தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை. தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்தல் பத்திர வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எண்கள் வெளியிடாதது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு செய்துள்ளார்.

முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர எண்களை வெளியிட்டாக வேண்டும் என்று ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. 12-ம் தேதியே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டும் தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்று எஸ்.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர எண்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்தது. தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களை வெளியிட வேண்டும் என்றே நாங்கள் உத்தரவிட்டிருந்தோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட்டது, யாரால் பணமாக்கப்பட்டது, தேர்தல் பத்திர எண் ஆகிய அனைத்தையும் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர எண்களை நாளை மறுநாளுக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் தனி அடையாள எண்ணை எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். சீலிடப்பட்ட கவரில் உள்ள அனைத்து விவரங்களையும் நாளை மறுநாளுக்குள் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: