குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சாமியார்: பாஜவில் இருப்பதாக மிரட்டல்

ஈரோடு: குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சாமியாரை தட்டிக்கேட்டால், தான் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊராட்சிக் கோட்டை கிளைத் தலைவர் ஆர்.பிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூயிருப்பதாவது: எனது மனைவி சூர்யா, தொட்டிபாளையம் ஊராட்சி வார்டு கவுன்சிலராக உள்ளார். அவருக்கு உதவியாக நான் கடந்த 17-2-2024 அன்று, ஊராட்சி தலைவருடன் எங்கள் வார்டு பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது, அப்பகுதியில் சாமியார் ஒருவர் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு அவர், மிகவும் அநாகரிகமாகப் பேசியதுடன், எனக்கு மிரட்டலும் விடுத்தார். மேலும் கோகுல கிருஷ்ணன் என்பவரின் குழந்தைகளை அந்தச் சாமியார் சூடு வைப்பது, செருப்புக் காலால் உதைப்பது, பெல்ட்டால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். அப்பகுதியினர் இது குறித்து கேட்டபோது, அந்தச் சாமியார் பாஜவிலும், அவரது மனைவி ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் பொறுப்பில் இருப்பதாகவும், குழந்தைகளை நல் வழிப்படுத்தவே அவர்களை அடிப்பதாகவும் அந்தச் சாமியாரும், அவரது மனைவியும் கூறியுள்ளனர்.

மேலும் அங்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறும் போலி சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சாமியார்: பாஜவில் இருப்பதாக மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: