சிறுகதை

நன்றி குங்குமம் தோழி

மோதி மிதித்துவிடு பாப்பா…

“ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதியின் பாடலை தமிழ் மிஸ் அழகாக ராகத்துடன் பாடினார். அதை கோரஸாக அடியொற்றி பாடினர் மூன்றாம் வகுப்பு மாணவிகள். ஆனால் அதன் அர்த்தம் சில இடங்களில் ஏன் பல இடங்களில் புரியவில்லை அவர்களுக்கு. ஆயினும் மிஸ் பாடப்பாட, அவர்களும் சேர்ந்து பாடினர். இங்கிலீஷ் மீடியம் படிக்கும் குழந்தைகள் என்றாலும், தாய் மொழி தமிழ் என்பதால் சில வரிகள் புரிந்தன. தவறு செய்பவர்களைக் கண்டு பயப்படக்கூடாது என்று வலியுறுத்திவிட்டு மற்ற வரிகளை பெரியவர்களாகும் போது நீங்களே புரிந்துகொள்வீர்கள் என மிஸ் வகுப்பறையிலிருந்து விடைபெற்றார்.

ஆனால் அனன்யாவிற்கு நாம் பெரியவராவது எப்போது எனப்புரியவில்லை. வீடு வந்ததும் முதலில் அம்மாவிடம் அவள் கேட்ட கேள்வியே அதுதான். “ஏம்மா நான் எப்ப பெரியவளாவேன்?”அம்மாவோ பதைபதைத்தவாறு, “ஏண்டி இந்த வயசுல என்ன அவசரம் அதுக்கு? இன்னும் ரொம்ப நாளிருக்கு. முதலில் யூனிஃபார்மை மாற்று” என அவசரமாய் பேச்சை மாற்றினாள்.

“அனன்யா டான்ஸ் கிளாசுக்கு நேரமாச்சு வாம்மா சீக்கிரம்” என்றார் பாட்டி. டான்ஸ் கிளாஸ் முடிந்து வீடு திரும்பும் போது பாட்டியிடம் அனன்யா “ஏன் பாட்டி தினமும் போற இந்த இடத்துக்கு எனக்கு வழி தெரியாதா? நீ ஏன் கூட வர்ற” என்று கேட்டாள். பாட்டியோ “குட்டிம்மா இப்ப எங்க காலம் மாதிரியில்ல. காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு. பொம்பள புள்ளைங்களை பொத்தி வளக்கணும்மா அதான்” என்றார். அனன்யாவிற்கு புரிந்தும் புரியாதது போலிருந்தது.

வீட்டில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த தாத்தா “இதென்ன கலிகாலம் இந்தக் காமக்கொடூரன்கள் சின்னஞ் சிறுமிகளைக்கூட விட்டு வைக்கறதில்லையா? எங்கப் பார்த்தாலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்று பலவிதமாய் நியூஸ்ல சொல்றாங்க, இப்படிப்பட்டவர்களை நிக்க வெச்சு சுட்டுத்தள்ளணும்” என்றார்.

கூடயிருந்த அப்பாவோ, “என்னப்பா பண்றது பொருளாதார தேவைகளுக்காக பெண்களும் இந்த வீட்டைவிட்டு அலுவலகம் அது இது என இரவு, பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியதிருக்கு. இதில் குழந்தைகளுக்கு நேர்வதை கவனிக்கவோ, கண்டுபிடிக்கவோ அவர்களுக்கு ஏது நேரம்? ஏதோ கூட்டுக்குடும்பத்தில் தாத்தா, பாட்டியோடு வாழும் குழந்தைகள் இன்று வரம் பெற்றவராவர் என்றார்.” “அதிருக்கட்டும்பா பெண்கள் தங்கள் கால்களில் நிற்கக்கூடாதுன்னு நான் சொல்லலை.

முதலில் தங்களை தாங்களே பாதுகாத்துக்க தெரியணும் அவங்களுக்கு. வெறும் பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு முக்கியமில்லை. காந்தி சொன்ன மாதிரி ஒரு பெண் நடு இரவில் நகையணிந்து தனியே சென்றுவிட்டு, உடலுக்கும், உடமைக்கும் எந்த பாதிப்புமின்றி வீடு திரும்பினால்தான் இந்தியா உண்மையான சுதந்திரம் அடைந்ததாகும்” என்று பெருமூச்சுவிட்டார்.

“அட, இவங்களுக்கு பயந்துகிட்டு, புள்ளைங்களை படிக்க அனுப்பாமல் இருக்க முடியுமா? என் ஃபிரண்ட் அனிதா தன் பொண்ணை தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள சேர்த்து விட்டிருக்கா. நம்ம அனன்யாவையும் இதில் சேர்க்கலாமா?” என்ற அம்மாவின் கருத்தை அனைவரும் ஆதரித்தனர்.இப்போதெல்லாம் டான்ஸ் கிளாஸோடு அனன்யா தற்காப்புக்கலை பயிற்சியும் எடுத்தாள். ஆனால் வீட்டுக்கு வந்தபின், அம்மாவிடம் “ரொம்ப டயர்டாயிருக்கும்மா. இந்த புது கிளாஸ் வேணாம்மா” என்றாள். ஆனால் அம்மாவோ “இல்ல குட்டிம்மா அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வேன் புரிஞ்சுக்கோ” என்றாள்.

அன்று பள்ளி வேனில் சிறுமிகள் அனைவரும் “ஓடி விளையாடு பாப்பா” என்று கோரஸாகப் பாடியபடி வந்து கொண்டிருந்தனர். அன்று ஆயாம்மா வராததால் புதிதாக ஒரு அண்ணா குழந்தைகளை ஏற்றி இறக்கி விட்டுக்கொண்டிருந்தான். அனன்யாதான் கடைசி பாப்பா என்று அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் “உன் பேரென்ன..? டிரைவரண்ணே கொஞ்சம் மெதுவா சுத்திப்போங்க” என்றான். பின் அவன் கைகளால் அனன்யாவை அணைத்துக் கொண்டு அவளின் அந்தரங்கப் பகுதிகளை தடவினான். அனன்யாவிற்கு யாரும் தன்னை இப்படித் தீண்டியதில்லை என்ற உண்மை உறைக்க “நோ” என அவள் கைகளைத் தட்டிவிட்டு முறைத்தாள்.

அவனோ “பாப்பா சாக்லெட் சாப்பிடறியா” என கொஞ்ச, “எனக்கு வேணாம். பல்லுல பூச்சி வரும்” என மறுத்தாள். “ஜூஸ் குடிக்கிறியா” என்றான். அனன்யாவோ “எனக்கு பாத்ரூம் போகணும். சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிப்போ” என்று மறுத்தாள். வண்டி டிராஃபிக் சிக்னலில் நின்றது. அருகே ஒரு போலீஸ்காரர். இதுதான் தருணம் என உணர்ந்த அனன்யா ‘சட்டென’ கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைத் தாக்கி ஒரு கடி கடித்தவள், விடுப்புடன் ஓடிச் சென்று வேன் கதவைத் திறந்து, குதித்தாள்.

‘குடுகுடுவென’ ஓடி, டிராஃபிக் போலீஸிடம் “அங்கிள் இவங்க ஸ்கூல்லேந்து என்னை வீட்டுக்கு கூட்டிப் போகாம என்னைத் தப்பா தொடறாங்க” என அழுதாள். ேவனை மடக்கி நிறுத்திய காவலர், அனன்யாவிடம் “நீ யாரு, எந்த ஸ்கூல், அம்மா, அப்பா யார்? வீட்டு விலாசம், ஃபோன் நம்பரென்ன?” என பரிவாக விசாரித்தார். பின் அம்மா, அப்பாவை அலுவலகத்திலிருந்து வரவழைத்து, அவர்களிடம் விஷயத்தைக் கூறியவர், “சின்னப் பொண்ணுன்னாலும் தைரியமா வளர்த்திருக்கீங்க சார்” என்றார். பின் குற்றவாளிகள் பக்கம் திரும்பி, “மாப்பிள்ளைகளா மாமியார் வீட்டுக்குப் போலாமா?” என்றார்.

தாய், தந்தை கரம் பற்றிச் சென்ற அனன்யா “சட்டென அவர்களின் கரங்களை உதறியவள் திரும்ப ஓடி வந்து அக்கயவர்களின் முகத்தில் ‘தூ’என துப்பினாள். பின் “நான் பெரியவளானதும் உன்ன என்ன பண்றேன் பார்” என ஆங்காரமாய் கத்தினாள். அனன்யா என்ன இது என அம்மா அவள் கைப்பிடித்து தடுத்து அழைத்துச்செல்ல முற்பட, “விடும்மா” எனத் திமிறியவள் ‘ஓடி விளையாடு பாப்பா’’பாட்டுல பாரதியார் ‘‘பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளக்கூடாது பாப்பா.

மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’’ எனப் பாடி இருக்கார். எங்க மிஸ் சொல்லித்தந்திருக்காங்க. அம்மா தப்பு செஞ்சா இப்படித்தான் செய்யணும்னு” என ஆவேசமாக பேசினாள் அனன்யா. வயதுக்கு மீறிய அவள் பேச்சில் அம்மா உணர்ந்து கொண்டாள் அனன்யாக் குட்டி பெரிய பெண்ணாகிவிட்டதை! போலீஸ்காரரும் அய்யாவும் திகைத்து நின்றனர்.இப்பல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் தற்காப்புக்கலையை வெகு சிரத்தையாக கற்று வருகிறாள் அனன்யா.

தொகுப்பு: சங்கரி கிருஷ்ணா

The post சிறுகதை appeared first on Dinakaran.

Related Stories: