நன்கு ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்

இந்த பிரபஞ்சம் விசித்திரமானது. இதில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் அவ்வளவு எளிதாகக் காரண காரியங்கள் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், ஒவ்வொரு செயலின் பின்னாலும், ஒரு காரணமும் காரியமும் இருக்கிறது. சிலவற்றை அனுமானிக்க முடியும். சிலவற்றை அனுமானிக்க முடியாது. தன்னுடைய காது ஓரத்தில் நரைத்த ஒரு வெள்ளை முடியைப் பார்த்து “தனக்கு வயதாகிவிட்டது; இனி குடும்பப் பொறுப்புக்களை நம்முடைய மூத்த குமாரனாகிய ராமபிரானிடத்தில் தந்துவிட்டு அடுத்த நிலைக்குப் போக வேண்டும்” என்ற முடிவுக்கு வருகின்றான் தசரதன். இது அவனுடைய தனிப்பட்ட முடிவு என்ற போதிலும், இந்த உலகத்தின் சூழ்நிலையும், தேவையும் அந்த முடிவை தீர்மானிக்கிறது என்பதை கம்பன் ஒரு அற்புதமான பாட்டில் காண்பிக்கின்றார்.

``தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற்றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்’’.

உலகத்தவர்க்கு தீங்கு செய்த ராவணனின் வினையின் (Effect of ill karma) விளைவுதான், தசரதனுக்கு நரை முடியாக வந்தது. அந்த நரைமுடியைக் கண்ணாடியில் கண்டான்.தசரதன், ராமனுக்கு உடனே முடி சூட்டிவிட்டு, தான் வானப்பிரஸ்தம் போகும் முடிவுக்கு வந்ததால், சில குழப்பங்கள் நடக்கின்றன. அதிலே மனம் வெதும்பிய தசரதன், ஆயுளும் முடிந்து போகிறது. அவன் அந்த முடிவுக்கு வராவிட்டால், இத்தனை சிக்கல்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. தசரதன் எடுத்த இந்த முடிவில் உலக நன்மை ஏற்பட வேண்டும் என்ற இயற்கையின் முடிவு நரைமுடியாக வருகிறது. ராவணன் கொடுமை, எல்லை மீறிப் போகிறது. தேவர்கள் புகலிடம் தேடி அலைகின்றனர். அவர்கள் துன்பத்திற்கு ஒரு முடிவு வரவேண்டும் என்றால் ராவணன் முடிய வேண்டும்.

தசரதன் தொடர்ந்து ஆட்சிசெய்து கொண்டிருந்தால், ராவணனுக்கு எப்படி முடிவு வரும்? அப்படியானால் தசரதன் ஆட்சி முடிய வேண்டும். அதே நேரத்தில், ராமனும் அயோத்தியை ஆளக்கூடாது. தசரதன் ஆண்டு கொண்டு, ராமன் இளவரசனாக இருக்கின்ற வரைக்கும், அவரவர்கள் வாழ்க்கை, அவரவர்கள் நடத்திச் செல்லப் போகின்றார்கள். ராமன், காட்டுக்கு போகின்ற நிலை வரப்போவது கிடையாது. ராமன், மனைவியோடு காட்டுக்குப் போகாதவரை ராவணனுக்கும் முடிவு வராது. எனவே, தசரதனுடைய முடிவு தசரதனுடைய ஆயுளை பங்கமாக்கவும், ராமன் வனம் போகவும், சீதை பிரியவும், இதனுடைய முடிந்த முடிவாக ராவண வதம் நடக்கவும் காரணமாகிறது. சரி, தசரதன் தன்னுடைய மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று நிச்சயித்துவிட்டான்.

உடனே அவன் தன்னுடைய முடிவை அமல்படுத்தலாம். அன்றைக்கு முடியாட்சிதான் நடந்துகொண்டிருந்தது. ‘‘என்னுடைய மகனுக்கு முடிசூட்டப் போகிறேன்’’ என்று தசரதன் அறிவித்து விட்டால், எதிர்ப்பதற்கு ஆள் கிடையாது. அவனை எதிர்க்கக் கூடிய பலமும் யாருக்கும் கிடையாது. ஆயினும், தசரதன் தனக்குக் கீழ் உள்ள அரசர்கள் ராமனை ஏற்றுக்கொள்வார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்கும், தன்னுடைய மந்திரிகள் மற்றும் தளபதிகள் ஆலோசனையைக் கேட்பதற்கும், எல்லா வற்றையும்விட, மக்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது, இது சரியான சமயம் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரு காரியத்தைச் செய்கின்றான். உடனடியாக ஓலை அனுப்பி தன் நாட்டைச் சுற்றி இருக்கும் பல தேசங்களின் மன்னர்களையும் அயோத்திக்கு உடனடியாக வரவழைக்கிறான். தன்னுடைய மந்திரி சபையையும் கூட்டுகிறான்.

அதோடு மக்களுடைய பிரதிநிதிகளையும் அழைத்து வெளிப் படையாக ஆலோசனை நடத்துகிறான். தசரதனுடைய அழைப்பிற்கு இணங்க ஒரு பெரும் சபை கூடுகிறது. எல்லா தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் அங்கு இருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும், ஏன் தசரதன் அவசரமாக இந்த அவையைக் கூட்டி இருக்கிறான் என்ற கேள்விக்குறி இருக்கிறது. தசரதன் சொல்லாத வரைக்கும் யாருக்கும் தெரியாது. தசரதன் பேச ஆரம்பிக்கின்றான். விரிவாகவே பேசுகின்றான். ‘‘என் மகன் ராமனுக்கு மகுடம் சூட்டப் போகின்றேன். அதை அறிவிக்கவே இந்த சபை’’ என்று அவன் ஒரே வரியிலேயே சொல்லியிருக்கலாம். ஆனால், தசரதன் முதலில் தன்னுடைய நிலைப்பாடுகளை விரிவாகத் தெரிவித்து ‘‘ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்’’ என்கிற காரணங்களையும் விரிவாகத் தெரிவிக்கிறான்.

ஒரு மன்னன், தான் எடுக்கும் முடிவு எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, வெகுஜனங்களின் அபிப்ராயமாக, தனக்குக் கீழ் உள்ள மன்னர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதில் எத்தனை கவனம் செலுத்தினான் என்பது, தசரதனின் இந்தச் செய்கையிலிருந்து நமக்குத் தெரியவரும். அரசு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ராமாயணம் தருகின்ற ஒரு அற்புதமான செய்தி. ராமாயணம் படிக்கின்ற தனி மனிதர்களுக்கு இந்த செய்தி எப்படி உதவும் என்றால், ஒரு குடும்பத் தலைவன், முக்கியமான முடிவு எடுக்கின்ற பொழுது, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், நெருங்கிய நண்பர்களையும், உறவுகளையும் அழைத்து ஆலோசனை பெற வேண்டும். இது தனிமனிதனுக்கு இராமாயணம் காட்டுகின்ற வழி.

தேஜஸ்வி

The post நன்கு ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: