திருஹஸ்தத்திலிருந்த பிட்சா பாத்திரம், காசி அன்னபூரணிதேவியின் கருணையால் நிரம்பி வழிந்த நாள். துச்சாதனனால், துகிலுறியப்பட்ட பாஞ்சாலியின் மானம் காக்க கிருஷ்ண பரமாத்மா ஆடையை வளரச் செய்த நாளும் இன்றே! ஆகாய கங்கை, பாகீரதனால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட நாள்.

சித்திரை 29 (12.5.2024) ஆதி சங்கர பகவத் பாதாளும், ஸ்ரீமத் ராமானுஜரும் அவதரித்த, தன்னிகரற்ற புண்ணிய தினம்

காலடி, பெரும்புதூர், திருநாராயண புரம் (மேல்கோட்டை), ஸ்ரீரங்கம் தரிசனம் பாபங்கள் அனைத்தையும் போக்கும். இவற்றிலிருந்து, சித்திரை மாதத்தின் தெய்வீகப் பெருமையைப் புரிந்துகொள்ளலாம். இனி, இந்தச் சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும், நிகழவிருக்கும் பலா, பலன்களை ஆராய்வோமா?!

The post மனித வாழ்க்கையில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்! appeared first on Dinakaran.

Tags : Lord ,Surya ,Navagraha ,Pisces ,Aries ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்