×

‘‘நீதிபதியாக நின்றருளும் முருகன்’’

பரவசம் தரும் பங்குனி உத்திரப் பெருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் தலம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்! கொளஞ்சியப்பர் யார் என்று கேட்கிறீர்களா? நம்ம முருகப் பெருமான்தான் கொளஞ்சியப்பர் என்ற திருநாமம் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறார். கொளஞ்சியப்பர் இங்கு தோன்றியதே ஒரு சுவாரஸ்யமான வரலாறு. சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதி பெருங்காடாக இருந்தது. அப்போது இங்கே புல் மேய வந்த காராம் பசு ஒன்று, இங்குள்ள அடர்ந்த புதரில் பாலைப் பொழிந்தது. இந்த நிகழ்ச்சி பல நாட்கள் நடைபெற்று வந்தது. பசு மாட்டின் சொந்தக்காரன் மடியில் பால் இல்லாமல் வருவதைக் கண்டு துணுக்குற்றான், ஒருநாள் பசுவைப் பின் தொடர்ந்து வந்து சோதித்தான்.

அந்தப் பசு அடர்ந்த புதர் ஒன்றில் பால் சொரிவதைக் கண்டு அதிர்ந்தான். இச்செய்தி அந்தக் கிராமம் முழுவதும் பரவியது. பொது மக்கள் சிலர் முன் வந்து புதரை அகற்றியபோது, அழகிய வடிவில் ஒரு ‘பலிபீடம்’ காணப்பட்டது. ‘இது சாதாரணப் பலி பீடம் அல்ல. தெய்வாம்சம் நிறைந்தது. இதில் ஏதோ ஒரு தெய்வம் குடி கொண்டிருக்கிறது’ என்பதை உணர்ந்த பொது மக்கள், சுமார் மூன்றடி உயரத்தில் தரையில் இருந்த பலிபீடத்தில் கோயில் கொண்டுள்ள தெய்வம் யார் என்று தெரியாமல் திகைத்தனர்.

இச்செய்தி அறிந்த பொது மக்கள், நாலாப்புறத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர். புதரைச் சுத்தம் செய்து அங்கு ஒரு ஓலைக் கொட்டகை அமைத்து வழிபாட்டைத் துவங்கிவிட, பெரியவர்கள் சிலர் வந்து நாடி ஜோதிடம், பிரசன்னம் என்று பல வகையில் ஆராய்ந்து பார்த்துவிட்டு, பலிபீட வடிவில் கோயில் கொண்டிருப்பது திருமுருகப் பெருமான் என்பதை அறிந்து, ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். திருமுருகப் பெருமான் இங்கு வந்து கோயில் கொண்டது எப்படி? அது ஒரு சுவையான வரலாறு…

சிற்றூரான மணவாள நல்லூரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய நகரம் விருத்தாச்சலம். இது திருமுதுகுன்றம் என அழைக்கப்
பெற்றது. இத்தலத்தில் கோயில்கொண்டிருக்கும் இறைவன் விருத்தகிரீஸ்வரர், இறைவி விருத்தாம்பிகை, தீர்த்தம் மணிமுத்தாறு. இத்தலத்திற்கு விருத்தகிரி, பழமலை என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் முதன் முதலில் படைத்த மலை இதுவென்பர்.திருத்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஊர்ஊராகப் போய் தல இறைவனைத் தரிசித்து, பாடல்கள் இயற்றி வந்தார். அவர் நடந்துவந்த வழியில் இருக்கும் எல்லாத் தலங்களும் பாடல் பெற்ற தலங்களாயின. விருத்தாச் சலம் வந்து இறைவனைப் பாடுவதற்கு முன், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனம் இப்படிச் சிந்தித்தது.

‘‘ஊரோ விருத்தாச்சலம். கிழடு தட்டிய ஊர். அய்யனின் பெயரோ விருத்தகிரீஸ்வரர், வயதான கிழம், அம்மையின் பெயரோ விருத்தாம்பிகை இதுவும் கிழவு. (விருத்தம் என்றால் கிழப்பருவம் என்று பொருள்). இவ்விரு கிழங்களையும் போய்ப் பாடுவதால் என்ன பயன்? அருளும் கிடைக்காது பொருளும் கிடைக்காது.!’’ என்றெண்ணிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்கோயில் சென்று விருத்தகிரீஸ்வரரையும் விருத்தாம்பிகையையும் பாடாமலேயே புறப்பட்டுப் போய்விட்டார்.

கிழவனும் கிழவியுமான விருத்தகிரீஸ்வரரும் விருத்தாம்பிகையும் மனம் வருத்தினர். இருவரும் தங்கள் அருமை மகன் முருகப் பெருமானிடம் சொல்லி வருந்தினர். இதைக் கேட்ட முருகப்பெருமான், உடனே செயலில் இறங்கினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எப்போதும் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்படுபவர். எப்போதும் பொன்னாபரணங்கள் அணிந்திருப்பார். பொற்காசுகளும் வைத்திருப்பார். மணவாள நல்லூர் காட்டுவழியே சுந்தர மூர்த்தி சுவாமிகள் போய்க் கொண்டிருந்தார்.

ஒரு வேடர் குலச் சிறுவனாக அந்தக் காட்டில் அவதரித்த முருகன், சுந்தர மூர்த்தி சுவாமியை மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பொன், பொருள் எல்லாவற்றையும் வழிப்பறி செய்து பிடுங்கிக்கொண்டான்.‘‘தம்பி, எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டாயே? ஊர் ஊராகப் போகும் நான் வழிச் செலவுக்கு என்ன செய்வேன்?’’ என்று புலம்பினார் சுந்தரமூர்த்தி!
‘‘விருத்தாச்சலம் போய் அந்தக் கிழவனிடத்திலும் கிழவியிடத்திலும் வாங்கிக் கொள்!’’ என்றபடி ‘கலகல’ வென சிரித்தவாறு முருகன் மாயமாய் மறைந்தான்.அதைக் கேட்டு திடுக்கிட்ட சுந்தர மூர்த்தி சுவாமிகள், அப்போதுதான் தன் தவறை உணர்ந்து, வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் பாடினார். இப்படி;

‘‘உம்பரும் வானவரும் உடனே நிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே!’’
– என்று முதுகுன்ற இறைவன் மீது இரண்டு பதிகங்கள் பாடினார்.

வேடர்குலச் சிறுவனாக வந்து சுந்தர மூர்த்தி சுவாமிகளிடம் வழிப்பறி செய்து தீர்ப்பு வழங்கிய முருகன்தான் பலிபீட வடிவில் இங்கு இருக்கிறான் என்பதை அறிஞர்கள் உணர்ந்தனர். காராம் பசுவின் குளம்புபட்டு வெளிப்பட்டதாலும், அடர்ந்த கொளஞ்சி மரக்காட்டில் பலிபீட வடிவில் இருந்ததாலும் ‘கொளஞ்சியப்பா’ என்ற பெயர் தாங்கி நின்றார். எல்லாத் திருத்
தலங்களிலும் முருகப் பெருமான் அழகிய திருஉருவம் கொண்ட பெருமானாகக் காட்சி தருகிறார். ஆனால், இங்கு மட்டும் உருவமும் அல்லாத, அருவமும் அல்லாத பலிபீட வடிவில் முருகன் திருக்காட்சியளிக்கிறார். இந்த பலிபீட வடிவிலிருக்கும் இறைவனுக்கு அழகிய பொற்கிரீடம் சூட்டி, வெள்ளிக் கண் பதித்து, வேல் கொடுத்து, தூப தீப ஆராதனை செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

மணவாளநல்லூரில் அமைந்திருக்கும் கொளஞ்சியப்பர் கோயில், பல நூற்றாண்டுகள் பழமையானது. இரண்டு தூண்களுடன் காட்சி தரும் அழகிய முகப்புடன் கூடிய தோரணமண்டபம் தாண்டி உள்ளே சென்றால், ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் எழிலுற அமைந்துள்ளது. நேர் எதிரே கொளஞ்சியப்பரின் மூலஸ்தானம் உள்ளது. பலிபீடத்திருமேனி கொண்டு கொளஞ்சியப்பர் அருள்தர, அந்தப் பீடத்தின் கீழே முருகப் பெருமானின் சடாட்சர மந்திரம் பொறிக்கப் பெற்ற சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு கொளஞ்சியப்பர் சந்நதிக்குப் பின்புறம் பெரிய அரச மரத்தடியில் நவக்கிரக விநாயகப் பெருமானும், தியானேஸ்வரரும் இணைந்து காட்சியளிக்கின்றனர். மற்றொரு புறம் அருள்மிகு முனியப்பர் சுவாமிகள், தனிச் சந்நதி கொண்டு காட்சியளிக்கிறார். மணவாள நல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலில் அன்றாடம் அதிசய நிகழ்வுகள் நடந்த வண்ணமிருக்கின்றன. கொளஞ்சியப்பர் சந்நதி ஒரு உச்ச நீதிமன்றம் போல் செயல்பட்டுவருகிறது என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆம், இங்கே கொளஞ்சியப்பர் நீதிதேவனாக இருந்து நீதி வழங்கி வருகிறார் என்பது ஐதீகம். வீடுகளில் பொருட்கள் திருடு போய்விட்டாலோ, அல்லது யாரேனும் வழிப்பறி செய்து அபகரித்துவிட்டாலோ, அடிதடி, தீங்கு போன்ற தேவையற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலோ நீதி வேண்டி காவல் துறை அல்லது நீதி மன்றத்துக்கு விண்ணப்பிப்பது போல கொளஞ்சியப்பருக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

உரிய கட்டணத்தை கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசிது பெற்றுக்கொண்டு, ஒரு வெள்ளைத்தாளில் என்ன வழக்கு என்று எழுதி மூலவரின் திருவடிக்கு சமர்ப்பிக்கிறார்கள். அர்ச்சகர் இந்தப் புகார் கடிதத்தை சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டு, அதை மடித்து உரியவரிடம் தருகிறார். அவர் அதை முனியப்பர் சந்நதிக்கு எடுத்துச்சென்று சந்நதிக்கு எதிரே இருக்கும் வேலில் நூலால் கட்டிவிடுகிறார்.

