ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!

நன்றி குங்குமம் தோழி

பரந்து விரிந்த புல் மைதானம்… அதில் ஆங்காங்கே குழிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த குழிக்குள் பந்தினை கிளப் என்று சொல்லப்படும் கோல்ஃப் விளையாட்டு குச்சியினைக் கொண்டு செலுத்த வேண்டும். ஒவ்வொரு இடத்தில் இருந்தும் பந்தினை நகர்த்த தனிப்பட்ட கிளப்புகளை பயன்படுத்த வேண்டும். கோல்ஃப் விளையாட்டு மேல்தட்டு மக்களுக்கானது என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கோல்ஃப் விளையாட்டினை அனைவரும் விளையாடுவதற்காகவே உள்விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பரத். சென்னை, ஆழ்வார்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இவரின் ‘கோல்ஃப்ர்ஸ் எட்ஜ்’ என்ற இன்டோர் கோல்ஃப் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது.

‘‘நான் அடிப்படையில் கோல்ஃப் விளையாட்டு வீரர். என்னுடைய ஒன்பது வயதில் இருந்தே நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என் அப்பாவின் வேலை காரணமாக நாங்க ஜாம்பியாவிற்குச் சென்றோம். அங்குதான் எனக்கு கோல்ஃப் அறிமுகமானது. இந்தியா வந்த பிறகும் நான் பயிற்சியை தொடர்ந்தேன். வௌிநாட்டில் மேற்படிப்பு முடிச்சதும், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். மேலும் கோல்ஃப் விளையாட்டுச் சார்ந்த பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ஹரி நட்ராஜனின் அறிமுகம் கிடைச்சது.

அவரும் நானும் இணைந்து 2014ல் ‘டி டைம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனத்ைத துவங்கினோம். அதன் கிளை நிறுவனம்தான் ‘கோல்ஃப்ர்ஸ் எட்ஜ்’. பொதுவாக கோல்ஃப் விளையாட்டு உயர்தட்டு மக்களுக்கு மட்டுமாகத்தான் இருந்தது. பலருக்கு இந்த விளையாட்டு குறித்து அடிப்படை விவரம் தெரியாது. இதுவரை கோல்ஃப் கிளப்பினை தொடாதவர்கள் கூட அதனை கையில் ஏந்தி விளையாட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இதற்கு நாங்க அவர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம் என்று சொன்னால் யாரும் வரமாட்டாங்க.

ஒன்று அதற்கான செலவு அதிகம். மற்றொரு விஷயம் அதற்கென தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும். ஃபன்னாகவும் அதேசமயம் ரிலாக்சேஷன் மற்றும் தங்களுக்கு என்று ஒரு சமூக வட்டத்தை அமைத்துக் கொள்ளவே இந்த விளையாட்டினை இன்டோரில் கொண்டு வர விரும்பினோம். எங்களின் விருப்பத்தை அடுக்குமாடி பில்டர்களிடம் சொன்ன போது, அவர்கள் அதனை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். பெரும்பாலான கம்யூனிட்டி வீடுகளில் ஜிம், காய்கறிக்கடை, நீச்சல் குளம், சூப்பர் மார்க்கெட் என அனைத்தும் அவர்களின் விற்பனை யுக்திகளாக கூறுவார்கள். அதில் அவர்களுக்கு இன்ேடார் கோல்ஃப் என்று சொன்னதும், அதை மிகவும் ஆர்வமாக வரவேற்றனர். அடுக்குமாடி குடியிருப்பினைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இதனை கொண்டு சென்றோம். வேலையின் நடுவே ரிலாக்ஸ் செய்ய இது ஒரு நல்ல களமாக அவர்களுக்கு அமைந்தது.

இதுவரை மும்பை, பெங்களூர், பூனே என 85 பிராஜக்ட்களை செய்திருக்கிறோம்’’ என்றவர், தங்களுக்கு என்று துவங்கியதுதான் சென்னையில் அமைந்துள்ள இந்த விளையாட்டு மையம் என்றார். ‘‘கட்டிட வடிவமைப்பாளர் பலருக்கு வீடு கட்டிக் கொடுத்தாலும் தனக்கான ஒரு கனவு இல்லத்தினை கட்ட வேண்டும் என்று விரும்புவார். அப்படித்தான் நாங்களும் விரும்பினோம். பல இடங்களில் இதனை நாங்க அமைத்துக் கொடுத்திருந்தாலும், எங்களுக்கான ஒன்றை அமைக்க விரும்பினோம். அந்த சமயத்தில் நான் சென்னையில் செட்டிலாகிவிட்டேன். சென்னை மக்கள் கிரிக்கெட், கால்பந்து விளையாடுகிறார்கள், ஆனால் கோல்ஃப் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அனைவரும் இந்த விளையாட்டினை விளையாடி மகிழ வேண்டும் என்பதற்காகவே இதனை அமைத்திருக்கிறோம்.

இது விருச்சுவல் கோல்ஃப் விளையாட்டு. ஆனால் 3டி கிடையாது. கண்களில் விருச்சுவல் கண்ணாடி அணிய வேண்டாம். அதற்கான அவசியமும் இல்லை. உண்மையான கோல்ஃப் குச்சியினால் பாலை அடிக்க வேண்டும். அது இன்டோரில் எப்படி சாத்தியம் என்று தோன்றும். நாம் பயன்படுத்துவது அனைத்தும் உண்மையான கோல்ஃப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் கிளப் மற்றும் பந்துகள்தான். மொத்தம் 14 வகையான கிளப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் பந்தினை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அடிக்க பயன்படுத்தப்படும்.

உங்களுக்கு முன் ஒரு திரை இருக்கும். அது சாதாரண புரஜெக்டர் திரைதான். பந்தினால் எவ்வளவு வேகமாக அடித்தாலும் கிழியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் நீங்க விளையாட விரும்பும் கோல்ஃப் கோர்சின் மைதானம் தென்படும். கிட்டத்தட்ட உலகில் உள்ள மிகவும் பிரபலமான சுமார் 150000 கோல்ஃப் விளையாட்டு மைதானங்களின் அமைப்பினை 2டி மூலமாக இங்குள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்திருக்கேன்.

விரும்பும் மைதானத்தை தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுக்கும் திரைக்கும் இடையே குறைந்தபட்சம் பத்தடி முதல் 20 அடி தூரம்தான் இருக்கும். நீங்கள் பந்தினை அடிக்கும் இடத்திற்கு மேல் ஒரு சிமுலேட்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதில் கேமரா மற்றும் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. அது பந்தினை சென்சார் செய்து, கேமராவில் பதிவு செய்யும். நீங்க பந்தினை அடிக்க தயார்படுத்தியதும், சிமுலேட்டர் ரெடி என்று சொல்லும். அடுத்து நீங்கள் பந்தினை திரையை நோக்கி ஓங்கி அடிக்க வேண்டும். அதில் நீங்க அடித்த பந்து திரையில் உள்ள மைதானத்தில் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதை படம் பிடித்து உங்களுக்கு ஸ்லோமோஷனிலும் எடுத்துக்காட்டும்.

அதாவது, பந்து எவ்வளவு யார்ட் கடந்துள்ளது. பந்திற்கும் குழிக்கும் உள்ள தூரம். எவ்வளவு வாய்ப்பிற்குள் நீங்க பந்தினை குழிக்குள் செலுத்த வேண்டும் என்பதை திரையில் பார்க்கலாம். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டர்ஃப் முறையில் சிறிய அளவில் அமைத்திருக்கிறோம். இதில் உங்கள் முன் ஐந்து குழிகள் மற்றும் ஆங்காங்கே போஸ்ட் இருக்கும். இந்த ஐந்து குழிக்குள்ளும் நீங்க பந்தினை போடவேண்டும். அதேபோல் அருகில் இருக்கும் போஸ்டிலும் பந்தினை செலுத்தலாம். இதற்கு பட்டிங் என்று பெயர். இதற்கான கிளப்பினை பட்டர் என்று அழைப்போம்.

இங்கு விளையாடுவதற்கு கோல்ஃப் ஆட தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுவரை இங்கு விளையாடிய 70% பேர் ஒருமுறை கூட கோல்ஃப் கிளப்பினை கையால் பிடித்தது கிடையாது. ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடலாம். வயதானவர்கள் கூட விளையாடலாம். அவர்களுக்கு கோல்ஃப் கிளப்பினை தூக்கி அடிக்க வலு இருந்தால் போதும். கோல்ஃப் குறித்து அறிமுகம் இல்லாதவர்களுக்கு கிளப்பினை எவ்வாறு பிடிக்க வேண்டும். எந்த திசையில் அடிக்க வேண்டும். தங்கள் உடலினை எவ்வாறு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அனைத்தும் நாங்க முதலில் பயிற்சி அளிப்போம்.

அதன் பிறகு அவர்கள் விரும்பும் விளையாட்டினை தேர்வு செய்து விளையாடலாம். இதில் கோல்ஃப் மைதானம் மட்டுமில்லை, கோல்ஃப் கொண்டு மற்ற விளையாட்டினையும் அறிமுகம் செய்திருக்கிறோம். அதாவது கால்பந்தாட்டம். கோல்ஃப் பந்தினை திரையை நோக்கி ஓங்கி அடிக்க வேண்டும். திரையில் கீப்பர் இருப்பார். நீங்க அடித்த பந்தினை அவர் தடுத்தாரா அல்லது கோல் விழுந்ததா என்று திரையில் காட்சியாகும். சோம்பி விளையாட்டு, திரையில் வரும் சோம்பியினை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தால் அடித்து வீழ்த்த வேண்டும்.

சீரியசான விளையாட்டு மத்தியில் ஒரு சின்ன ஃபன் வேண்டும் என்பதால் இது போன்ற விளையாட்டுகளையும் அறிமுகம் செய்திருக்கிறோம். இங்கு அவர்கள் ஓரளவிற்கு பயிற்சிப் பெற்ற பிறகு அவர்களை உண்மையான கோல்ஃப் மைதானத்திற்கு அழைத்து சென்று அங்கும் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு அந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் கிடைக்கும்’’ என்றவர் உலகளவில் பலர் இன்டோர் கோல்ஃபினை அதிகம் விரும்புவதாக தெரிவித்தார்.

‘‘கோவிட் காரணத்தால், வீட்டில் அடைந்திருந்த நேரத்தில் மனதிற்குப் பெரிய ரிலாக்சேஷனாக மாறியது இந்த இன்டோர் கோல்ஃப் விளையாட்டு. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கடந்த மூன்று வருடமாக இதனை பெரிய அளவில் விரும்புகிறார்கள். சென்னையில் இது முதல் அறிமுகம் என்பதால் பலரும் விரும்பி விளையாட வருகிறார்கள். செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 முதல் இரவு 10 மணி வரை இங்கு விளையாடலாம். எங்களின் ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு, காலை ஏழு மணிக்கு அனுமதியுண்டு. ஒரு ஸ்லாட் ஒரு மணி நேரம். அதனை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் நீங்கள் மட்டுமே இங்கு விளையாடலாம். மற்றவர்களுக்கு அனுமதியில்லை. குழுவாக வர விரும்புபவர்களில் அதிகபட்சமாக எட்டு நபர்கள் வரை அனுமதிக்கிறோம். தனி நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.900, இரண்டு பேர் என்றால் ரூ.1400, குழுவாக வந்தால் ரூ.1700. முதல் முறையாக வருபவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிப்பதால், அதற்கான கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும்.

ஆறு மாதத்திற்கு 12 மணி நேரம் பேக்கேஜ் என்றால் ரூ.8500. எப்போது வேண்டும் என்றாலும் அவர்களின் 12 மணி நேரத்தை விளையாடிக் கொள்ளலாம். தற்போது ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறோம். அடுத்து ஓ.எம்.ஆர், அண்ணாநகரில் கிளைகள் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. பிரான்சைசி கொடுக்கும் ஐடியாவும் உள்ளது. மேலும் பள்ளிகளுடன் இணைந்தும் செயல்படும் எண்ணம் உள்ளது. தற்போது விடுமுறை காலம் துவங்க இருப்பதால், சம்மர் கேம்ஃபும் ஆரம்பிக்க இருக்கிறோம்’’ என்றார் பரத்.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்! appeared first on Dinakaran.

Related Stories: