‘இளவரசி’யை காயப்படுத்தும் காட்டுத்தீ: மரங்கள், மூலிகைச் செடி நாசம்; விலங்குகளும் உயிரிழக்கும் அபாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வறண்ட சூழல் நிலவி வருகின்றது. இதனால் மலைப் பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலையின் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத் தீ பரவி வருகிறது.

நேற்று நண்பகலில் மச்சூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட வனப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இது தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்த பகுதியை ஒட்டியுள்ள பெருமாள்மலை வனப்பகுதியிலும் மற்றும் அதை ஒட்டியுள்ள வருவாய் நிலப்பகுதி, தனியார் நிலப்பகுதி, பழநி மலைச்சாலை பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

காட்டுத்தீ காரணமாக மலைப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் ெசடிகள் நாசமாகும் அபாயம் உள்ளது. மேலும், விலங்குகளும் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தி பழமையான மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* குன்னூர் காட்டு தீ அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தீவிரம்
நீலகிரி வன கோட்டம், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாக்பிரிட்ஜ் அருகே பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 6-வது நாளாக நேற்றும் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுவரை சுமார் 20 முதல் 30 ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. மாவட்ட வன அலுவலர் கௌதம் மேற்பார்வையில் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, உடுமலைபேட்டை ஆகிய வன கோட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே 2-வது நாளாக ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கு புகைந்து வருகிறது. தீ மேற்கொண்டு பரவாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

The post ‘இளவரசி’யை காயப்படுத்தும் காட்டுத்தீ: மரங்கள், மூலிகைச் செடி நாசம்; விலங்குகளும் உயிரிழக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: