×

உன்னத உறவுகள் கட்டிக்காத்த உறவுகள்…

நன்றி குங்குமம் தோழி

திருமணங்கள் ஐம்பது-அறுபது வருடங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட விதமே வேறு. இருவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயமென்றாலும், உறவுகள் கலந்து ஆலோசித்து நிச்சயித்தனர். நம் உள்ளங்கையை குடும்பமாக நினைத்தால் விரல்கள் ஐந்தும் உறவுகள் எனக்கொள்ளலாம். விரல்கள் இயங்காவிடில் கையால் மட்டும் வேலைகள் செய்ய முடியுமா என்ன? அதுதான் உறவுகளின் பலமும் கூட.தாயாதி-பங்காளி உறவுகளைப் பற்றி இன்றைய தலைமுறைகளுக்கு தெரியவே வாய்ப்பில்லை. விஞ்ஞான முன்னேற்றம் நம்மை எங்கோ இழுத்துச்செல்கிறது. மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான்.

ஆனால் நம் உறவு முறைகள், “நாங்கள் இருக்கிறோம், கவலையே வேண்டாம்” என்கிற வாக்கை ‘அசரீரி’ போன்று ஒலிக்கச் செய்து கொண்டேயிருந்தது. ஆனால் அந்த பாசப் பிணைப்பும், அனுசரணையான பேச்சு வார்த்தைகளும் இப்பொழுது காண்பது மிக மிக அரிது. இந்தியர்கள் என்றாலே பாச உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது உலகறிந்த விஷயம். யாரோ இப்பொழுது திருமண அழைப்பிதழினை அனுப்பிவைப்பதாகக் கூறவும் மதுரம் பழைய உறவுகளையும், அன்றைய காலகட்டத்தையும் யோசிக்க ஆரம்பித்தாள்.

நாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில், நடைமுறை வாழ்க்கையில் அனைத்தும் சாத்தியமாக இருந்தது. உடன் பிறப்புகள் மற்றும் பல்வேறு உறவுகளுடன் வாழும் போது விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்ற பண்பு நமக்குள் வளர்கிறது. ஒவ்வொருவர் குணமும் மாறுபட்டு இருந்தாலும், அவர்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பழக வேண்டும் என்ற தன்மை நமக்குள் புகுந்துகொள்ளும். ‘ஓ, மாமாவா, சப்தமாகப் பேசினால் அவருக்குக் கோபம் வரும். அதனால் நிதானமாக பேசுங்கள்’. ‘அத்தைக்கு நான் சிரித்து சிரித்துப் பேசினால்தான் பிடிக்கும், சித்தப்பா எனக்கு ரொம்ப செல்லம். அவரிடம் அனைத்தையும் தயங்காமல் பேசிவிடலாம்’ என ஒவ்வொருவர் பற்றிய கணிப்புகள் நம் மூளையில் பதிந்துவிடும். இத்தகைய உளவியல் ரீதியான கருத்துக்களை புத்தகம், ஆசான் இல்லாமல் கற்கக்கூடிய ஒரே இடம்தான் நம் பாரம்பரியம்மிக்க கூட்டுக் குடும்பங்கள்.

குடும்பத்தின் விபரங்களை பெரியோர்கள் தங்களுக்குள் திட்டமிட்டு செய்து வந்தனர். அதனால் மன அழுத்தம் என்பதே ஏற்படாமல், மாறாக பங்கிட்டு செய்ததால் சிரமமே காணப்படாது. வாழ்க்கையில் அவர்கள் கண்ட அனுபவங்கள் மூலம் மனோதைரியத்தையும், எதற்கும் பயப்படாத மன திடத்தையும் சொல்லிக் கொடுத்தார்கள். முன்னேறிச் செல்வதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார்கள். வீட்டில் ஒரு சின்ன பிரச்னை வந்தாலும், அதற்காக துவண்டு போகாமல், தைரியமா எதிர்கொள்ள வேண்டும் என்று தைரியம் கொடுப்பார்கள். அந்த ஒரு வார்த்தை அவர்களை மீண்டும் எழ செய்யக்கூடிய பானமாக மாறும்.

குடும்பத்தில் சில பெரியவர்கள் மருத்துவர் போல செயல்படுவார்கள். சின்ன விபத்து மூலம் காயம் ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் வேண்டிய முதலுதவிகளைத் தந்து எப்படிப்பட்ட நிலையிலும் நம்மை ஆறுதல் அடையச் செய்வார்கள். தாங்கள் பார்த்து அனுபவித்த சம்பவங்களையே வாழ்க்கைக் கல்வியாக உணர்ந்து சந்ததியினருக்கும் கற்றுத் தந்தார்கள். பழம் பெரும் இலக்கியங்களை, காப்பியங்களை இன்றைய சமூகத்திற்கு எடுத்துச்செல்வது போல் நம் உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் நம் கடமை.

ஆடி மாதம், பண்டிகைகள் தொடங்கும் காலம். காவிரியில் நீர் திறப்பு, அதைக் கொண்டாட ஆடிப்பெருக்கு இதெல்லாம் இந்தக்கால பிள்ளைகளுக்குத் தெரியுமா? ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது புரிந்தே ஆடி மாதம் 18ம் நாள் புதிய விதைகள் போட்டு செடிகள் உற்பத்தி செய்வது இம்மாதத்தின் முக்கியமான நாள். ஆடிப்பெருக்கன்று ‘சப்பரம்’ இழுத்துக்கொண்டு பிள்ளைகள் உலா செல்ல, பெரியவர்கள் குடும்பத்துடன் விதவிதமான உணவுப் பதார்த்தங்களை எடுத்துச் சென்று, காவிரி அன்னையை வழிபட்டு, பதார்த்தங்களை பகிர்ந்து உண்பர்.

அப்பொழுது கிடைக்கும் ஆனந்தம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் போது கூட கிடைக்காது. ‘சப்பரம்’ என்பது ஆடிப்பெருக்கையொட்டி விற்பனை செய்யப்படும் விளையாட்டுத் தேர். விதவிதமான வண்ணங்களில் அலங்கரித்து, பிள்ளைகள் இழுத்துச் செல்வார்கள்.

சிலர் தீப்பெட்டிகளில் செய்து நூலைக்கட்டி இழுத்து வருவார்கள். இதனை வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பிள்ளைகளுக்கு செய்ய உதவுவார்கள். அதன் பிறகு ஆடிப்பெருக்கு அன்று குடும்பத்தினர் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினரும் குழுவாக சேர்ந்து காவிரிக்கரைக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் செய்த உணவுகளை கட்டிக்ெகாண்டு வருவார்கள். அதனை அனைவரும் பகிர்ந்து உண்ணும் போது, சிறு வயதிலேயே பிறருக்குக் கொடுத்து உதவும் தன்மையும், அனைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற குணமும் குழந்தைகள் மனதில் இயற்கையாக பதிய காரணமாகிறது.

இது மட்டுமல்லாமல் ‘ஆடிப்பதினெட்டு என்றால் என்ன? எதற்காகக் கொண்டாடப்படுகிறது? காவிரியில் எப்பொழுது நீர் திறக்கப்படுகிறது? நாம் ஏன் அதனால் மகிழ்ச்சி அடைகிறோம்?’ போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை சொல்லித் தராமலேயே அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு பண்டிகைக்கும் முன்பிருந்தே பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அதற்காக தயாராக ஆரம்பிப்பார்கள்.

வீட்டில் ஒரு பெண் குழந்தை செல்லப் பெண்ணாக வலம் வந்தாலும், புகுந்த இடத்தில் பொறுப்புகளையும், கடமைகளையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும், சமாளிக்கும் அளவில் பிறந்த வீட்டுப் பாடங்கள் கை கொடுத்தன. எப்படிப்பட்ட விஷயமானாலும் சொந்த உறவுகள், ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் என்றும்
விட்டுப்போகாதது. தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், ஒத்துழைப்புத் தருவதற்கு அவசியம் முயற்சிப்பார்கள்.

வீட்டில் ஒரு நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சித்தப்பா, அத்தை என எல்லோரும் ஊரிலிருந்து வருவார்கள். உடன் தம்பி, தங்கைகளும் வருவதால், வீடே குதூகலமாக மாறிவிடும். அவர்கள் வரும் நாளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அக்கம்-பக்கம் நண்பர்களிடம் சென்று, இரண்டு மூன்று நாட்களுக்கு பிஸி’யாக இருப்போமெனவும் அவர்களுடன் விளையாடுவது கடினம் என்றும் கூறிவிடுவார்களாம். வீட்டுப்பாடங்கள், படிப்பு அனைத்தையும் அவர்கள் வருவதற்குள் முடித்துவிட்டு விளையாடுவதற்காக காத்திருப்பார்கள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.

(உறவுகள் தொடரும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள் கட்டிக்காத்த உறவுகள்… appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்