சந்தோஷமும் ஜோதிடமும்

மனிதன், அன்றாடம் பிரச்னைகளை சந்திக்கிறான். தீர்வுகள் தெரிந்தால், தன் சுய முயற்சியில் முயன்று, வெற்றிக் கொள்கிறான். தீர்வுகள் தெரியாதபோது, குழப்பங்கள் பல அவனை சூழ்ந்து கொள்கின்றன. குழப்பங்கள் உள்ள மனது கலங்கிய குட்டைதான். இருப்பினும், தீர்வுகள் இல்லாமல் இல்லை. சில பிரச்னைகளுக்கு தீர்வுகள், காலத்தைக் கடந்து செல்வதுதான். சில பிரச்னைகளுக்கு தீர்வுகள், முயற்சி செய்வதுதான். ஆனாலும், இதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஒரு விஷயத்தை நம்பவோ மனம் மறுக்கிறது. ஜோதிடம் என்பது வாழ்வையோ அல்லது வாழ்க்கையை மாற்றும் கருவியோ அல்ல. அது நம் பயணத்தின், நம்முடன் வரும் ஒளி விளக்கு போன்றது. ஜோதிடம் என்ற அந்த ஒளி விளக்கை பயன்படுத்தி, பிரச்னைகளை கடந்து செல்வதற்கான வழிகளை கண்டறியலாம்.

மனதில் பிரச்னைகள் ஏன் உதயமாகின்றன?

ஒவ்வொரு மனிதனும் தன் மனம் சார்ந்தே வாழ பழக்கப்பட்டு இருக்கிறான். நீண்ட நாள் தொடர்ந்து வந்த ஒரு விஷயம் தன்னை விட்டு விலகிச் செல்லும் போது, துயரத்திலும் துக்கத்திலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். மீண்டும் அந்த விஷயத்தை தனதாக்கிக் கொள்ள பல முயற்சி செய்கிறான். அதிலும் பல விஷயங்களை தேடுகிறான். அதுவரை அறிவியல் உலகம் என்று பலவற்றை பேசியவன், குழப்பம் அடைகிறான். ஜோதிடத்தில் மனம் என்று சொல்லும் பொழுது, சந்திரன் வந்துவிடுகிறான். பிறப்பு என்று சொல்லும்போது சந்திரன் வந்துவிடுகிறான். சந்திரன்தான் ஒருவனை சந்தோஷமாக இருக்க வைக்கிறது. அதே சந்திரன்தான் அவனை துக்கப்படவும் செய்கிறது. பிறப்பு ஜாதகத்தில், சந்திரன் நல்ல நிலையோடு இருந்தால், அவன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பான். முக்கியமாக சந்திரன், புதனுடன் இணைந்து கேந்திரத்தில் அமர்ந்துவிட்டால், நண்பர்களுடன் இணைந்து வியாபாரம் செய்வதிலும், எப்பொழுதும் கேலி கிண்டல்களிலும் இருக்கும் குணமுடையவனாகிறான். மற்றவர்களை பற்றி சிந்திக்கமாட்டான்.

அதே சந்திரன், சனியுடன் இணைந்து காணப்பட்டால், மற்றவர்கள் துயரங்களுக்காக இவர்களே துயரப்படும் மனநிலைக்கு உள்ளாகிறான். அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொள்கிறான். இப்படி, மனமானது பல வழிகளிலும் பயணப்படுவது கிரகங்களின் அடிப்படையில்தான். வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி என சனி கிரகம் ஒரு முழுச் சுற்றில் முப்பது வருடம் பயணத்தில், இந்தப் பிரச்னைகளால் பதினைந்து வருடத்தை தொலைக்கிறான். மனதை எவன் ஒருவன் தெளிவாக வைத்துக் கொள்கிறானோ.. அவனே இவ்வுலகில் சிறந்தவன் என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை. ஒவ்வொருவருக்கும் நாளை என்ற கவலை உள்ளது. கவலை என்பது ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே பின்னிக் கொள்கின்ற கஷ்டங்கள் என்ற வலை. மனதை மேம்படுத்திக் கொள்வதற்கு, மனம்தான் சிறந்த கருவியாக செயல்பட வேண்டும்.

மனதை சமநிலைப்படுத்த பரிகாரங்கள் என்ன?
*மாலை நேரத்தில் நிலவினை தரிசனம் செய்யுங்கள். குறிப்பாக, வளர்பிறை சந்திரனை தரிசனம் செய்வது சிறப்பானது.
*நவக்கிரகங்களில், சந்திரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்துகொள்வது மனதை நல்வழிப்படுத்தும்.
*உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு குறிப்பாக, வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
*எவர் மனதையும் புண்படுத்தும்படியான சொற்களையோ, செயல்களையோ செய்யாதீர்கள். அது உங்களை ஒருநாள் பாதிக்கும்.
*புனித நதிகளில் நீராடுங்கள். மலைகளில் இருந்து வரும் மூலிகை கலந்த நீரானது மனத்திற்கு உற்சாகத்தையும் சஞ்சலங் களையும் குறைக்கும். சிலருக்கு நோயைக் குணப்படுத்தும். அருவிகளுக்கு சென்று குளிப்பதும், மனதிற்கும்உடலுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
*உயர்ந்த மலை மீது அமர்ந்து இயற்கையை ரசியுங்கள். இதுவும் உங்கள் மனதை மேம்படுத்தும்.
*சில நேரங்களில், ஒரே இடத்தில் இருந்தால் மனம் மாற்றம் அடையாது, ஆதலால் வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதும் நன்மை பயக்கும்.
*காவிரி, கங்கை போன்ற நதிகளில் கிடைக்கும் நீர் அடைக்கப்பட்ட டின்களில் கிடைக்கின்றன. அதனை குளிக்கும் போது நீரில் ஊற்றி குளியுங்கள்.
*தியானம் செய்யுங்கள்.
அப்படி தியானம் செய்யும் பொழுது உங்களுக்குள் வரும் எண்ணங்களை வேடிக்கை பாருங்கள். அந்த எண்ணம் உங்களுடையது அல்ல. அது மனதின் வேகம். இப்படி தியானத்தின் பழக்கமானது உங்களை நல்வழிப்படுத்தும். நல்ல மனமே சிறந்த கோயில் என்பதை மறவாதீர்கள். உங்கள் மனம் திறம்பட இருந்தால், நீங்களே இவ்வுலகில் சந்தோஷமானவர்கள்.

 

The post சந்தோஷமும் ஜோதிடமும் appeared first on Dinakaran.

Related Stories: