×

விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் பெற்ற கல்வி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும். கல்விதான் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றும்’’ என்கிறார் ‘தட்ஸ் மை சைல்ட் அறக்கட்டளை’யின் நிறுவனர் வானதி. பள்ளிக் குழந்தைகளுடன் பணியாற்றி வரும் இவரது குழுவினர் தற்போது நன்றாக படித்த குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றிருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக கல்விச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் வானதி அவர்களிடம் பேசும் போது…‘‘சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை. பிறந்தது, வளர்ந்தது, படிச்சதெல்லாம் கோயமுத்தூர்.

அப்பா காய்கறி கமிஷன் கடை நடத்திதான் எங்களை படிக்க வச்சார். நான் ஸ்கூல்ல படிக்கும்போதே, அப்பாவிடம் எங்க உறவினர்கள் எல்லோரும், படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிடுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. இவங்க சொல்வதால் அப்பாவும் அவங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு, என்னோட படிப்பை பாதியிலேயே நிறுத்திடுவாங்களோன்னு நான் பயந்திட்டே இருந்தேன். ஆனால் அப்பா அவர்கள் சொன்னதை எதையுமே அவர் மனசில் வச்சுக்கல. என்னை தொடர்ந்து படிக்க அனுமதி கொடுத்தார். கல்வி கண்டிப்பா என்னுடைய வாழ்க்கையை மாற்றும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதனால் விடாப்பிடியாக படித்தேன்.

அந்த சமயத்தில்தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் போகும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது என்னுடைய மனதில் ரொம்ப ஆழமா பதிந்தும் விட்டது. எனக்கு அப்போதே மனதில் ஆழமாக பதிந்தது. பி.இ. முடிச்சிட்டு, எம்.டெக் படிச்சேன். கல்லூரி பேராசிரியரானேன். அதன் பிறகு ஐ.டியில் வேலைக்குச் சேர்ந்தேன். கை நிறைய சம்பளம் என்பதால் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ள முடிந்தது. இதற்கிடையில் திருமணம். அவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர். குடும்பம், குழந்தைகள்னு என் வாழ்க்கை நகர்ந்தது. என்னுடைய திறமைக்கு பணி உயர்வும் கிடைத்து, பின்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன்னு வெளிநாடுகளுக்குச் சென்றேன். ஸ்வீடனில் வேலை பார்க்கும் போதுதான் நண்பர் கிருஷ்ணாவின் அறிமுகம் ஏற்பட்டது.

அவருடன் பழகும்போதுதான் தெரிந்தது, எங்க இருவருக்குமே கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்று. அந்த எண்ணம் எங்களை ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வைத்தது’’ என்றவர் அதன் பிறகு பள்ளிக் குழந்தைகளிடையே பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

‘‘நான் ஸ்வீடனில் இருக்கும் போது எல்லாம் கல்வி சார்ந்து ஏதாவது குறிப்பாக கிராமத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தியா வந்ததும் முதலில் வேலையை ராஜினாமா செய்தேன். என் விருப்பத்தை கணவரிடம் சொன்ன போது, எனக்கு மேலும் உற்சாகம் அளித்தார். 2015ம் ஆண்டு ‘Thatsmychild’ அமைப்பினை துவங்கினேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே பணியாற்றத் தொடங்கினோம்.

குறிப்பாக, ஒன்பது முதல் 12 வரை படிக்கிற குழந்தைகளுக்கு உதவுவதுதான் எங்க நோக்கம். காரணம், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று முடிவெடுக்கும் காலகட்டம் இது என்பதால், அவர்களை நாங்க டார்கெட் செய்தோம். அவர்களை நான்கு பிரிவுகளா பிரிச்சோம். முதலில் பெற்றோர்கள் யாருமே இல்லாத ஆதரவற்ற குழந்தைகள், ஒரு தாய் அல்லது தந்தை அரவணைப்பில் வளருபவர்கள், பெண் மற்றும் ஆண் குழந்தைகள். எங்க நண்பர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்குச் சென்று எங்களின் நோக்கங்களை எடுத்துரைத்தோம்.

நாங்கள் முதலில் தொடங்கியது ‘கனவைத் தொடு’ என்ற திட்டம்தான். இதன் மூலம் படிக்க முடியாத குழந்தைகளின் தேவையினை அளித்து அவர்களின் கனவுகளை நோக்கி ஓட வைப்பது. முதல் வருடம் ஐந்து குழந்தைகளுக்கு மட்டுமே உதவ முடிந்தது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக வேலை செய்ததில் ஐந்து வருடத்தில் சுமார் நானூறு குழந்தைகளுக்கு பண உதவிகளை செய்ய முடிந்தது. மதுரை, திருச்சி பகுதியில் இலங்கை அகதி முகாமில் உள்ள குழந்தைகள் தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருந்தாங்க. அவர்களிடம் பேசி பள்ளியில் சேர்த்துவிட்டோம். அப்போதுதான் தெரிந்தது வெறும் நிதியுதவி மட்டுமே அவர்களின் கல்வியறிவை கொடுக்காது என்று.

காரணம், கிராமப்புற பள்ளிகளில் நிறைய இடைநிற்றல் பிரச்னைகள் உள்ளன. அதற்குக் காரணம் கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இருக்காததுதான். இவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரும் முதல் தலைமுறை குழந்தைகள். அவர்களிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி படிக்க வைக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு சில பாடங்கள் புரியாது. சிலருக்கு மற்றவர்களிடம் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்படும்.

இதை சரி செய்ய நினைச்சோம். அதனால் முதலில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதிப் பெற்று சனிக்கிழமைகளில் அறிவியல், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை சொல்லிக் கொடுத்தோம். திருநெல்வேலியில் பள்ளி மாணவிகளின் இடைநிற்றல் அதிகமாக இருந்ததால், அந்த மாணவிகளிடம் பேசி புரிய வைத்து அவர்களை படிக்க வைத்தோம். அதில் தேர்ச்சிப் பெற்றால் போதும் என்ற நிலையில் இருந்த ஒரு மாணவி பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

அரசின் உதவித் தொகை பெற தேசிய, மாநில அளவில் தேர்வுகள் எழுத வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளும் எடுத்தோம். இதற்கிடையில் சோஹோ ஐ.டி நிறுவனத்தின் தேர்வுகளுக்கும் பசங்களை தயார்படுத்தினோம். அந்நிறுவனம் +2வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களை நேர்காணல் மூலம் தங்களின் நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு செய்வார்கள். அவர்களுக்கு எங்களின் வேலை பிடித்து இருந்ததால், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினோம். அதில் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று பட்டதாரியாக வெளியே வந்தார் ஒரு மாணவி. இதனைத் தொடர்ந்து ‘வெளிச்சத்தை நோக்கி’னு ஒரு திட்டத்தை ஆரம்பித்தோம். அதில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசினோம்.

அதாவது, என்ன படிக்கலாம்? அவங்க குடும்ப நிலைக்கேற்ப கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது, என்ன படித்தால் என்ன வேலைக் கிடைக்கும், எந்தப் படிப்பிற்கு என்ன வாய்ப்புள்ளது என நிறைய விஷயங்கள் இதில் அடங்கும். எங்களின் அமைப்பினைப் பற்றி தெரிந்து கொண்ட சில பள்ளிகள், மாலை நேரத்தில் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கான நிதி உதவியினை ஏற்படுத்திக் கொடுத்தோம். ‘சிறகுகள் இன்றி பறக்கலாம்’னு திட்டம் மூலம் மாணவர்களின் மாறுபட்ட திறமைகளை வெளிக் கொண்டுவந்தோம். அதில் ஓவியம், பாட்டு எனக் கற்றுக் கொடுத்தோம். இதுபோல் அவர்களின் தேவைக்கு ஏற்ப பல திட்டங்களை அமைத்து அதனை செயல்படுத்தி வருகிறோம். எங்களின் திட்டத்தில் தன்னார்வலர்களாக இருநூறு பேர் உள்ளனர். எங்களால் பலனடைந்த பல மாணவிகளும், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்’’ என்றவர் மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றது குறித்து பேசினார்.

‘‘ஒரு முறை பல்லாவரத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் பேசிய போது, அவர்களின் ஆசை மற்றும் எதிர்கால கனவு குறித்து கேட்டோம். அதில் ஒரு மாணவன் விமானத்தில் போக வேண்டும் என்றான். அழைத்துப் போவதாக உறுதி அளித்தோம். ஆனால் அனைத்து மாணவர்களையும் அழைத்து செல்ல முடியாது என்பதால், NNMS தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் 16 பேரை தேர்வு செய்து அவர்களை விமானத்தில் திருவனந்தபுரம் வரை அழைத்து சென்று வந்தோம்.

இதன் மூலம் நன்றாக படித்தால் தங்களின் கனவுகள் எல்லாம் நிறைவேறும் என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க விரும்பினோம். எங்களின் பணியினை தமிழகம் முழுதும் விரிவடையச் செய்ய வேண்டும். அதற்கு விடுதி ஒன்றை துவங்கி படிக்க வசதியற்ற பசங்களுக்கு அதில் உணவு, தங்க இடம் இலவசமாக அளித்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். இதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு’’ என்கிறார் வானதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Vanathi ,That's My Child Foundation ,
× RELATED கிச்சன் டிப்ஸ்