உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்திருந்தால் பறிமுதல்: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கலைச்செல்விமோகன், மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம், வாகனம் அனுமதி உள்ளிட்டவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நன்னடத்தை விதிகள் என அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 13 லட்சத்து 42 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 85 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 12 ஆயிரத்து 35 பேர் உள்ளதாகவும், நாடாளுமன்ற தேரதலுக்கு 1417 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 178 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாகவும், அம்மையங்களில் வாக்குப்பதிவின்போது, 100 சதவிகிதம் முழுவதுமாக நேரலை வீடியோ பதிவு செய்யப்படும்.

மேலும், வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நமக்கு தேவையான அளவிற்கு கூடுதலாக இருக்கிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணம் இருக்க வேண்டும், ஆவணமில்லை என்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படும்’ என்றார். இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பேசுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தி விதி காரணமாக தற்போது 133 நபர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாகவும், 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அதிலிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.

தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும், கொடிகள் பொருத்தவரை சாலையின் நடுவே நடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கொடிகளை அகற்றிக்கொள்ள வேண்டும். உதவி தேர்தல் அலுவலர் அனுமதி பெற்று கூட்டம் நடத்த வேண்டும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு துணை ராணுவ வீரர்கள் வருகை இன்னும் ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் எனவும், அதனைத்தொடர்ந்து கொடி அணி வகுப்பும் நடைபெறும்’ என்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, பயிற்சி கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இக்கூட்டத்தில், திமுக சார்பில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் குமார், படுடெல்லி பாபு, வடக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மணி, சண்முகம், கூடுவாஞ்சேரி கார்த்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பகுதி செயலாளர் தசரதன், துரைமுருகன், ஜெகநாதன், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் அருள்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், முத்துக்குமார், நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீனிவாசன், பாமக சார்பில் மகேஷ்குமார், உமாபதி, தேமுதிக சார்பில் ஏகாம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செல்வராஜ், மதிஆதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்திருந்தால் பறிமுதல்: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: