×

சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர், ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது கல்வி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும், சிலது கலை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். காரணம், அவர்களின் ஆர்வமும், எதிர்காலத்தைப் பற்றிய கனவும்தான். அதுபோல, இசையின் மேல் தான் கொண்ட ஈர்ப்பினால், தன்னுடைய நான்கு வயதிலிருந்து தற்போது வரைக்கும் கர்நாடக இசையில் தனக்கான பயணத்தைத் தொடர்ந்து வந்தாலும், எழுத்துக்களின் மேல் கொண்ட ஆர்வத்தினால் பள்ளி படிக்கும் போதே ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த நந்திதா கண்ணன்.

‘‘சினிமா பாடல்கள் பிடித்தாலும், எனக்கு கர்நாடக இசையில்தான் ஆர்வம் அதிகம்’’ என பேச ஆரம்பித்தார் நந்திதா. ‘‘எங்க குடும்பத்தில் தலைமுறை தொடர்ந்தும் இசையுடன் சம்பந்தப்பட்டவர்களாகத்தான் இருந்து வராங்க.. என் அப்பாவுடைய தாத்தா ஒரு சங்கீத கலாநிதி. அவர் மட்டும் இல்லாமல், என் தாத்தா, என் அம்மா, அப்பா என எல்லோருக்குமே இசைப் பற்றிய புரிதலும் அதன் மேல் தனி ஆர்வமும் உண்டு. அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் அம்மா, அப்பா அவர்களின் பேஷன் மற்றும் அவர்களுக்குப் பிடித்த வேலையினை பார்த்து வந்தாலும், இசையையும் அவர்கள் இதுவரைக்கும் விடவில்லை.

இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்கும் இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. விவரம் தெரிய ஆரம்பிக்கும் போதே கர்நாடக இசையை கத்துக்க ஆரம்பிச்சேன். முதன்முதலில் எனக்கு அம்மா தான் பாட்டுச் சொல்லி கொடுத்தாங்க. அவங்கதான் என் முதல் குரு. அதன் பிறகு நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சங்கரி என்ற ஆசிரியையிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் அவரிடம் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

அப்பாவிற்கு வேலை காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால், நாங்க அங்க போயிட்டோம். அங்க இருக்கும் இசை முற்றிலும் மாறுபட்டு இருந்ததை கவனித்தேன். இங்கு நேரடியாக ஆசிரியரிடம் கற்றுக் கொள்வோம். அங்கு ஆன்லைன் முறையில்தான் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு வருடம் அப்படித்தான் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு இந்தியா திரும்பி வந்ததும், வித்வான் ஆர்.கே.ராமகுமார் என்றவரிடம் முழுமையாக கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்டேன். தற்போது வரை அவரிடம்தான் என் பயிற்சியினை தொடர்ந்து வருகிறேன்’’ என்றவர் இதுவரை 77 கச்சேரிகளில் பாடியுள்ளதாக தெரிவித்தார்.

‘‘மனோதர்மம் (improvisation), சொந்தமாக பாட்டுப் பாடுவது என்னும் ஒரு வகையையும் அவரை பார்த்துதான் கற்றுக் கொண்டேன். இசை என்னுடைய விருப்பம் என்று சொல்வதை விட கனவு என்றே சொல்லலாம். இதற்காக என் குடும்பம் வழங்கிய அதே அளவு ஆதரவு நான் படிக்கும் பள்ளியிலும் கிடைத்தது. அதற்காக படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்றெல்லாம் கிடையாது. எனக்கு அவர்கள் கொடுத்த அந்த சுதந்திரம் மற்றும் என் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு படிப்பிலும் என்னால் முடிந்த அளவிற்கு கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற்று வருகிறேன்.

கடந்த ஜனவரி மாதம், Semester At Sea என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள கொலோராடோ பல்கலைக்கழகம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சென்னையின் கலாச்சார தூதரக பிரதிநிதியாக ரோட்டரி மூலம் தேர்ந்தெடுத்து அனுப்பினாங்க. அங்க எனக்கு இந்தியாவின் இசையைப் பற்றி பேச நிறைய வாய்ப்பு கிடைத்தது. உலகில் இருந்து பலதரப்பட்ட இசைக் கலைஞர்கள் அதில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பழகுவதற்கும், இசை பற்றி தெரிந்துகொள்வதற்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக எனக்கு அமைந்தது. இப்போது நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறேன்’’ என்றவர், தான் எழுதிய புத்தகத்தைப் பற்றியும் விளக்குகிறார்.

‘‘பள்ளியில் படிக்கும் போது பஜனைக் குழுவில் சேர்ந்து இருந்தேன். நான்காவது படிக்கும் போது துவங்கி பள்ளி மூலமாக பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுப் பெற்றிருக்கேன். அம்மாவுடைய உதவியால் பல கச்சேரிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். குழுவாக சேர்ந்து பாடுவது மட்டும் இல்லாமல், தனியாக கச்சேரியும் நடத்துகிறேன். அதில் முன்னணி பாடகியாகவும் நிறைய போட்டிகள் மற்றும் கச்சேரியில் பாடியிருக்கேன். ஒரு சில போட்டிகளுக்கு பள்ளியில் இருந்து முதன்மை பாடகியாக என்னை தேர்ந்தெடுத்து அனுப்புவாங்க. அதெல்லாம்தான் தற்போது இந்த அளவிற்கு என்னை உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் ப்ளாக் (blog) மூலம் என் கவிதைகள், எண்ணங்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அதன் ஒரு பகுதியாக ‘Joy’ என்ற புத்தகத்தையும் நான் எழுதி பதிப்பிச்சிருக்கேன். எனக்கு இதற்கு உதவியது 16 லீவ்ஸ் என்னும் பதிப்பகம்தான். இந்தப் புத்தகத்திற்கு ஜாய் என பெயர் வைக்க காரணம் நான் அதிகம் பார்த்தவரைக்கும், கேட்டவரைக்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாயை ஒருசில மக்கள் அதிகம் விரும்புவதில்லை. அதனால் நாயை மையமாகக் கொண்டுதான் இந்தக் கதையை எழுதியிருக்கேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாயா என்ற சின்னப் பெண்ணிற்கு அவள் வளர்க்கும், நாய் மட்டுமே முழுக்க முழுக்க சந்தோஷமாகவும், உலகமாகவும் மாறிப்போனது குறித்த கதைதான் இது. இந்தப் புத்தகத்திற்கு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது’’ என்றார். நந்திதாவிற்கு போட்டிகளில் பங்கு பெறுவதை விட கச்சேரி செய்வதில்தான் அதிக விருப்பமாம்.

‘‘போட்டி என்று வரும்போது நாம வெற்றிப்பெறணும் என்னும் ஒரு நோக்கத்துடன்தான் பாடுவோம். ஆனால் கச்சேரி அப்படி இல்லை. நம்மைச்சுற்றி இசை வாத்தியங்கள் முழங்க நாம் பாடுவோம். சில சமயம் குழுவாகவும் பாடுவோம். அது முழுக்க முழுக்க மன நிறைவோடு, சந்தோஷமாகவும் இருக்கும். சென்னையில் இருக்கும் சபாக்களில்தான் அதிகமாக என் கச்சேரிகள் நடந்திருக்கு. 2021-ல் நவராத்திரி சமயத்தில் என் முதல் கச்சேரி நடந்தது.

என்னுடைய சின்ன வயதில் இசைஞானி இளையராஜா அவர்களுக்காக கன்னட மொழியில் ஒரு பாடலில் ஒரு சில வரிகள் பாடியிருக்கேன். கார்த்திக் ராஜா அவர்களுடைய ஒரு ப்ராஜெக்டிலும் பாட வாய்ப்பு கிடைத்தது. சினிமா பாடல்கள் பாட பிடித்தாலும், அதைவிட அதிகமாக கர்நாடக இசையில்தான் ஆர்வம் அதிகம். அப்பாவும் ஒரு சில சினிமா பாடல்கள் பாடியிருக்காங்க. அவருக்கென ஒரு தனி குழுவும் உள்ளது.

எதிர்காலத்தில் சினிமா பாடல்கள் பாடுவேனா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக கர்நாடக இசையில் இன்னும் நிறைய கற்றுக்கொண்டு பல கச்சேரிகளில் பாட வேண்டும்’’ என்று புன்னகையுடன் பதிலளித்த நந்திதா, லைவ்4யூ ஹால் ஆப் பேம் சிறந்த பாடகர் என்றும் கலாதாரி விருதும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!