இந்த புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்… முதல்வர் மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து!!

சென்னை :தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்! இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post இந்த புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்… முதல்வர் மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: