×

இயற்கை வளத்தை பாதுகாக்க மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

நம் முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்தார்கள். காலப்போக்கில் நாம் அதனை மறந்துவிட்டோம். விளைவு சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு. இனி வரும் காலங்களில் இது தொடர்ந்தால் நம்முடைய இயற்கை வளங்களை முற்றிலும் அழித்துவிடும். ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் அதனை அழித்தாலும், அதை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறையினருக்கு ஏற்பட்டது. அதில் பலர் தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

இனி வரும் தலைமுறையினருக்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த பாடங்கள் கண்டிப்பாக அவர்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக் கொள்வது மட்டுமில்லாமல், சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும். இதை மனதில் கொண்டு பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார் சென்னையை சேர்ந்த சம்ஹிதா. மறைமலைநகரில் இயங்கி வரும் இவரின் ‘இலா’ பள்ளிக்கூடத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளம், விவசாயத்தின் மகத்துவம் அனைத்தும் அவர்
களின் பாடங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வளரும் காலத்தில் இருந்தே இதனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வார்கள்.

‘‘நான் அடிப்படையில் கட்டிட வடிவமைப்பாளர். படிப்பு முடிஞ்சதும், பசுமை வணிகம் சார்ந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். அங்கு பசுமை கட்டிடங்கள் அமைப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து அது சார்ந்த பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன் ெதாடக்கமாக மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் வேளாங்கண்ணி கோயில்களின் நிலப்பரப்பில்பசுமை சூழலை அமைப்பது குறித்து செயல்பட்டு வருகிறோம். அந்த சமயத்தில்தான் பசுமை கட்டிடம் அமைத்து அதில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பள்ளிக்கூடம் அமைத்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டு, 2018ல் பள்ளியை துவங்கினேன். இங்கு ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ளது’’ என்றவர் பள்ளியில் உள்ள பாடத்திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘நாம் கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். காலப்போக்கில் தனிக்குடும்பமாக மாறிவிட்டது. அதில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். தாத்தா, பாட்டியின் கதைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக சுற்றுப்புற பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. அதைத்தான் எங்க பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க விரும்பினேன். ‘இலா’ என்றால் சமஸ்கிருதத்தில் பூமி என்று அர்த்தம். பூமியின் பாதுகாப்பு குறித்து குழந்தைகளின் வளரும் பருவத்தில் மனதில் பதிய வைத்துவிட்டால் போதும். அதன் பின் அவர்கள் அதனை பாதுகாக்க ஆரம்பித்துவிடுவார்கள். இன்றைய சின்னச் சின்ன மாற்றங்கள் நாளையுடைய ஆணிவேர்.

இங்கு IB (International Baccalaureate) பாடத்திட்டத்தினைதான் பின்பற்றி வருகிறோம். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் என்பதால் அவர்கள் உலகில் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு தங்களின் கல்வியினை தொடர முடியும். தற்போது இந்தியாவில் உள்ள சில சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் IBயின் கல்விமுறையினை பின்பற்றி வருகிறார்கள். குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் அவர்களின் தனித் திறமையினை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் இந்தக் கல்வித்திட்டம். ஐந்தாம் வகுப்பு வரை
மழலையர் பள்ளி, ஆறு முதல் பத்தாம் வகுப்பினை நடுநிலைப்பள்ளி என்றும், +1 மற்றும் +2வினை டிப்ளமோ என்று குறிப்பிடுவோம். இதனை மற்ற பாடங்கள் போல் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதால், முதலில் ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள் புரிந்துகொண்டு முறையாக சொல்லித் தருகிறார்களா என்று ஆய்வு செய்யப்படும்.

எந்தக் கல்வியாக இருந்தாலும் அதன் அடித்தளம் மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்யாமல், அதை புரிந்து, சிந்தித்து செயல்பட வேண்டும். அதனை நாங்க மழலையர் பள்ளிகளில் இருந்தே அவர்களுக்கு சொல்லித் தருவதால், ஆறாம் வகுப்பிற்கு அவர்கள் அடி எடுத்து வைக்கும் போது, கல்வி முறை குறித்த கண்ேணாட்டம் அவர்களுக்கு முற்றிலும் மாறிவிடும். மேலும் அனைத்தும் செயல்வழி முறை பாடங்கள்.

இது ஒரு விஷயத்தை பார்த்து, உணர்ந்து கற்றுக்கொள்ள உதவும். பாடங்களும் எளிதாக மனதில் பதியும். உதாரணத்திற்கு சோலார் சக்தி பற்றி பாடமாக படிப்பது மட்டுமில்லாமல், அது சம்பந்தமாக பிராஜக்ட்டும் செய்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமான பொருட்களை உருவாக்கும் போது அவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்’’ என்றவர், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

‘‘கல்வி அவசியம்தான். அதே சமயம் எந்த சூழலையும் எதிர்கொண்டு அவர்கள் வாழ்க்கையினை வாழ தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் சுற்றுப்புறச்சூழல் குறித்து விழிப்புணர்வு வேண்டும். உதாரணத்திற்கு கழிவு மேலாண்மை. பாடங்கள் நடத்தப்பட்டாலும், அதை செயல்முறையில் புரிந்துகொள்ள பிராஜக்ட்கள் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கானது என்றாலும், அதனை தவிர்க்க முடியாது. எளிதில் மக்காது.

அதனை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு அழகான ஒரு குப்பை கூடையினை உருவாக்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு சேராமலும், அதனை மேலும் பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியும் என்பதை புரிய வைப்போம். இது மட்டுமில்லாமல் நம் அன்றாட வாழ்க்கையில் இதனை பின்பற்றும் முறைகளை கல்வி வாயிலாக சொல்லிக் கொடுக்கிறோம். மின்சார கட்டணம் அதிகமாகிவிட்ட காரணத்தால், அதனை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதை கற்றுக்கொள்ளும் குழந்தைகள், வீட்டிலும் அதன் அவசியத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் விவசாயம் குறித்த வகுப்பு உள்ளது. பள்ளி வளாகத்தில் சிறிய தோட்டம் அமைத்து அதனை மாணவர்கள்தான் பராமரித்து வருகிறார்கள். விவசாயத்தில் அனுபவம் கொண்டவர்கள் மாணவர்களுக்கு விவசாயம் குறித்து பாடம் எடுப்பார்கள். அதன் மூலம் வீட்டில் தோட்டம் அமைக்கும் முறையையும் கற்றுக்கொள்வார்கள். இயற்கை விவசாயத்தினால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் மாற்றங்களையும் புரிந்துகொள்வார்கள்.

பாடங்களைப் பொறுத்தவரை மற்ற பள்ளிகளில் பின்பற்றக்கூடிய கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மட்டுமில்லாமல், ஆர்ட்ஸ், டிசைனிங், டிஜிட்டல் டிசைனிங் போன்ற பாடங்களும் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். கணினியில் அவர்கள் தேர்வினை எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். அடுத்து டிப்ளமா படிப்பிற்கு அவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது, மெக்கெட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு படிக்க இருந்தால், அதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் முக்கிய பாடமாக எடுக்கலாம். வேதியியலை அடிப்படை நிலையில் தேர்வு செய்துகொள்ளலாம்.

அதேபோல் பிசினஸ் மேனேஜ்மென்ட் தேர்வு செய்ய விரும்பினால், அதற்கான முக்கிய பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். பொதுத் தேர்வில் இவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கல்லூரியின் சேர்க்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என்பதால், அவர்கள் பொறியியல் மட்டுமல்லாமல், கலை கல்லூரிகளிலும் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். தற்போது டிப்ளமோவில் உள்ள டிசைனிங் படிப்பிற்கு ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறோம். மேலும் AI மற்றும் ரோபோடிக்ஸ் பாடங்களையும் அதற்கான ஆய்வுக்கூடங்களுடன் அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் சம்ஹிதா.

சிவகுமார், கணக்காளர் மற்றும் தோட்டக்கலை ஆலோசகர்

‘‘பள்ளியில் தோட்டக்கலையை ஒரு பாடமாக அமைக்க திட்டமிட்ட பிறகு, முதல் வேலையாக அதற்கான நிலத்தினை இயற்கை வளமா மாற்றி அமைத்தோம். விவசாயம் செய்ய இருக்கும் இடத்தில் அதற்கான புல்லினை வளர்த்து, அதை உழுதோம். புல் மண்ணோடு கலந்து அதுவே ஒரு உரமாக மாறியது. மேலும் அந்த நிலமும் ரசாயனமற்ற நிலமானது. அதன் பிறகுதான் அதில் விவசாயம் செய்ய துவங்கினோம். இங்கு கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், பாவக்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகள் மட்டுமில்லாமல் கேழ்வரகும் பயிர் செய்கிறோம். தோட்டத்தினை பராமரிக்க விவசாயி ஒருவரை நியமித்திருக்கிறோம்.

அவர் மாணவர்களுக்கு எவ்வாறு பயிரிட வேண்டும் என்பதை சொல்லித்தருவார். மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படும். அதில் அவர்கள் காய்கறிகளை பயிர் செய்வது மட்டுமில்லாமல் அதனை பராமரிக்கவும் வேண்டும். பயிர்களின் வளத்திற்கு பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை நாங்களே தயாரிக்கிறோம். பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாம் இடிச்சு அதன் சாற்றை தெளிப்போம்.

இங்கு விளையும் காய்கறிகளை நாங்க மாணவர்களுக்கு மதிய உணவாக சமைத்துக் கொடுக்கிறோம். இதன் மூலம் கொடி, கிழங்கு வகைகள் என்ன, எவ்வாறு வளர்கிறது என்பதை பாடங்களில் படிப்பது மட்டுமில்லாமல் நேரடியாக பயிர் செய்வதன் மூலம் தெரிந்துகொள்வார்கள். மண் வளத்தினை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.’’

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post இயற்கை வளத்தை பாதுகாக்க மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...