×

இந்த வார விசேஷங்கள்

தமிழ் வருடப் பிறப்பு பஞ்சாங்கம் 14.4.2024 – ஞாயிறு

இன்று தமிழ்ப் புத்தாண்டு. சோபகிருது வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்றுமுதல் குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். பொதுவாகவே, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கோயில் களிலும் வீட்டுப்பூஜையிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை “பஞ் சாங்கப் படனம்’’ என்று சொல்வார்கள். முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களை பரப்பிவையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு முதன்முதலாக பூஜை அறையில் இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை “சித்திரை விஷூ’’ என்பார்கள். உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

சூரியனார் கோயிலில் மகா அபிஷேகம் 14.4.2024 – ஞாயிறு

இன்று காலை திருவாவடுதுறை திருக்கோயிலில், ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு ருத்ராபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறும். மாலையில் பஞ்சாங்கம் படனம் நடைபெறும். நவகிரகங்களில் தலைமைக் கிரகமான சூரியனுக்கு உரித்தான சூரியனார் கோயிலில் மகா அபிஷேகம் நடைபெறும்.

விறன் மிண்ட நாயனார் குருபூஜை 14.4.2024 – ஞாயிறு

விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர். அவர் குரு பூஜை தினம் இன்று (திருவாதிரை).

மாவூற்று வேலப்பர் திருவிழா 14.4.2024 – ஞாயிறு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. மாவூற்று வேலப்பர் கோயில் பழமையான முருகன் கோயில். வள்ளிக்கிழங்கைத் தோண்டும்போது முருகனின் சிலை சுயம்புமூர்த்தியாக கிடைத்தது. தமிழகத்தின் ஆதிகுடிகளான பளியர்கள் இக்கோயிலின் பூசாரிகளாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சித்திரை முதல்நாளன்று இக்கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு, இப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்தி வருதல் என ஏராளமான நேர்த்திக்கடன்களோடு வருகின்றனர். இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக் கொண்டே இருக்கிறது. சாதாரண நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

திருவீழிமிழலை சித்திரை பெருவிழா கொடியேற்றம் 14.4.2024 – ஞாயிறு

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று, தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம். சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம். அப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றி பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா 10 நாட்கள் விசேஷமாக நடைபெறும். இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது.

கமலா சப்தமி 15.4.2024 – திங்கள்

இந்த கமலா சப்தமி திருநாளில், விரதம் இருந்து மகாலட்சுமியையும், சூரிய பகவானையும் வழிபட்டால் சந்ததி விருத்தி கிடைக்கும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும், எனக் கூறப்படுகிறது. இன்றைய தினம் முழுவதும், மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வீட்டில் பூஜை செய்து, அதன் பின் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும். முடிந்தளவு இன்றைய தினத்தில் தானங்கள் செய்ய வேண்டும்.

திருவள்ளூரில் சித்திரை பிரம்மோற்சவம் 15.4.2024 – திங்கள்

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவ சுவாமி கோயில், 108 ஸ்ரீவைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஸ்தலமும் தொண்டை நாட்டின் 21-வது திருத்தலமாகும். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு சித்திரை பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். 10 நாள்கள் கொண்டாடப்படும் இந்த உற்சவத்தில் இன்று கொடியேற்றம்.

அசோகாஷ்டமி 16.4.2024 – செவ்வாய்

சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளைச் சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம் (சோகத்தைத் தணித்த மரம்).

அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில்சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, “என்ன வரம் வேண்டும்?” என கேட்டார். “அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது’’. எனக் கேட்க, சீதாதேவியும் “மருதாணிமரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.

ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே “அசோகாஷ்டமி’’ நாளாகும். பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

சமயபுரம் தேர் விழா 16.4.2024 – செவ்வாய்

சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையன்று புகழ் பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தைக் காப்பதற்காகவே பச்சை பட்டினி விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும் என்பது நிதர்சனம்.

மன்னார்குடி விடையாற்றி 16.4.2024 – செவ்வாய்

தட்சிண துவாரகை என்று அழைக்கப்படும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும். இன்று விடையாற்றி விழா.

ஸ்ரீராமநவமி 17.4.2024 – புதன்

பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராமபஜனைகள் நடைபெறும்.

ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கருடசேவை 17.4.2024 – புதன்

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ ஸ்வாமி கோயில் சித்திரை திருவிழாவில் இன்று கருட சேவை.

சீர்காழி சட்டைநாதர் தேர் 17.4.2024 – புதன்

சீர்காழியில் பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. இங்கு உள்ள சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் சட்டைநாதர் என்று பெயர். ஞானசம்பந்தர் அவதரித்த இந்தத் தலத்தில் அவருக்கு உமையம்மை ஞானப்பால் தந்ததாக ஐதீகம். இதை நினைவூட்டும் வண்ணம் சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள், திருமுலைப்பால் விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கியமான தேர்த் திருவிழா இன்று. தேர்த் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் முருகன் அம்பாள் ஞானசம்பந்தருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் உடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுவார்.

தர்மராஜா தசமி 18.4.2024 – வியாழன்

இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது. புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் பிரதமரின் இருந்து தர்மராஜா வையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் 19.4.2024 – வெள்ளி

மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.

இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்படும்.

சர்வ ஏகாதசி 19.4.2024 – வெள்ளி

சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது. காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி.

நாச்சியார் கோலம் 19.4.2024 – வெள்ளி

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாளுக்கு சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நாளில், இன்றைய தினம் பெருமாள் நாச்சியார் கோலத்தில் சேவை தருவார்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sophakrit ,New Year ,Tamil ,Year… ,
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...