கொளஞ்சியப்பர் நீதி தேவன் என்றால், நீண்ட தாடி வைத்துக்கொண்டு காட்சி யளிக்கும் முனியப்பவர்தான் அவரது விசாரணை அதிகாரி என்கிறார்கள். கொளஞ்சியப்பரின் உத்தரவின் பேரில், முனியப்பர் குதிரை மீதேறி சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று விசாரித்து வந்து உண்மை நிலவரத்தைச் சொல்வார் என்றும் அதன்படி கொளஞ்சியப்பர் நீதி வழங்குவார் என்றும் சொல்கிறார்கள். அவரவர் நல்வினை தீவினைகளுக்கேற்ப வெகு விரைவில் மூன்று மணி நேரத்திலோ, அல்லது மூன்று வாரத்திலோ, அல்லது மூன்று மாதத்திலோ குறை தீர்க்கப்படுகிறது. குறை தீர்க்கப்படாவிட்டால் மறுபடியும் புகார் எழுதிப் புதுப்பித்துக் கொள்ளாம். இப்படி நீதிமன்றங்கள் தீர்க்காத குறைகளையெல்லாம் கொளஞ்சியப்பர் தீர்த்துவைக்கிறார்.

புகார் கட்டணமாகப் பல லட்சம் ரூபாய் கோயிலுக்கு வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள் என்றால் எத்தனை எத்தனை பிரச்னைகள் இறைவனைத் தேடி வருகின்றன என பார்த்துக் கொள்ளுங்கள்.இத்திருக்கோயில் தினமும் காலை ஆறு மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு எட்டரை மணி வரை இடைவிடாது திறந்து வைக்கப் பட்டிருப்பது மிகவும் விசேஷம். இங்கு
தினமும் நான்கு காலப் பூசையுண்டு.

பங்குனி உத்திரப் பெருவிழா ‘பிரம்மோற்சவ விழாவாக பத்து நாட்கள் நடைபெறுகிறது’. மூலவருக்கு விழா நாட்களில் பல விதமான அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்தியாக மேளதாளங்களுடன் கிளம்பி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாச்சலம் வந்து விருத்த கிரீஸ்வரர் கோயில் முன் உள்ள முத்தாற்றின் கரையில் எழுந்தருள்வார். அங்கு அவருக்குப் பலவிதமான அபிஷேக அலங்கார ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். அடியார்கள் கூட்டம் அலை மோத மணவாளநல்லூர் திரும்புகிறார். அப்படித் திரும்பும்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் விதவிதமான காவடிகள் சுமந்து வரும் காட்சியைக் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். அவ்வளவு அற்புதமான காட்சியாயிருக்கும். ஆடல் பாடல்களுடன் ‘அரோகரா’ கோஷம் வானை முட்டும்.

சித்ரா பௌர்ணமி நாளில் 1008 குடங்களில் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் அபிஷேகமும் வருடந்தோறும் நடைபெறும் அற்புத நிகழ்ச்சியாகும். மாதந்தோறும் வரும் கார்த்திகை தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. அன்று சந்தனத்தால் முருகன் திருவுருவத்தை உருவாக்கி அதை பலிபீடத்தின் மேல் நிறுத்தி, கிரீடம் அணிவித்து, உருவத் திருமேனியில் கொளஞ்சியப்பரை அலங்கரித்து வழிபடுகின்றனர். விழா நிகழ்ச்சிகளில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவது அதிசயத்திலும் அதிசயம்!

வெள்ளிக்கிழமைகளில் இங்கு நேர்ந்து கொண்டு பிள்ளை வரம் வேண்டுபவர்கள், துணியில் கல்வைத்து தொட்டிலாக அரச மரத்தில் கட்டுகின்றனர். திருமண பாக்கியம் வேண்டுபவர்கள், தாலிக் கயிற்றில் மஞ்சள் வைத்துக் கட்டி வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கலியுக தெய்வமாக நின்று பக்தர்களைக் காத்தருள்கிறார். நீதிபதியாக இருந்து நியாயமான தீர்ப்பையும் வழங்குகிறார்.

டி.எம்.ரத்தினவேல்

The post ‘‘நீதிபதியாக நின்றருளும் முருகன்’’ appeared first on Dinakaran.

Tags : Murugan ,Manavalanallur Kolanjiappar temple ,Vrudhachalam ,Cuddalore district ,Panguni Uthrap festival ,Kolanjayapar ,Lord ,Muruga ,Kolanjiappar ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...