ஏன் எதற்கு எப்படி ?

?கர்ப்பத்திற்கு என்று சில வாஸ்து விதிகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்? இது உண்மையா? ஆம் எனில் அவை என்ன?
– ராமராஜன், பட்டினபாக்கம்.

கருவுறுதலுக்கு வாஸ்து துணை புரியும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவித ஆதாரமும் இல்லை என்றாலும், படுக்கை அறை சம்பந்தப்பட்ட ஒரு சில கருத்துக்களை சிலர், வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் பரப்பி வருகிறார்கள். தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் படுக்கை அறை இருக்க வேண்டும், தெற்கு திசையில் தலையும் வடக்கு திசை நோக்கி காலும் இருப்பது போன்று படுத்து உறங்க வேண்டும், மிகவும் இருண்ட அறையாக இருக்கக் கூடாது, வெளிர்நிறங்கள் இருப்பது போன்ற வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற பல விதிமுறைகளைச் சொல்கிறார்கள். ஆனால், இதற்கும் வாஸ்து சாஸ்திரம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை. இவை அனைத்தும் அந்த வீடு அமைந்திருக்கும் புவியியல் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஆகும்.

?சித்தர்கள், மகான்களின் சமாதியில் எவ்விதம் வழிபட வேண்டும்?
– அ.யாழினி பர்வதம், சென்னை.

சித்தர்கள் என்பவர்கள் வேறு, மகான்கள் என்பவர்கள் வேறு. சித்த புருஷர்கள் அதிகமாக பேசமாட்டார்கள். தங்களுடைய சித்தத்தின் மூலம் பரம்பொருளைக் கண்டவர்கள் சித்தர்கள். அவர்கள் இன்றளவும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். சாமானிய மனிதர்களின் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள். எந்த உருவத்தில் எப்படி வருவார்கள் என்பதையே புரிந்துகொள்ள இயலாது. சித்தர்களைப் பொறுத்தவரை, சமாதி என்று சொல்வதைவிட அவர்களை நினைத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சித்தர்களின் ஆலயங்களில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து வழிபட வேண்டும். மகான்கள் என்பவர்கள், அவ்வப்போது நமக்கு அறிவுரைகளைத் தந்தவர்கள். உதாரணத்திற்கு ராகவேந்திரர், சாயிபாபா, மகாபெரியவா போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களது சமாதியை “அதிஷ்டானம்’’ என்று சொல்வார்கள். அதிஷ்டானத்திற்குச் செல்லும்போது, குருவின் சந்நதிக்குச் செல்கிறோம் என்ற எண்ணத்தோடு பணிவுடன் சென்று பயபக்தியுடன் வணங்க வேண்டும். அத்துடன், அவர்கள் சொன்ன அறிவுரைகளை மனதில் நிலைநிறுத்தி, அதன்படி நாம் வாழவேண்டும் என்ற சங்கல்பத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும். மகான்கள் சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றி நடப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடு ஆகும்.

?வீட்டில் நகங்களை வெட்டுவது தரித்திரமான செயலா?
– த.சத்தியநாராயணன்,சென்னை.

வீட்டில் வெட்டாமல் வேறு எங்கு சென்று வெட்ட முடியும்? முடி வெட்டிக் கொள்வதற்கான வபன சாஸ்திரத்திற்குள் இந்த நகம் வெட்டுதலும் அடங்கும். முடி வெட்டிக் கொள்ளும் நாளன்றே இந்த நகங்களையும் வெட்டிக் கொள்ளலாம். வீட்டிற்குள் நட்டநடு கூடத்திற்குள் அமர்ந்து வெட்டாமல், தோட்டத்தில் அமர்ந்து வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டப்படும் நகங்கள் வீட்டிற்குள் எங்கும் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைமுடி வீட்டில் கிடந்தால் தரித்திரம் என்று சொல்வார்கள் அல்லவா, அதே போலத்தான் இதுவும். நகங்கள், வீட்டின் தரையில் சிதறி இருக்கக் கூடாது. குளிப்பதற்கு முன்பு நகங்களை வெட்டிவிட வேண்டும். நகங்களை வெட்டியவுடன் தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் வராமல், குளித்துவிட்டு வர வேண்டும். முடி வெட்டிக் கொண்டால் எந்த விதிமுறைகளை பின்பற்றுகிறோமோ அதே விதிகளை நகங்கள் வெட்டும்போதும் பின்பற்ற வேண்டும். எக்காலத்திலும் பல்லால் நகங்களை கடித்துத் துப்பக்கூடாது. இதனால் உடல் ஆரோக்யம் குறைவதோடு, வீட்டிலும் மன நிம்மதியை இழக்க நேரிடும்.

?ஏழரைச் சனியினால் பாதிப்பு ஏற்படுமா?
– த.நேரு, வெண்கரும்பூர்.

நிச்சயமாக இல்லை. ஏழரைச் சனியின் காலம் என்பது நமக்கு சோதனைகளின் மூலம் அனுபவப் பாடத்தினைப் போதிப்பது ஆகும். நிதானமாகச் செயல்படவேண்டும் என்பதை அறிவுறுத்துவதே சனியின் பணி ஆகும். சனியின் பணி என்பது சாலையில் இருக்கும் வேகத்தடை போன்றது. சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும்போது வேகத்தடை வருகிறது என்றால், வாகனத்தின் வேகத்தினைக் குறைத்து நிதானமாகக் கடந்து செல்ல வேண்டும் அல்லவா. அதுபோலத்தான் ஏழரைச் சனியின் காலமும். அந்த இடத்தில் எதற்காக வேகத்தடை அமைத்திருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். விபத்து நடக்காமல் தடுத்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தானே வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது! அதுபோலத்தான், ஏழரைச்சனியின் காலமும் நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டாலே போதும், சனியின் அருளால் தீர்க்காயுளுடன் வாழ்வோம்.

?மணிபர்சில் எந்த ஸ்வாமி படம் வைக்கலாம்?
– பொன்விழி, அன்னூர்.

மகாலட்சுமி, காமதேனு, குபேரன், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகியோரின் படங்களை வைத்திருக்கலாம். பாதுகாப்பினை விரும்புபவர்கள் வாராஹி அம்மனின் படத்தினை வைத்துக் கொள்ளலாம்.

?சிலர் தனது பிறந்த நாளை நட்சத்திரப்படி கொண்டாடு கிறார்கள். சிலர் ஆங்கில தேதியின்படி கொண்டாடுகிறார்கள். எது சரி?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

நமது தர்மசாஸ்திரப்படி, ஆங்கில தேதியில் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சௌரமானம் என்று அழைக்கப்படுகின்ற சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் மாதக்கணக்கினை வைத்திருப்பவர்கள், அந்தந்த தமிழ் மாதத்தில் வரக்கூடிய அவர்களது ஜென்ம நட்சத்திர நாளில் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். இந்த நடைமுறை தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பின்பற்றப்படுகிறது. சாந்திரமானம் என்று அழைக்கப்படுகின்ற சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மாதக்கணக்கினை வைத்திருப்பவர்கள் அந்த சாந்திரமான மாதத்தில் வரக் கூடிய திதியினைக் கணக்கில் கொண்டு தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரப் பிரதேசம், தெற்கு கர்நாடகா தவிர பெரும்பாலும் நம் பாரத தேசத்தின் மற்ற பகுதிகளில் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. உதாரணத்திற்கு, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராமநவமி போன்றவற்றைச் சொல்லலாம். இந்த இரண்டு முறைகளில் நாம் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிந்து அதன்படி பிறந்தநாளைக் கொண்டாடுவதே சரியானது ஆகும்.

 

The post ஏன் எதற்கு எப்படி ? appeared first on Dinakaran.

Related Stories: