மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் இன்று காலை ஊன்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் உலகப் புகழ் பெற்றது சித்திரை திருவிழா. இந்த விழாவில் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்ட மக்களும் கலந்து கொள்வர். 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக மதுரை கீழமாசிவீதியில் உள்ள தேரடியில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து மூகூர்த்த கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரடியில் நடப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலின் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடங்க உள்ளன. இந்தாண்டு சித்திரை திருவிழாவில் ஏப். 12ம் தேதி கொடியேற்றம், ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், அதனைத் தொடர்ந்து ஏப்.21ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

முகூர்த்தக்கால் ஊன்று நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன், அறங்காவலர்கள் செல்லையா, சீனிவாசன், சுப்புலட்சுமி, மீனா மற்றும் இணைக் கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பேஷ்கர் காளிமுத்து உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, கள்ளழகர் கோயிலில் ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.22ம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.23ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: