விஜிபி உலக தமிழ்சங்கத்தின் 31ம் ஆண்டு விழா: சாதனையாளர்களுக்கு விருது

சென்னை: விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் 31ம் ஆண்டு விழா சென்னை அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விஜிபி உலகத்தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை வகித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் 31ம் ஆண்டு விழா மலரை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியிட, முதல் பிரதியை நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், மல்லை தமிழ்ச்சங்க தலைவர் மல்லை சத்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பல்வேறு துறைகளை சேர்ந்த ‘சந்திரயான்-3’ புகழ் ‘இஸ்ரோ’ டாக்டர் வீரமுத்துவேல், வணிகச்செம்மல் நல்லிகுப்புசாமி செட்டியார், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் ஆகியோருக்கு, விஜிபி உலகத்தமிழ்ச் சங்க நிறுவனரும் தலைவருமான வி.ஜி.சந்தோசம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி சிறப்பித்தார். வி.ஜி.சந்தோசம் பேசுகையில், ”கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவி, திருக்குறள் மாநாடுகள் நடத்தியுள்ளோம். பல்வேறு துறையை சேர்ந்த அறிஞர்களுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை நிறுவுவதை தலையாய பணியாக செய்து வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில், உலகமெங்கும் 160க்கும் மேற்பட்ட சிலைகளை நிறுவி வந்துள்ளதுடன் 21 பன்னாட்டு தமிழ் மாநாடுகளையும் நடத்தி பெருமை சேர்த்த விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பணிகள் மென்மேலும் தொடர வி.ஜி.சந்தோசம், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்றுள்ள விருதாளர்களையும் வாழ்த்தி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்” என்றார். விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள், சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் துணை தலைவர் விஜிபி ரவிதாஸ், செயலாளர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் அயல்நாடுகளில் இருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

The post விஜிபி உலக தமிழ்சங்கத்தின் 31ம் ஆண்டு விழா: சாதனையாளர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: