×

மக்களின் கதைகளே என் புகைப்படங்கள்!

நன்றி குங்குமம் தோழி

பல வார்த்தைகள் விவரித்துச் சொல்ல வேண்டியதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். புகைப்படங்கள் காலத்தின் கண்ணாடி. பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அந்தக் காலத்தின் சூழ்நிலையை துல்லியமாக வெளிப்படுத்திவிடும் தன்மை கொண்டது. புகைப்படங்கள் வழியாகவே ஒரு கதை சொல்லலை நிகழ்த்தலாம். ஒரு புகைப்படம் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்றலாம். நம் மனதுக்குள் இருக்கும் கேள்விகளுக்கான பதிலாகவும் இருக்கலாம். அப்படியான புகைப்படங்களை எடுத்து வருகிறார் கிரண்மாயி. புகைப்படக்கலைஞரான இவர் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் கதைகளையும் தன் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார்.

‘‘சொந்த ஊர் தஞ்சாவூர். அப்பா வீட்டில் ஒரு கேமரா வைத்திருப்பார். நாங்க குடும்பமா வெளியே செல்லும் போது அதில்தான் புகைப்படங்களை எடுப்பார். அதே போல் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் அப்பா அதில் படம் பிடித்து அதனை ஒரு ஆல்பங்களில் போட்டு வைத்திருப்பார். எனக்கு சின்ன வயசில அந்த பழைய ஆல்பங்களில் உள்ள புகைப்படங்களைப் பார்க்க பிடிக்கும். அப்பாவிடம் அந்த கேமராவில் எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எங்க வீட்டில் மற்றும் உறவினர் வீட்டில் பிறந்தநாளுக்கு எல்லாம் நான் புகைப்படம் எடுத்தது இன்றும் நினைவில் இருக்கு. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் கோவையில் பொறியியல் படிக்க சென்றேன்.

அந்த சமயத்தில்தான் கேமரா ஃபோன்கள் மற்றும் முகநூல்கள் அறிமுகமான காலம். எனக்கு புகைப்படம் எடுக்க பிடிக்கும் என்பதால், கல்லூரியில் என் தோழிகளை எல்லாம் நான்தான் புகைப்படம் எடுப்பேன். அவர்களும் அதனை அவர்களின் முகநூலில் பதிவு செய்வார்கள். மேலும் நான் படித்த கல்லூரியில் புகைப்படம் எடுப்பதற்கான குழு ஒன்று இயங்கி வந்தது. அதில்
இணைந்தேன். நான் நான்கு வருடம் பொறியியல் துறையில் பயின்றாலும் எனக்கு புகைப்படம் எடுப்பதில்தான் நாட்டம் இருந்தது. நான் யாரென அறியவும் என்னை நான் வெளிப்படுத்தவும் புகைப்படவியல் வழி தந்தது. நினைத்தது போல் ஒரு படம் எடுக்க பல மணி நேரம் செலவிட்டாலும் அந்தப் படத்தை எடுத்த பின் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஒரு விஷயத்தை நீங்க செய்யும் போது, அது உங்களின் உணர்வுகள் முழுவதையும் வெளிப்படுத்தி, இறுக்கத்தை குறைத்து, உங்களை முழுமையானவராக உணர வைக்கிறதோ அதுதான் உங்களை
உயிர்ப்புடன் வைத்திருக்கும். நான் இதை புகைப்படம் எடுக்கும் போது உணர்ந்தேன். அதன் அடிப்படையில் புகைப்படங்கள் எடுக்க முடிவெடுத்தேன். வீட்டில் சொன்னபோது
முதலில் அவர்கள் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு என் விருப்பத்தை புரிந்துகொண்டார்கள். போட்டோகிராபியில் டிப்ளமா படிக்க சென்னைக்கு வந்தேன்.

படிப்பு முடிச்ச கையோடு, பல ஊர்களுக்குச் சென்று மக்களை பார்த்து அவர்களை புகைப்படம் எடுக்க விரும்பினேன். அவ்வாறு போகும் போது ஏற்பட்ட பயண அனுபவங்கள் மற்றும் நான் சந்தித்த மக்களின் கதைகளும்தான் என் வாழ்க்கையின் போக்கை முற்றிலும் மாற்றியது’’ என்றவர் புகைப்படங்கள் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார்.

‘‘புகைப்படக் கலைஞர்கள் அழகியலின் பின்னால் செல்வது தவிர்க்க முடியாதது. அழகியல் என்பது உருவாக்கப்படவில்லை, அது கண்டுபிடிக்கப்பட்டது. காரணம், மாடல் போட்டோகிராபி
செய்யும் போது, ​​போட்டோக்களை அழகாக எடிட் செய்வார்கள். அதுதான் அழகியல். மாடல் போட்டோகிராபி செய்யும் போது, ஒருவரை வேறு ஒருவராக மாற்றும் அளவு போட்டோக்களை எடிட் செய்வதில் எனக்கு நாட்டமில்லை.

இயற்கையான மனித முகத்தை வேறு மாதிரியாக மாற்றுவது, கருப்பாக இருப்பவர்களை பன்மடங்கு வெள்ளை ஆக்கிக் காட்டுவது, இவை பெரும் கேள்விகளை எழுப்பின. நம்மில் பலர் நிற மற்றும் உருவ கேலிகளை கடந்தே வந்துள்ளோம், நான் உட்பட. என் அம்மா கருப்பும் அழகுதான் என்று கொடுத்த ஊக்கத்தால்தான் அந்த இடர்களை தாண்டி வந்தேன். கிண்டல்களும் கேலிகளும் தந்த தாழ்வு மனப்பான்மைக்கு மேக்கப்பும், எடிட்டிங்கும் தீர்வாக மாறியிருப்பது எனக்குள் நிறைய கேள்விகளையும், கவலையையும் தருகிறது. நம் இயல்பான தோற்றம் அழகில்லை என தன்னம்பிக்கையை குலைக்கும் நிலைப்பாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நான் ஒருவரை அவர் அன்றாடம் அணிய விரும்பும் உடைகளில் அவரின் இயல்பின் அழகை படமாக்க நினைப்பேன். புகைப்படங்கள் எடுப்பதற்காகவே நான் பல ஊர்களுக்கு பயணம் செய்திருக்கேன்.

கொரோனா சமயத்தில் வீட்டில் என் சகோதரி கர்ப்பமாக இருந்தார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகள், அவரின் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், குழந்தை பிரசவிப்பது வரை அனைத்தையும் என் கேமராவில் பதிவு செய்தேன். ஒரு புரியாத தொற்று நோய்க்கு நடுவே அவளுடைய கர்ப்பக் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் திருப்பங்களும் அன்றாட வாழ்வும் நான் ஆவணப்படுத்தியது தானாகவே ஒரு புகைப்படத் தொடராக மாறியது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதே போல் என் காலில் அடிபட்டதால், வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் அறைக்குள் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது காகம் தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டிக் கொண்டிருந்தது. பார்க்க அழகாக இருந்தது. நான் அதை படமெடுக்கத் தொடங்கினேன். அது பிறந்ததிலிருந்து இறக்கை முளைத்து பறக்க முற்படும் வரை அந்த காக்கை குடும்பத்தின் தினசரி வாழ்வை பதிவு செய்தேன். அந்த தொகுப்பைப் பார்க்கும் போதுதான் தெரிந்தது நான் அந்த காகத்தை தொடர்ந்து படமெடுத்து இருந்திருக்கிறேன். மக்களுடன் இணைந்து வாழும் பறவை காகம்.

ஆனால் மற்ற பறவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அதற்கு கொடுப்பதில்லை. அமாவாசைக்கு மட்டும் நாம் வடை, பாயசம் வைப்போம். அன்னிக்கி மட்டும் வேண்டி கூப்பிடுவோம். மத்த நாள்ல காக்கா அழையா விருந்தாளி. கருப்பாக உள்ளவர்கள் மற்றும் கட்டைக் குரல் உள்ளவர்களை காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கொண்டு கிண்டல் செய்வார்கள். பறவையினங்களிலும் பாகுபாடு காட்டப்பட்டு ஒதுக்கப்படும் பறவையாக காகம் இருக்கிறது. காகத்தின் பழக்கவழக்கங்களை படம் பிடித்தேன். அது தண்ணீர் குடிப்பது, வெவ்வேறு தட்ப வெப்ப நிலைகளில் உயிர்வாழ்வது, குட்டி காக்கைகளின் செயல்பாடுகள் என படம் பிடித்தேன்’’ என்று கூறும் கிரண்மாயி பறவைகள் மட்டுமல்லாமல் மக்களின் கதைகளையும் தன் புகைப்படம் மூலம் பதிவு செய்துள்ளார்.

‘‘நான் சென்னை ராயபுரத்தில் வாழும் என் தாத்தா, பாட்டியின் தினசரி வாழ்க்கையை ஒருபுறம் ஆவணம் செய்து கொண்டு வந்தேன். அவர்கள் யாருடைய துணையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். தாத்தா சென்னையின் வரலாற்றைப் பற்றி பல கதைகளை சொல்வார். அந்தக் கதைகள் எல்லாம் கேட்க கேட்க ஆர்வமாக இருந்தது. என் கால் நனைத்தக் கடலின் மறுகரையில் உள்ள முதியோர்களின் வாழ்க்கை என்ன? இவ்விரு கரைகளுக்குமான ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன? அந்த முதுமையின் சுருக்கங்களுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கதைகளை கேட்க கேட்க அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அதுதான் என்னை பல புதிய இடங்களை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஒரு சில அறக்கட்டளைகள் சென்னை மற்றும் இலங்கையில் உள்ள முக்கிய புகைப்பட பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை மற்றும் கதைகளை ஆராய இலங்கைக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நான் பார்த்து கேட்டறிந்துக் கொண்டிருந்த செய்தியின் கண்ணோட்டங்களையே மாற்றியது. இலங்கைக்கே அடையாளமான பனைப் பொருட்கள் செய்பவர், யுத்தக் காலங்களிலும் தபால் மூலம் மக்களை தொடர்புக்குள் வைக்க முயன்ற ஓய்வு பெற்ற தபால் தலைவர், 75 வயது ஆனாலும் இன்றும் பளிங்கி விளையாடும் ஒரு தாத்தா, இரட்டை மடி வலை மீன்பிடியால் கடல் வளம் குன்றி தவிக்கும் ஒரு கரை வலை மீன்பிடி மீனவர், தொண்ணூறு வயதாகும் ஓய்வுப் பெற்ற பள்ளி முதல்வர் என இலங்கையில் பல முதியவர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய வாய் வழி வரலாறுகள், புகைப்படங்களை எல்லாம் ‘பிட்வீன் தி ரிங்கிள்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாகத் தொகுத்து அதை சென்னையில் கண்காட்சியாக கடந்த டிசம்பர் வெளியிட்டோம்.

இது தவிர, நான் 2022 ஆம் ஆண்டு முதல் தனியார் அறக்கட்டளையின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகைப்படவியலின் அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இளைய தலைமுறையினருக்கு புகைப்படக் கலையைக் கற்பிப்பதிலும், காட்சியின் மூலம் கதை சொல்லும் சிந்தனையாளர்களாக அவர்களை உருவாக்குவதிலும் எனக்கு விருப்பம்.மேலும் என் புகைப்படங்களை பலருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். காரணம், என் ஒவ்வொரு புகைப்படங்களும் காலத்தின் ஆவணம். மக்களின் கதைகளை வெளிப்படுத்துபவை’’ எனச் சொல்கிறார் கிரண்மாயி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post மக்களின் கதைகளே என் புகைப்படங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்