பறக்கும்படை சோதனையில் சிக்கியது ரூ.10.8 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்

ராசிபுரம்: நாமக்கல், திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.10.8 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு சோதனைச்சாவடி அருகே, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கொரியர் சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், 3 சாக்குமூட்டைகளில் 39 நகை பெட்டிகள் இருந்தன. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ நகைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புலியூர்குறிச்சி பகுதியில் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டரை கிலோ தங்க நகைகளும், 4 கிலோ வெள்ளி நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மெயின் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த வந்த வேனை மறித்து சோதனை செய்தனர்.

வேனில் 9 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்ததும், அதற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.9 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நகைகளும் அந்தந்த மாவட்ட கருவூலத்தில் பறக்கும் படை அதிகரிகள் ஒப்படைத்தனர்.

* பிடிபட்ட சீல் வைத்த கன்டெய்னர் லாரி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோளூர் ரயில்வே கேட் அருகே பறக்கும் படையினர், நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். கன்டெய்னருக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை திறக்குமாறு அதிகாரிகள் கூறினார். ஆனால் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராஜகோபால், கன்டெய்னரில் ஆன்லைன் நிறுவனத்தின் பொருட்கள் மட்டுமே உள்ளது.

சீல் வைக்கப்பட்டு இருப்பதால் திறக்க முடியாது. கோவையில் இருந்து இங்கு வரும் வரை 9 இடங்களில் சோதனை நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த பறக்கும்படையினர், கன்டெய்னரை திறந்து பார்க்காமல் அனுப்ப முடியாது எனக் கூறி லாரியை நிறுத்தி வைத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு வந்து சீல் வைக்கப்பட்ட கன்டெய்னரை திறந்தார். உள்ளே இருந்த ஆன்லைன் பொருட்களையும், அதற்கான ஆவணங்களையும் சோதனையிட்ட பிறகு அதிகாரிகள் லாரியை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பறக்கும்படை சோதனையில் சிக்கியது ரூ.10.8 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: