×

ஒரு தெய்வம் தந்த பூவே

நன்றி குங்குமம் தோழி

ஸ்கிரீன் அடிக்ஷன்

குழந்தைகள் ஏன் செல்போனுக்கு அடிமையாகிறார்கள்?

இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்நேரமும் செல்போன் உபயோகம் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் என அனைத்தும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முடித்துவிடமுடிகிறது. இதற்குக்காரணம் நம் சோம்பேறித்தனம் ஒரு பக்கம் என்றால், நம் சோம்பேறித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களும் காரணமாகின்றன. கொரோனா காலத்திற்கு முன் குழந்தைகளிடமாவது மொபைலை கொடுக்காமலிருந்தோம். ஆனால், கொரோனா காலம் தொடங்கியதிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் காரணத்திற்காக குழந்தைகளுக்கும் அத்தியாவசியமாகிப் போனது.

செல்போனை ஏன் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது?

செல்போனை பெரியவர்கள் அதிகம் உபயோகிப்பதே தவறு என்று கூறும் இந்தக் காலக்கட்டத்தில், பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த அதை கொடுக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. செல்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட மிக ஆபத்தானவை என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. மிகச்சிறிய குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சு (EMFs) மற்றும் மின்காந்த புலன்களின் நீண்ட கால வெளிப்பாடு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையைவிட இரண்டு மடங்கு அதிக அளவில் இத்தகைய கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

செல்போனின் ஸ்கிரீன் ஒளியால் ஏற்படும் விளைவுகள் என்ன?

குழந்தைகள் மீது நீல ஒளியின் தாக்கங்கள், குறிப்பாக கண்கள், தூக்கம், மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை பாதிக்கின்றன. இது தெரியாமல் குழந்தைகளுக்கு அதை ஒரு விளையாட்டுப் பொருளாக பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். குழந்தைகளின் கண்ணின் லென்ஸ்கள் பெரியவர்களின் கண் லென்ஸைப் போன்று திறம்பட நீல ஒளியை வடிகட்டி அனுப்பாது. இருபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களைவிட குழந்தைகளின் விழித்திரை 45 சதவீதம் அதிக நச்சு நீல ஒளியை உறிஞ்சுவதாகவும், மேலும் குழந்தைகள் பெரும்பாலும் டிஜிட்டல் சாதனங்களை தங்கள் முகங்களுக்கு மிக அருகில் வைத்து உபயோகிப்பதாலேயே இது நிகழ்வதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இது தவிர, தற்போது அடிக்கடி செல்போன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானவர்களின் செய்தியை நாம் காண முடிகிறது. மோசமான பேட்டரிகள், சார்ஜர்கள் அல்லது ஷார்ட் சர்க்யூட்கள் போன்றவற்றால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாக சொல்லப்படுகின்றன. இந்நிலையில் குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது? கண்ணுக்குத் தெரியும் இந்த ஆபத்துக்களைவிட நமக்குத் தெரியாத பல ஆபத்துக்களும் செல்போனால் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

* பேச்சு தாமதம்

* மனநலக்குறைபாடு

* சிக்கல்களைத் தீர்ப்பதில் சிரமம் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தடைபடுதல்

* இணையதள மிரட்டல் மற்றும் சமூகவிரோத கும்பலின் வேட்டையாடுதலுக்கு உட்படுதல்

* உடல் செயல்பாடு குறைவதால், உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

இவை எதிர்காலத்தில் மாரடைப்பு போன்ற மோசமான நோய்களை உருவாக்குகின்றன.

* மனச்சோர்வு, பதட்டம்

* உறக்கமின்மை

* முதுகுவலி

* கண் பார்வை குறைபாடு

* தலைவலி

* குற்ற உணர்வு

* தனிமை

சில மணிநேரம் சமூக வலைத்தளங்களை பார்க்காவிட்டால் எதையோ இழந்த உணர்வுடன் ‘போமோ’ என்ற நோய்க்கு அடிமையாகின்றனர். வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதைப் போன்ற பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த மொபைல் போன் அடிமைத்தனம் வயது வித்தியாசமின்றி அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் இந்த அடிமைத்தனத்திற்கு உள்ளாவதால் அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், சில நேரம் வாழ்க்கையில் நிதானமாக செல்லாமல், எங்கும் எதற்கும் வேகமாக பயணிப்பதும், தேவையில்லாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்து அதன்மூலம் பதட்டத்தை அதிகரித்து, அமைதியை இழப்பதும் தேவையற்ற ஒன்று.

தாங்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலோ, அலுவலக செல்போனில் இருப்பதிலோ குழந்தைகள் இடையூறாக இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு கார்ட்டூன், கார் கேம்கள் போன்றவற்றை போட்டுக் கொடுத்து குழந்தைகளை செல்போனில் விளையாட விடும் பெற்றோர்களை நிறைய பார்த்திருக்கிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் திரையில் ஓடும் போது அதன் வேகத்திற்கு ஏற்ப குழந்தைகளின் விழித்திரை செயல்பட முடியாமலும் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு, நரம்பியல் கோளாறுகள் வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

எப்படி திரை நேரத்தை (Screen time) குறைப்பது?

சரி, இவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிப் போனதே, குழந்தைகளிடத்தில் திரை நேரத்தை எப்படி குறைப்பது? என்ற கேள்வி எல்லா பெற்றோர்களுக்கும் எழுகிறது. இதன் தீவிரத்தை உணர்ந்திருந்தும் ஒரு சில பெற்றோர்கள் இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவிப்பதை உணரமுடிகிறது. என் குழந்தை முன் போல் பேசுவதில்லை, விளையாடுவதில்லை, படிப்பில் கவனம் செலுத்துவதில்லை எப்போதும் மொபைல் போனுக்குள்ளேயே தலையை புதைத்துக் கொண்டிருக்கிறான்.

முன்போல் நேரில் பேசும், விளையாடும் நண்பர்கள் இல்லை. சமூக வலைத்தள நண்பர்கள்தான் அதிகம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப்பற்றி குறைசொல்வது அதிகமாகிவிட்டது. இதற்கு அவர்
களின் திரைநேரத்தை குறைத்து எப்படி ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுவது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு வரையறுக்கப்பட்ட திரைநேரத்தை வகுக்க வேண்டும்.

வரையறுக்கப்பட்ட திரைநேரம் என குழந்தைகளுக்கு நிர்ணயித்து அதன் அளவு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். திரைநேரம் என்பது தொடுதிரை, கணினி, மடிக்கணினி திரை மற்றும் தொலைக்காட்சி திரை அனைத்தையும் உள்ளடக்கியது. பாதி நேரம் பார்ப்பதற்கும் மீதி பாதி நேரத்தை பார்த்த விஷயத்தை அறிவுப்பூர்வமாக செயல்படுத்துவதற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்தவுடன் குழந்தைகள் மொபைல் போனை இவ்வளவு நேரம்தான் பார்க்க வேண்டும், இதைத்தான் பார்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு திரைநேரத்தை நிர்ணயித்து அவர்கள் எதைப்பார்க்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் எந்தமாதிரியான செயலிகளை பயன்படுத்துகிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் மொபைல்போனில் பெற்றோர்கள் கட்டுப்பாடு செயலி (Parental control app) வந்திருக்கிறது. அதை செயல்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குறிப்பிட்ட இடங்களுக்கு மொபைல் போன் அனுமதி இல்லை என நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக கிச்சன், பெட்ரூம், டைனிங் டேபிள் போன்ற இடங்களில் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடவும், அனைவரும் கலந்து உரையாடும் இடமாகவும், நேரமாகவும் நிர்ணயித்துக் கொள்ளலாம். இதை டிஜிட்டல் டீடாக்ஸ் என்று சொல்லுவோம். இந்தமாதிரியான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல, வீட்டில் அனைவரும் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
போனை உபயோகிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் போது, அதற்கு மாற்றாக அவர்களை மகிழ்ச்சியாக ஈடுபடுத்தும் வகையில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கும் வகையில ஒரு விளையாட்டோ, பூங்கா அல்லது பீச்சுக்கு போவது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுத்தலாம். இவ்வாறு அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக செயல்பாடுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் சோர்ந்து, போரடிக்கிறது என்று மீண்டும் மொபைல் போனைத்தான் நாடுவார்கள்.

குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் ரோல்மாடல்களாக இருக்கிறார்கள். உங்கள் செயல்களைத்தான் நகல் எடுப்பார்கள். எனவே, பெற்றோர்களும் இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதை விடுத்து, அவர்களை மட்டும் மொபைல் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, பெற்றோர்கள் நண்பர்களுடனும், அலுவலக வேலையாகவோ மொபைல் போனை உபயோகிக்கக் கூடாது. குடும்ப நேரத்தில் நீங்களும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு மொபைல் உபயோகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆன்லைனில், சமூக வலைத்தளங்களில் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும். சமூகவலைத்தளங்களில் மற்றவர்களை கேலி, கிண்டல் செய்வது, பிடிக்காத விஷயமாக இருந்தால் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாதுகாப்பான வலைத்தளங்கள் எவை? தனிப்பட்ட தகவல்களையோ, போட்டோக்களையோ சமூகவலைத்தளங்களில் பகிரக்கூடாது போன்றவற்றைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இணையதள பயன்பாட்டைப்பற்றிய முழு தகவல்களையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பு. என்னைக் கேட்டால்? இணையதள பயன்பாட்டைப்பற்றி பள்ளிகளிலேயே ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்பேன். இது பல குழந்தைகள் தீய பாதையில் செல்வதை தவிர்க்க உதவும். அப்படி இல்லையென்றால், பெற்றோர்களாவது இவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி படிப்படியாக அவர்களுக்கு திரை நேரம், திரை பயன்பாடுகளை சொல்லிக் கொடுத்து வளர்த்தோமானால் வாழ்க்கையை சமநிலையாக வாழக் கற்றுக் கொண்டுவிடுவார்கள்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஒரு தெய்வம் தந்த பூவே appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED கிச்சன் டிப்ஸ்