×

மேம்பால தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து 7 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

கடலூர், மார்ச் 3: மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி டிப்பர் லாரி சாய்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். மேலும் அப்பகுதியில் சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து வடலூருக்கு ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை கடலூர் அண்ணா மேம்பாலம் தரை காத்த காளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி பலத்த சத்தத்துடன் சாய்ந்தது. அப்போது அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று பார்த்தனர். லும் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடுப்பு கட்டையில் மோதி சாய்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக கெடிலம் ஆற்றில் விழவில்லை. மேலும் சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் அண்ணா மேம்பாலத்தில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குறைவாக இருந்ததால் பெரிய விபத்து ஏதும் ஏற்படவில்லை. அதிகாலை நேரத்தில் லாரி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான லாரி அண்ணா மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி சாய்ந்ததால், அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அண்ணா மேம்பாலத்தில் சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

The post மேம்பால தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து 7 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Chennai ,Vadalur ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை