ஏன்? எதற்கு? எப்படி?

?தட்சிணாமூர்த்தியும் குருபகவானும் ஒரே ஒருவரா? அல்லது வெவ்வேறு கடவுளா?
– கார்த்திக் சண்முகம், சென்னை.
சந்தேகமே இல்லை, இருவரும் வேறு வேறு தான். இவர்கள் இருவரில் தட்சிணாமூர்த்திதான் கடவுள். நீங்கள் குறிப்பிடும் குரு என்பவர், கடவுள் இட்ட பணியைச் செய்யும் நவகிரகங்களில் ஒருவர். நவகிரங்களை கடவுளோடு ஒப்பிடக்கூடாது. கடவுளின் ஆணைக்கேற்ப செயல்படும் பணியாளர்களே நவகிரகங்கள். கடவுளின் அருளினைப் பெற்றவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். நவகிரகங்களில், சூரியன் ஒருவரைத் தவிர மற்ற கிரஹங்களை பகவான் என்ற பெயரில் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. தட்சிணாமூர்த்தி மற்றும் குரு ஆகிய இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய நவகிரகங்களில் உள்ள குருவினை இனி வியாழன் என்ற பெயரில் காண்போம். தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் உள்ள வியாழனின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல, வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். இவருக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. தட்சிணாமூர்த்தி வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். “ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் வடமூல நிவாஸினம்’’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள். அதாவது, வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு, ஆலமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டிருப்பவர் என்று தட்சிணாமூர்த்தியைப் பற்றி வேதம் விவரிக்கிறது. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக, ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராகக் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில், தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதை ஆன்மிக அன்பர்கள் புரிந்துகொள்வது நல்லது.

?சிலர், கைகளில் பல வித வண்ணங் களில் கயிறு கட்டிக்கொள்கிறார்களே, இது நல்லதா?
– துரைக்கண்ணு, விருதுநகர்.
நல்லது என்பதால்தானே கட்டிக் கொள்கிறார்கள். நம்மைப் பாதுகாக்கின்ற ரட்சை அது என்கின்ற நம்பிக்கையில் மந்திரிக்கப்பட்ட கயிற்றினை கட்டிக் கொள்கிறார்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று எந்த தேவதையை நினைத்து மந்திர ஜபம் செய்கிறார்களோ, அதற்குரிய வண்ணத்தில் கயிற்றினை மந்திரித்து கட்டிக் கொள்கிறார்கள். திருஷ்டி தோஷம் உட்பட பல தோஷங்களையும் போக்கும் சக்தி இந்த கயிற்றிற்கு உண்டு என்பது நமது நம்பிக்கை. இதில் தவறேதும் இல்லை.

?மனித வாழ்க்கையில் நவக்கிரகங்களான சூரியன் – சந்திரன் ஆகியவற்றின் பங்களிப்பு என்ன?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஒவ்வோர் உடம்பிலும் உள்ள ஆத்மா, மனம், பலம், வாக்கு ஞானம், காமம், துயரம் முதலான அனைத்திற்கும், ஒவ்வொரு கிரகம் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளது. இவைகளைத் தவிர எலும்பு, ரத்தம், மூளை, தோல், தசை, இந்திரியம், நரம்பு ஆகியவைகளும் நம் உடம்பில் உள்ளன. இந்த இரண்டு வகைப்பட்டவைகளிலும், சூரியன் முதலான நவக்கிரகங்கள் (நம் உடம்பில்) இடம் பெற்றிருக்கின்றன. அதன்படி, சூரியன் – ஆத்மாவாகவும் எலும்பாகவும் இருக்கிறது. சந்திரன் – மனமாகவும் ரத்தமாகவும் இருக்கிறது. மற்ற நவக்கிரகங்களுக்கும் இவ்வாறு உண்டு.
ஓர் உதாரணம்: குளுமையாக, ஔிக்கதிர்களை வீசி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டிய சந்திரன், கொதிப்பு அடைந்தால் என்னவாகும்? நமது உடம்பில் அந்த சந்திரன் இடம் பெற்றிருக்கும் மனம் கொதிப்படைந்தால், ரத்தம் சூடேறும். பிறகென்ன? ரத்தக் கொதிப்புதான். (இது உதாரணம் மட்டுமே) அதுபோல நமக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணங்களை, ஜோதிட வல்லுனர்கள் மூலம் அறிந்து, அதற்கு உண்டானவற்றைச் செய்து, நன்மை பெறலாம்.

?சாங்கிய யோகம், கர்மயோகம் என்றால் என்ன? தெளிவுபடுத்துங்கள்.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
பகவத்கீதையின் இரண்டாவது அத்தி யாயத்திற்கு “சாங்கிய யோகம்’’ என்று பெயர். சாங்கியம் என்பதற்கு ஞானம் என்று பொருள். அதாவது, உண்மையான அறிவு எது என்பதை விளக்குவதே சாங்கிய யோகம். பிரம்மம் என்பது இரண்டற்றது, அது சத்தியமானது என்பதை விளக்குவதே சாங்கிய யோகம். இது சாத்வீகம், தாமஸம், ராஜஸம் என்கிற முக்குணங்கள், பஞ்ச பூதங்கள், மனம் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு, இருப்பு, அழிவு குறித்து விரிவாக
எடுத்துச் சொல்கிறது. கர்மயோகம் என்பதை கர்மம் + யோகம் என்று பிரித்து பொருள் அறியலாம். அதாவது உடல், மனம் மற்றும் வாக்கு ஆகியவற்றால் செய்யும் செயல்களே கர்மம் ஆகும். யோகம் என்ற வார்த்தைக்கு சாதனை என்று பொருள் காண வேண்டும். ஒரு செயலை வெறும் கர்மம் என்று நினைத்து செய்யும்போது அச்செயல் மனதில் விருப்பு வெறுப்பினைத் தந்து மனதை பாரமாக்குகிறது. அதனால், மனிதன் துயரம் அடைகிறான். ஆனால், அதையே கர்மயோக சாதனையாக நினைத்து செய்யும்போது விருப்பு வெறுப்பு ஏதுமின்றி மனம் அமைதி பெறுகிறது. சுருங்கச் சொன்னால் வாழ்வினில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்துடன் வாழ்வதே கர்மயோகம் என்பது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வதே கர்மயோகம் ஆகும். இதுவே பகவத்கீதை, நமக்கு எடுத்துரைக்கும் பிரதான உபதேசம். இதனைப் புரிந்துகொண்டு நடப்பவர்களை துன்பம் என்பது நெருங்கவே நெருங்காது.

?கெட்ட கனவுகள் வராமலிருக்க சொல்ல வேண்டிய இறை மந்திரம் என்ன?
– அயன்புரம் சத்திய நாராயணன்.
ஆஞ்சநேயரைத் தியானம் செய்து, ‘அஞ்சிலே / புத்திர் பலம் அச்யுதம்’ எனும் சுலோகங்களில் ஒன்றைச் சொல்லிவிட்டு, தூங்கச் சென்றால், கெட்ட கனவுகள் வராது. அப்பாடல்கள்;

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்ஸம்
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே

தொகுப்பு: திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: