பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு

சென்னை: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்திட அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்தாண்டில் நடத்துவதென முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குழுவின் துணைத்தலைவராக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், உறுப்பினர் செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், உறுப்பினர்களாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், சு.கி.சிவம், தேச மங்கையர்க்கரசி, ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு அரசால் அமைக்கப்பட்ட பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் செயல்பாட்டு குழு அமைத்து தேவைக்கேற்ப ஆலோசனை குழு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

 

The post பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு appeared first on Dinakaran.

Related Stories: